தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 25, 2011

தமிழுக்கும் அமுதென்று பேர்!

கவிதையில் ஒலி நயம் இருத்தல் அவசியம்

ஒரு கவிதையைப் படிக்கும்போதே அந்தப்பாடல் வெளிப்படுத்தும் உணர்வை,அந்தக்கவிதையின் ஒலி வெளிப்படுத்தவேண்டும்.

இங்கு நான் ஒலி என்று சொல்வது கவிதையில் பயன்படுத்தப் பட்டிருக்கும் எழுத்துக்களின் ஒலி!

இக்கலையில் கம்பன் ஒரு சக்கரவர்த்திதான்.

இராமனின் அழகில் மயங்கிய சூர்ப்பனகை,தனது சுய உருவை மாற்றி ஒரு அழகிய இள மங்கையாக வருகிறாள்.

அதைக் கம்பன் சொல்கிறான் பாருங்கள்

”பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்சையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”

அவள் நளினமாக,ஒரு மயில் வருவது போல்,அடியெடுத்து அலுங்காமல் வருகிறாள்.இதன் பொருளே நமக்குத்தேவையில்லை .படிக்கும்போதே அந்த உணர்வு ஏற்பட்டு விடுகிறது.மென்மையான ஒரு பெண் ,மெல்ல அடியெடுத்து ஒரு மயில் போல் வருவது நம் கண்ணுக்குத் தெரிகிறது.காரணம் பாடலின் ஒலி.

பஞ்சி,விஞ்சு,செஞ்செ,அஞ்சொல்,வஞ்சி , நஞ்சு,வஞ்ச என்று எல்லாமே மெல்லினம்.

ஆனாலும் கடைசியில் வைக்கிறான் குட்டு!

இவ்வளவும் இருந்தாலும் அவள் ஒரு ‘வஞ்ச மகள்’

திரும்பத் திரும்பப் படித்துப் பாருங்கள்,அந்த சுவை புரியும்.

மாறாக,குகப்படலத்தில் வரும் பாடல்கள்.

பரதன் படையுடன் வருவதைக் கண்ட குகன் கடுங்கோபமடைகிறான்.

அப்போது வரும் வார்த்தைகளை,அவற்றைச் சுமந்து வரும் பாடலின் ஒலி நயத்தைப் பாருங்கள்!

”ஆடு கொடிப்படை சாடி அறத்தவ ரேஆள
வேடு கொடுத்தது பார்எனும் இப்புகழ் மேவீரோ
நாடு கொடுத்தஎன் நாயக னுக்கிவர் நாம்ஆளும்
காடு கொடுக்கில ராகி எடுத்தது காணீரோ”

ஆடு ,வேடு ,சாடி என்று வல்லினப் பிரயோகம்!படிக்கும் போதே கோபமான குகனின் உருவம் கண் முன் வரவில்லையா.!

இதே குகன் பரதன் அருகில் வந்ததும் சொல்கிறான்-

”நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?' என்றான்.”

ஒலி மாறி விட்டது.நம்பி,தம்பி,துன்பம்,என மெல்லினம் வந்து விட்டது!குகனின் மனம் கனிந்து நிற்பது புரிகிறது!

கவியரசர் கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞர்தான்.தமிழ்த்திரையுலகுகுக் மறக்க முடியாத பாடல்களைத் தந்தவர்.நானும் அவரது ரசிகன்தான்!

ஆயினும் அவரது ஒரு பாடலில் ஒரு பெண் வர்ணிக்கப் படுவதைக் கம்பனோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்ல!

’கட்டித்தங்கம் வெட்டியெடுத்துக்
காதலென்னும் சாறு பிழிந்து
தட்டித் தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா’

இந்த வல்லினஉபயோகத்தில், பெண்ணின் நளினம்,இல்லாமல் போய் விட்டது!

ஒருவேளை இப்பாடலின் நாயகர்,காதல் காட்சிகளில் கொஞ்சம் முரட்டுத்தனமாகக்
காதலிப்பார் என்பதாலோ!

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

28 கருத்துகள்:

  1. // ஒருவேளை இப்பாடலின் நாயகர்,காதல் காட்சிகளில் கொஞ்சம் முரட்டுத்தனமாகக்
    காதலிப்பார் என்பதாலோ!//

    சிரிக்காமல் முடியவில்லை.
    இவர் காதல் காட்சிகளில் பண்ணும் ரகளை ரொம்பவே பிரசித்தம். நயமான அலசல்.
    அதுசரி, இப்போ எதுக்கு மஞ்சள் குளிகிறீங்க?! :))))

    பதிலளிநீக்கு
  2. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //சிரிக்காமல் முடியவில்லை.
    இவர் காதல் காட்சிகளில் பண்ணும் ரகளை ரொம்பவே பிரசித்தம். நயமான அலசல்.
    அதுசரி, இப்போ எதுக்கு மஞ்சள் குளிகிறீங்க?! :))))//

    கடைசி வரி புரியவில்லை!போன பதிவைக் குறிப்பிடுகிறீர்களா? நகைச்சுவைதான்!
    நன்றி மாணிக்கம்!

    பதிலளிநீக்கு
  3. கவிதை அணு அணுவாக ரசித்திருக்கிறீர்னள்...

    கம்பன் கண்ணதாசன் வைரமுத்து வாலி இவர்களின் கவிதைகள் யதார்த்தமும், சுவையும் மிகுந்து காணப்படும்...

    அறுசுவையும் கவிதையில் இருக்கும் போது.. அவை காலத்தால் அழியாமல் இருக்கும்..

    என் கவிதைகளைக்கூட இப்படித்தான் படைக்க முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. தமிழ் தங்களிடம் விளையாடியிருக்கிறது...

    நல்ல அலசல்...

    பதிலளிநீக்கு
  5. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // கவிதை அணு அணுவாக ரசித்திருக்கிறீர்னள்...

    கம்பன் கண்ணதாசன் வைரமுத்து வாலி இவர்களின் கவிதைகள் யதார்த்தமும், சுவையும் மிகுந்து காணப்படும்...

    அறுசுவையும் கவிதையில் இருக்கும் போது.. அவை காலத்தால் அழியாமல் இருக்கும்..

    என் கவிதைகளைக்கூட இப்படித்தான் படைக்க முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறேன்..//
    நன்றி சௌந்தர்.
    முயற்சி திருவினையாக்கும்; நன்றாகவே உள்ளன உங்கள் படைப்புகள்!

    பதிலளிநீக்கு
  6. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    // தமிழ் தங்களிடம் விளையாடியிருக்கிறது...

    நல்ல அலசல்...//
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  7. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    // தமிழ்மணம் ஓட்டு பட்டைய கானோம்...//
    இப்போது வந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  8. அருமையான பாடல்கள்....

    இதோடு குகப்படலத்தில் ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ..'வையும் சேர்த்திருக்கலாம்...

    ஓசை மற்றும் சந்தத்தை வைத்தே பாடலின்,கதைச் சூழலை முதன்முதலில் தமிழ்ச் சூழலில் சொன்னவன் கம்பன்..

    அதனால்தான் அவன் கவிச்சக்ரவர்த்தி!

    பதிலளிநீக்கு
  9. தமிழ் தாயே வணக்கம்

    பதிலளிநீக்கு
  10. பஞ்சி,விஞ்சு,செஞ்செ,அஞ்சொல்,வஞ்சி , நஞ்சு,வஞ்ச என்று எல்லாமே மெல்லினம்.//
    என்ன ஒரு அருமையான தமிழ் எழுத்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. ஹே ஹே ஹே ஹே ஹே நக்கலை பாருங்க ஹா ஹா ஹா....
    தமிழ் என்றும் தேன்'தான்....

    பதிலளிநீக்கு
  12. அறிவன்#11802717200764379909 கூறியது...

    //அருமையான பாடல்கள்....

    இதோடு குகப்படலத்தில் ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ..'வையும் சேர்த்திருக்கலாம்...

    ஓசை மற்றும் சந்தத்தை வைத்தே பாடலின்,கதைச் சூழலை முதன்முதலில் தமிழ்ச் சூழலில் சொன்னவன் கம்பன்..

    அதனால்தான் அவன் கவிச்சக்ரவர்த்தி!//

    சேர்த்திருக்கலாம்!ஆனால் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு மாதிரி போதும் என நினைத்தேன்!
    வருகைக்கு நன்றி அறிவன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //தமிழ் தாயே வணக்கம்//
    உங்களுடன் சேர்ந்து நானும் வனங்குகிறேன்!

    பதிலளிநீக்கு
  14. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //பஞ்சி,விஞ்சு,செஞ்செ,அஞ்சொல்,வஞ்சி , நஞ்சு,வஞ்ச என்று எல்லாமே மெல்லினம்.//
    //என்ன ஒரு அருமையான தமிழ் எழுத்துக்கள்//

    உணர்வுக்குச் சரியாக அவற்றை உபயோகித்த கவிஞனின் திறம் என்னே!
    நன்றி ,சதீஷ்!

    பதிலளிநீக்கு
  15. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // ஹே ஹே ஹே ஹே ஹே நக்கலை பாருங்க ஹா ஹா ஹா....
    தமிழ் என்றும் தேன்'தான்....//

    உண்மை மனோ!தேன் உண்ணும் வண்டு நாமெல்லாம்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  16. தமிழ் அமுதம் தன்னிகரில்லா விளக்கம். சூப்பர் சார்.

    பதிலளிநீக்கு
  17. FOOD கூறியது...

    //தமிழ் அமுதம் தன்னிகரில்லா விளக்கம். சூப்பர் சார்.//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  18. உண்மையிலேயே தமிழுக்கு அமுது என்ற பெயர் பொருத்தம்தான்.

    பதிலளிநீக்கு
  19. இந்த வல்லினஉபயோகத்தில், பெண்ணின் நளினம்,இல்லாமல் போய் விட்டது!


    ......ஆஹா..... எந்த அளவுக்கு தமிழ் அமுதின் சுவை தெரிந்து ரசிக்கிறீர்கள், ஆராய்ந்து கவனிக்கிறீர்கள் என்று தெரிகிறது. :-)

    பதிலளிநீக்கு
  20. பாலா சொன்னது…

    //உண்மையிலேயே தமிழுக்கு அமுது என்ற பெயர் பொருத்தம்தான்.//

    பருகுவோம் தமிழமுதை!
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  21. Chitra கூறியது...

    //......ஆஹா..... எந்த அளவுக்கு தமிழ் அமுதின் சுவை தெரிந்து ரசிக்கிறீர்கள், ஆராய்ந்து கவனிக்கிறீர்கள் என்று தெரிகிறது. :-)//
    சுவைக்குந்தொறும்,இனிமை கூடும் அமுதல்லவா,தமிழ்!
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  22. கம்பனின் கவிதையை படிக்கும்போதே அவர் விளக்கும் காட்சி மனக்கண் முன் தெரியும்.அதனால்தான் அதை கம்பச்சித்திரம் எனவும் சொல்வதுண்டு. கம்பனின் கவிநயத்தை மிக அழகாக விளக்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வே.நடனசபாபதி கூறியது...

    //கம்பனின் கவிதையை படிக்கும்போதே அவர் விளக்கும் காட்சி மனக்கண் முன் தெரியும். அதனால் தான் அதை கம்பச்சித்திரம் எனவும் சொல்வதுண்டு. கம்பனின் கவிநயத்தை மிக அழகாக விளக்கியதற்கு நன்றி.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  24. சுவாரசியம்.
    என்னோட ரெண்டு வரிய இதுல சேத்துடறேன்...
    சிலை காலத்தை வென்று நிற்கக் கூடியது. பொன்னுக்கு காலமே கிடையாது (என்பார்கள்). பொன்னை வெட்டி கல்லை வெட்டிப் பாருங்களேன் - கல்லால் வெட்ட வேண்டியதைப் பஞ்சால் வெட்ட முடியாதே?

    அதனால் தான் வெட்டி எடுத்த வல்லினத்தில் சாறு பிழிந்த இடையினம். ஆக, ஆவரேஜ் மெல்லினம்!

    (கண்ணதாசன் வரிக்கு எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது!)

    பதிலளிநீக்கு
  25. இன்பத் தேன் வந்த பாயுது காதினிலே

    பதிலளிநீக்கு
  26. அப்பாதுரை கூறியது...

    //சுவாரசியம்.
    என்னோட ரெண்டு வரிய இதுல சேத்துடறேன்...
    சிலை காலத்தை வென்று நிற்கக் கூடியது. பொன்னுக்கு காலமே கிடையாது (என்பார்கள்). பொன்னை வெட்டி கல்லை வெட்டிப் பாருங்களேன் - கல்லால் வெட்ட வேண்டியதைப் பஞ்சால் வெட்ட முடியாதே?

    அதனால் தான் வெட்டி எடுத்த வல்லினத்தில் சாறு பிழிந்த இடையினம். ஆக, ஆவரேஜ் மெல்லினம்!

    (கண்ணதாசன் வரிக்கு எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது!)//
    நன்றாகவே சமாளிக்கிறீங்க!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  27. சிவகுமாரன் கூறியது...

    //இன்பத் தேன் வந்த பாயுது காதினிலே//
    நன்றி சிவகுமாரன்!

    பதிலளிநீக்கு