தொடரும் தோழர்கள்

வெள்ளி, மே 18, 2012

ஒரு வரலாறு(ஒரு தாயின் கதை)-மீண்டும் தொடர்கிறது

மார்ச் 2009 இல்  ஒரு வரலாறு என்ற தொடரை ஆரம்பித்தேன்.
அவ்வப்போது சில இடுகைகள் மட்டுமே எழுதி வந்தேன்.
ஆனால் ஏனோ தொடர்ந்து எழுத முடியாமல் போய் விட்டது.


அதற்குக் குறிப்பிடும்படியான காரணங்கள் எதுவுமில்லை.


இதைப் பற்றி என் வலைச்சர அறிமுகப்பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.


இப்போது மீண்டும் அத்தொடரைத் தொடங்க விரும்பு கிறேன்.


பழைய இடுகைகளை மீள் பதிவாகக்கொடுத்துவிட்டு,
அதன்பின்,தொடர்வது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.


மீள் பதிவு இடுகைகள் முடிந்த பின் வாரம் ஒரு பகுதி யாவது வரலாற்றில் எழுத உத்தேசம்.


இறை அருள் வேண்டும்.


மீள் பதிவுகளுக்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
-----------------------------------------------------------------------------

ஒரு வரலாறு

76 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படிப்பதற்காகச் சென்னை சென்று ,படிப்பைத் தொடர முடியாமல், 14 வயதில், தன்னை விட 14 வயது பெரியவரான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கு மணமுடித்து வைக்கப்பட்டு, 15 வயதில் முதல் குழந்தைக்கும் 26 வயதில் *ஆறாவது குழந்தைக்கும்  தாயாகி, 32ஆவது வயதில் கணவனை இழந்து, நிர்க்கதியாகிப் ,பெற்றோராலும் சரியாக நடத்தப்படாமல், குழந்தைகளுடன் தனியாக வாழத் தொடங்கி, எதிர் காலமே ஒரு பெரிய கேள்விக் குறியாகிப் போன ஒரு பெண்ணின் நிலையை யோசித்துப்பாருங்கள்.




அந்த நிலையில் குழந்தைகளை வளர்த்து பெரியவர் களாக்கி, அவர்களின் கல்வி, திருமணம் போன்றவற்றைக் குறைவின்றி நிறைவேற்றி அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலை அடைவதற்கு அந்தப்பெண் என்ன பாடு பட்டிருக்க வேண்டும்?



அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இது. இப்போது,90 வயதிலும்,(இப்போது 93)சமையல் உள்பட வீட்டு வேலை களைத் தானே செய்து வரும்,மன உறுதி கொண்ட பெண்மணி. சிறிய இன்னல்கள் வந்தாலும் சோர்ந்து போகும் பலருக்கு இந்தக்கதை ஊக்கம் தருவதாக அமையும்.(இப்போது நடமாடுவதே சிரமமாக இருக்கிறது)



இக்கதையை அப்பெண்மணியின் அனுமதியின்றியே எழுதத்துவங்குகிறேன்.ஆனால் அவர்கள் ஆசி எனக்கு எப்போதும் உண்டு.அதுவே என் பலம். என் வரம்.என் வெற்றிக்கு ஆதாரம்.


இந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.
------------------------------------------------------------------------



(இது ஒரு உண்மை சரிதம்.ஆயினும், முக்கியமான மனிதர்களின் பெயரும்,சில இடங்களின் பெயரும் மாற்றப் பட்டிருக்கின்றன.)

அத்தியாயம்-1
-------------
பயணம் ஆரம்பம் என்று சொன்னேனல்லவா?ஒரு பயணத்திலேயே தொடங்குகிறேன் இந்த வரலாற்றை.

 

அந்தத் தொடர் வண்டி புகையைக் கக்கிக்கொண்டு மதராஸ் எழும்பூர் நிலையத்தை விட்டுப் புறப்பட்டது. ஆம்.அப்போது மதராஸ்தான்.அப்போது புகை விட்டுக் கொண்டுதான் ரயில் செல்லும்.டீசல் எஞ்சின் எல்லாம் கிடையாது.சன்னல் பக்கம் அமர்ந்திருந்தால் கண்களில் கரி விழுவது நிச்சயம்.பயணம் முடிந்து இறங்கும்போது சட்டை கருப்பாக இருப்பது உறுதி. 




ஆனால் இப்போது போல் கூட்டமெல்லாம் கிடையாது. இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு செய்தாலும் காத்தி ருப்புப்  பட்டியலில் இருக்கும் நிலை கிடையாது.ஆம்;அது 1950 ஆம் ஆண்டு,ஜூன் மாதம்.இப்போது எல்லோரும் எங்காவது போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்.அநேகர் தேவையே இல்லாது பயணித்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் பல நேரம் எழுகிறது. இன்றைய மக்கள் தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் அல்லவா?சரி விஷயத்துக்கு வருகிறேன்.

 

அந்த ரயிலில் பயணம் தொடங்கிய பலரில்,ஒரு குடும்பம். சமீபத்தில் அக்குடும்பத் தலைவர் இறந்து விட்டிருந்தார். கணவனை இழந்த,31 வயதே நிறைந்த,32 நடக்கும் பெண்; அவளது குழந்தைகள்-முதல் பையன்,ராமசாமி(வயது 16), அடுத்த பெண்,ரமணி(13), அடுத்தபெண்,ரமா(11), அடுத்த பெண்,மகா(7), கடைக்குட்டி  சுந்தர்(5).


அந்தக் கடைசிப் பையனைத்தவிர,மற்ற அனைவரும் அந்த இழப்பின் தாக்கத்தில் இருந்தனர். அப்பயணத்தை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியவன் அந்த சிறுவன் ஒருவன் தான்.மற்ற அனவருக்கும் அந்தப்பயணம் ஒரு தெளிவில் லாத  எதிர்காலத்தின் தொடக்கமாகவே தோன்றியது. ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள்.

அந்தத்தாய்;இந்த ஐந்து குழந்தைகளையும் எப்படி வளர்த்துப் பெரியவர்களாகி,அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை  அமைத்துக் கொடுக்கப் போகிறோம் என்பதே புரியாத தாய்.அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அடி வயிற்றில் பந்து சுருளும் தாய். பயம். எதிர்காலம் பற்றிய பயம்.முழுக்க முழுக்க வீட்டுக்குள் ளேயே முடங்கிப் போய்,கணவன் ,மாமியார், குழந்தை களைத் தவிர வேறெதையும் கருத்தில் கொள்ளாது இத்தனை ஆண்டுகளைக் கழித்து விட்ட தாய். இப்படி, நிர்க்கதியாக விட்டு விட்டுப் போய் விட்டாரே என்று எண்ணும்போதே,அழுது அழுது வறண்ட கண்களில்  மீண்டும் கண்ணீர் சுரக்கிறது. மற்றவர் பார்க்கா வண்ணம் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். அப்படியே கண்களை மூடியபடி இருக்கையில் சாய்கிறாள். அவள் மனம் மெட்ராசுக்கு அவள் வந்த காரணத்தை,அந்த ஆரம்ப நாட்களைப் பற்றி நினைக்கிறது. 



(வரலாறு தொடரும்)

* முதலில் ஆறு குழந்தைகள் எனச் சொல்லி விட்டுப் பின்னர் ஐந்து குழந்தைகள் பெயர்தானே கொடுத் திருக்கிறேன் எனக் குழம்ப வேண்டாம்.நான்காவது குழந்தை நீண்ட நாள் வாழவில்லை.
---------------------------------------

10 கருத்துகள்:

  1. அருமையான தொடர் .. தொடரட்டும் அய்யா ...

    பதிலளிநீக்கு
  2. அடுத்த பாகத்திற்கு வெய்ட்டிங் ..!

    பதிலளிநீக்கு
  3. அந்த தாயை நினைக்க வருத்தமா இருக்கு .

    பதிலளிநீக்கு
  4. அருமையான தொடர்...
    தொடருங்கள் ஐயா... தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. திரும்பவும் இந்த வரலாற்றுத் தொடரை எழுத ஆரம்பித்தமைக்கு நன்றி! அவசியம் இந்த தொடரில் வாரம் ஒரு பதிவாவது இடவேண்டும் என அன்புக் கட்டளையிடுகின்றேன். உங்களுக்கு இறை அருள் நிச்சயம் கிட்டும்.

    பதிலளிநீக்கு
  6. நேரில் காணும் போது அந்த, அன்புத் தாயின்
    திருப் பாதங்களுத் தொட்டு வணங்குவேன்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. நேரில் காணும் போது அந்ந அன்புத் தாயின்
    திருப் பாதங்களைத் தொட்டு வணங்குவேன்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  8. தொடருங்கள் தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு