தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 16, 2017

ப.க.பு.மொ.4.....பொற்கைப் பாண்டியன்

பாண்டிய மன்னன் வழக்கம் போல் இரவுக்காவலின் பொருட்டு வீதி வலம் வந்து கொண்டிருந்தான்.

அப்போது ஒரு வீட்டிலிருந்து கேட்ட குரல்கள் அவன் கவனத்தை ஈர்த்தன.

அந்த வீட்டுத் தலைவன் வியாபார நிமித்தம் வெளியூர் செல்வதை மனைவியிடம் சொல்ல அவள் திருடர் பயம் இருக்கிறதே என்று கவலைப்பட,அவன் பாண்டியனின் செங்கோல் காக்கும் என்றுசொன்னான்.

மன்னன், மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக மகிழ்ந்து அந்த வீதியை தினம் இரவில் காக்க முடிவு செய்தான்.

சில நாட்கள் சென்றன.வழக்கம் போல் வீதி வலம் வருகையில் அந்தவீட்டிலிருந்து பேச்சுக் குரல் கேட்டது.மன்னன் ஐயமுற்று வீட்டுக்கதவைத் தட்டியபின்தான் உணர்ந்தான்,கேட்ட,கேட்கும் குரல் வீட்டுத்தலைவனுடையது என்று.தான் தட்டியது அவனுக்கு ஐயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால்,அத் தெருவில் இருந்த அனைத்து வீடுகளின் கதவையும் தட்டிச் சென்றான் மன்னன்.

மறு நாள்...

அரசவையில் அமைச்சர்,பிரதானிகளுடன் அமர்ந்திருந்தான் பாண்டியன்.அப்போது அந்த வீதி மக்கள் எல்லோரும் வந்து முதல் நாள்யாரோ கதவைத் தட்டிய செய்தியைச் சொல்லி முறையிட்டனர்.

மன்னன் சொன்னான்”அவனைப் பிடித்து விடுவேன் விரைவில்.என்ன தண்டனை என்றுநீங்கள் சொல்லுங்கள்”

அவர்கள் சொன்னார்கள்”அவன் கையை வெட்ட வேண்டும்”

நிகழ்பவற்றைக் கவனித்து வந்தார் அமைச்சர்.அரசனின் முகமும் அவன் பேச்சும் அவருக்கு மன்னன் இதில் தொடர்புடையவனாக இருப்பான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தன

ஆம்.அந்தக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்!

அமைச்சர் எழுந்தார்”பொறுங்கள் மன்னா.எல்லார் வீட்டுக் கதவும் தட்டப்பட்டது எனில் எதோ காரணம் இருக்க வேண்டும்.எனவே தட்டியவன் பிடி பட்டவுடன்,காரணத்தை அறிந்து,அதன்பின் அதற்கேற்பவே தண்டனை வழங்க வேண்டும்.அவ்வாறின்றி தண்டனை வழங்கலாகாது” என்று சொல்லி மக்களிடமும் கேட்க அவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அமைச்சர் மன்னனிடம் “மன்னா!குற்றவாளியை நீங்கள் அறிவீர்கள் எனில்,விரைவில் வரச் செய்து விசாரிக்க வேண்டும்”.

“மன்னன் எழுந்தான்.ஆசனம் விட்டுக் கீழே வந்தான்”அமைச்சரே,பிரதானிகளே,குடி மக்களே நானே குற்றவாளி”என்றான். அமைச்சர் விவரம் கேட்க நடந்ததை எடுத்துரைத்தான்.

அமைச்சர் மக்களைக்கேட்டார். மக்கள் சொன்னார்கள் மன்னன் செய்தது குற்றமல்ல என்று. ஆனால்,மன்னன் தன் அவசரச் செயலுக்குத் தான் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என சொன்னான்.

அமைச்சர் சொன்னார் ”மன்னா!உங்கள் செயல் அச்சத்தையும் கலக்கத்தையும் அம்மக்களுக்கு அளித்தது என்பது உண்மை.எனவே அவர்களுக்கு அதற்காக ஈடு தர வேண்டும்.நீங்கள் அவசரப்பட்டதால் ஏற்பட்ட இக்குழப்பத்துக்குத் தண்டனை,அந்த வீதி வீடு ஒவ்வொன்றுக்கும் ஒரு பொற்கை செய்து மன்னர் வழங்க வேண்டும்”

மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

“பொற்கை அளித்தபாண்டியன்,பொற்கைப் பாண்டியன் வாழ்க எனக் குரல் எழுப்பினர்.

டிஸ்கி:எல்லா வீட்டுக் கதவையும் தட்டினான் என்றால் ஒரு வீட்டிலிருந்து கூடவா வெளியே வந்து பார்க்கவில்லை?அவ்வாறு ஒரு வீட்டிலிருந்து பார்த்திருந்தாலும் ,அடுத்த வீடுகளில் தட்டுபவனைப் பார்த்திருக்கலாமே.?பாண்டியன் ஆட்சியில் இரவு வெளி வர அவ்வளவு அச்சமா மக்களுக்கு...?

18 கருத்துகள்:

  1. உங்க டிஸ்கிதான் குழப்புது. தூங்கிக்கிட்டிருக்கும்போது மனைவி எழுப்பினாலே என்னன்னு கேட்க சோம்பேறித்தனம் இருக்கும். யாரு வீட்டை விட்டு வெளியே போய் பார்ப்பார்கள்.

    இதை வேறுமாதிரிப் பார்க்கலாம். பாண்டியன் ஆட்சியில் யாரும் சோம்பித்திரியாமல் பகலெல்லாம் வேலை செய்ததால், இரவு நன்கு அயர்ந்து தூங்கிவிட்டனர். கதவு தட்டிய சத்தம் கேட்டது மனைவியாக இருக்கலாம் அல்லவா?

    அப்போவே, காசைக் கொடுத்து (பொற்கை) வாயை அடைக்கும் வழக்கம் மதுரைல இருந்ததுன்னு சொல்றீங்க. அப்படீன்னா, திருமங்கலம் நிகழ்வு முதலானது அல்ல போலிருக்கு (நீங்க சொல்றதைப் பார்த்தால்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே......?!
      நன்றி நெல்லைத் தமிழன்

      நீக்கு
  2. அதானே...? முடிவில் சிந்திக்க வேண்டிய கேள்வி...!

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு கதை. நயம்பட தங்கள் பாணியில் சொல்லியுள்ளது மேலும் அழகோ அழகு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு
  4. கேள்வியில் நியாயம் இருக்கிறது.
    காலையில் இருந்தே இந்த பதிவு கதவை தட்டி தட்டி சென்றதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் பிரச்சினை.சரியாகும் வரை கதவு தட்டல்!
      நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  5. தன் தவறுக்கு வருந்தி கையை வெட்டிக் கொண்டு ,அதற்கு பதிலாக பொன்னாலான கையை மாட்டிக் கொண்டதால் பொற்கைப் பாண்டியன் ஆனான் என்பது கதை !
    இன்றைக்கு ஓசிக்கு அலையும் மக்களைப் பார்த்தால் உங்களின் உல்டா கதை பொருத்தமே :)

    பதிலளிநீக்கு
  6. // ஆம்.அந்தக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்!//

    தற்கால நிலையை ஒப்பிட்டு உண்மையை பிட்டுப்பிட்டு வைத்துவிட்டீர்கள்!

    // அந்த வீதி வீடு ஒவ்வொன்றுக்கும் ஒரு பொற்கை செய்து மன்னர் வழங்க வேண்டும்”//

    யாருமே யோசிக்காத நல்ல யோசனை. இதுபோல் அன்று நடந்திருந்தால் பாண்டியன் கையை இழந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

    புதிய சிந்தனையோடு கூடிய பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  7. செய்த தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம் இப்போதய ஆட்சியாளர்களுக்கு உண்டா?? டிஸ்கி அருமை ஐயா..

    பதிலளிநீக்கு
  8. பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...! என்ற பாட்டு அப்போது உண்டானதுதானோ?

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொற்கையைப் பெற்றுக் கொண்டு பாடிய பாட்டு அது!
      நன்றி சார்

      நீக்கு
  9. //ஆம்.. அந்தக் காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்//

    ஹா... ஹா... ஹா...

    மக்கள் வெளியே வந்து பார்க்குமுன் மன்னன் சென்று விடுகிறான்! எழுந்து வரவேண்டாமோ!! மேலும் பக்கத்து வீட்டில் இரேவில் யாராவது ஆபத்து என்று அலறினாள் நம் வீட்டுத் தாழ்ப்பாள் சரியாகப் போட்டிருக்கிறோமா என்று பார்ப்பது தொன்றுதொட்டு வரும் பாதுகாப்புணர்ச்சி!!!

    தம +1

    பதிலளிநீக்கு