தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 30, 2014

தாம்பத்திய உறவில் எது முக்கியம்?

தாம்பத்திய உறவில் முக்கியமானது எது?
உடனே நீங்கள் சொல்வது,உறவு என்ற சொல்லே அதைச் சொல்லி விடுகிறதே என்றா?
படுக்கையைப் பகிர்ந்து கொள்வது மட்டும் தாம்பத்தியமாகி விடுமா?
இல்லறம் இனிமையானதாகி விடுமா?
இந்த உறவில் மிக முக்கியம்,புரிதல்,விட்டுக் கொடுத்தல்,அனைத்தையும் பகிர்தல்.
இன்பம்- துன்பம்,எழுச்சி-வீழ்ச்சி,வரவு –செலவு என்று எல்லாம் பகிர்ந்து கொள்ளுதல்.
இதைச் சொல்கையில் சமீபத்தில் நான் படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்ட கதைதான்.
ஆனால் அதையும் மீறி அதனுள் இருக்கும் அந்த உன்னதமான தாம்பத்திய உறவின் அழுத்ததைப் பாருங்கள்.
இதோ கதை--------
ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்;
கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மேலும் இருக்கலாம்.
ஒரு மேசையின் முன் அமர்ந்தனர்.
பணியாளிடம் இரண்டு இட்லி,ஒரு வடையுடன் இன்னொரு தட்டும் கொண்டு வரச் சொன்னார்கள்.
இட்லி வடையும் காலித்தட்டும் வந்தன.
கணவன் ஒரு இட்லியையும்,வடையில் பாதியையும் காலித்தட்டில் வைத்து,சாம்பார்,
சட்னியிலும் பாதி ஊற்றி,மனைவி முன் வைத்து விட்டுச் சாப்பிடத்தொடங்கினான்.
அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறே மனைவி அமர்ந்திருந்தாள்,அவ்வப்போது தண்ணீரைக் குடித்தவாறு.
ஓட்டலில்  இருந்த மற்றவர்கள்,இவர்கள் வசதியற்றவர்கள்,எனவே கொஞ்சமாக  வாங்கிப் பகிர்ந்துகொள்கின்றனர் என எண்ணினர்.
ஒரு இளைஞன் அவர்களிடம் வந்து,இன்னொரு தட்டு இட்லி வடை தான் வாங்கித்தருவதாகக் கூற அவர்கள் மறுத்து விட்டனர் ,தாங்கள் எப்போதுமே பகிர்வதே பழக்கம் எனக் கூறி.
கணவன் சாப்பிட்டு முடித்தான்.
கை கழுவப்போனான். 
இளைஞன் மீண்டும் வந்து மனைவியிடம் கேட்டான்”ஏன் நீங்கள் சாப்பிடவேயில்ல?”
அவள் கூறினாள்”பல் செட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!!”
பகிர்தலின் உச்சம்!!!
 
(நன்றி:குட்டன்)

14 கருத்துகள்:

  1. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதம் 7 ஆம் நாள் திரு குட்டன் அவர்களுடைய பதிவில் இந்த கதைக்கு பின்னூட்டமிட்டதை ‘நினைத்துப்பார்க்கிறேன்.’ குட்டிக்கதையே ஆனாலும் இது சொல்லாமல் சொல்லி விளங்க வைத்தது அதிகம் என்று அன்று சொன்னேன். இன்றும் அதையே சொல்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது

    பதிலளிநீக்கு
  3. சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். இருந்தாலும் சொல்கிறேன். முன்னமே படித்திருந்த இந்தக் கதையை நேற்று இரவுதான் என் மனைவிக்கு சொன்னேன். இன்று உங்கள் பதிவை படிக்கத் தொடங்கியதுமே எனக்கு கதை தெரிந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  4. இதிலும் உங்களின் ஆணாதிக்க மனோ பாவமே மேலோங்கி நிற்கிறது. அந்த மனைவி முதலில் சாப்பிட்டு பின்னர் அந்த கணவன் சாப்பிட்டால் ஆகாதாமா? பெண்ணீய விடுதலை காரர்கள் கேட்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் தொடக்க வரியைக் கவனியுங்கள் கக்கு.” வயதான தம்பதி”கணவனுக்கு வயது 85,மனைவிக்கு 80!அதாவது இந்தப் பெண்ணியத்துக்கெல்லாம் முந்தியவர்கள்.கணவனே மனைவியைச் சாப்பிடச் சொல்லியிருந்தாலும் அவள் ஒப்புக் கொண்டிருக்க மாட்டாள்;ஏனென்றல் கணவனில் எச்சில் இலையில் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவள்.சரியா?!
      இன்னொன்று இது குட்டனின் படைப்பு.பதிவுலகில் அவரைப் பலர் குசும்புக் குட்டன் என்றழைக்கிறார்கள்!

      நீக்கு
  5. சின்னக் கதை என்றாலும் வாழ்வின் அர்த்தம் பேசும் அழகான கதை...
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  6. அருமையான கதை. பகிர்தல் - பல் செட் அளவிற்கு! :)

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்

    அருமையான கருத்தை முன்வைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. இப்படி தலைப்பு வைத்த உங்கள் தைரியத்தை கண்டு வியக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  9. தாம்பத்திய உறவில்... கடைசியில் பல் செட்டு முக்கியம்!!

    பதிலளிநீக்கு
  10. ஹா.....ஹா...ஹா...

    வேறெதையோ நினைத்து வந்தால் விழும் குட்டு! தேவை பல் செட்டு!!


    பதிலளிநீக்கு
  11. பல் செட் அளவெல்லாம் பற்றி எல்லாம் கேட்டு படுத்த கூடாது.அன்பே பிரதானம் . கதை சுவாரசியமாக உள்ளது.

    பதிலளிநீக்கு