தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 11, 2013

அவள் என்னை ஏமாற்றினாளா?



இது ஒரு குட்டிப் பதிவு

ஒரு சிறுவனும் சிறுமியும் விளயாடிக் கொண்டிருந்தனர்.

சிறுவனிடம் அழகான கோலிக் குண்டுகள் இருந்தன.

சிறுமியிடம் இனிய மிட்டாய்கள் இருந்தன.

சிறுவன் சொன்னான்”நீ உன்னிடம் இருக்கும் எல்லா மிட்டாய்களையும் எனக்குக் கொடுத்தால் நான் என்னிடம் இருக்கும் எல்லாக் கோலிகுண்டு          களையும் உனக்குத் தருவேன்”

சிறுமி ஒப்புக் கொண்டாள்.

சிறுவன் அவளுக்குத் தெரியாமல் மிக அழகிய கோலிக்குண்டு ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு,மீதியைக் கொடுத்தான்.

ஆனால் சிறுமி தன்னிடம் இருந்த எல்லா மிட்டாய்களையும் அவனுக்குக் கொடுத்தாள்.

அன்றிரவு சிறுமி வழக்கம் போல் நிம்மதியாக உறங்கிப் போனாள்.

ஆனால் சிறுவனோ தான் கோலியை மறைத்தது போல் அவளும் மிட்டாய்களை மறைத்திருப்பாளோ என்ற எண்ணத்திலேயே தூக்கம் இழந்தான்.

ஆம்!உறவுகளும் அப்படித்தான்.

பரஸ்பர உறவுகளில் நாம் நூறு விழுக்காடு உண்மையாக இல்லையெனில், நமக்கு மற்றவரும்  நூறு விழுக்காடு உண்மையானவர்களாக இருந்தனரா என்ற சந்தேகம் அரித்துக் கொண்டிருக்கும்.

நம்மைப் போல் அவர்களும் ஏதேனும் மறைத்திருப்பரோ என்ற எண்ணமே உறவைப் பாழ்படுத்தி விடும்.

இதைப் புரிந்து நடந்தால் உறவுகள் மேம்படும்.



திங்கள், ஜூன் 10, 2013

நமோவும் மோடியும்!



”நமோ” என்றால் என்ன?

அவசரப்படாதீர்கள்!

”ஓம் நமோ நாராயணாய” என்று சொல்கிறோம்.

அங்கு நமோ என்றால் என்ன?

நாராயணாய நம:-- நாராயணனுக்கு வணக்கம்,நமஸ்காரம் என்பதே!

ஆனால் இப்போது இந்த ’நமோ’ என்ற ஓசை காதில் விழுந்தாலே பலர் நடுங்குகிறார்கள்.

ஹிரண்யகசிபுவுக்கு “நமோ நாராயணாய” என்று சொன்னால்தான் எரிச்சல் வரும்.

ஆனால் இன்றோ  ’நமோ’ என்று சொன்னாலே  பலருக்கு எரிச்சல் வருகிறது!

புதிதாகப் பல வியாதிகள் சொல்கிறார்கள்....நமோனியா(இத்தனை நாளாக நிமோனியாதான் தெரியும்) என்று ஒரு நோய்!

நமோனிடிஸ் என்று ஒரு நோய்க் கிருமி!

இப்படிப் பல புதிய கண்டு பிடிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன!

இன்னும் என்னவெல்லாம் கண்டு பிடிப்பார்களோ?

இதை விடுங்கள்!

அந்தக்காலத் தமிழ்ப் பாடல்களில் ’மோடி’ என்ற ஒரு சொல் வரும்

“ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கெந்தன் மீதையா?”

“அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி”

இந்தச் சொல்லுக்கான சரியான பொருள் என்ன?

சண்டை?ஊடல்?குறும்பு?கோபம்?..........

தெரிந்தால் சொல்லுங்களேன்!

நமோ நம!





சனி, ஜூன் 08, 2013

காதல் கடிதத்துக்குப் பரிசு!



காதல் கடிதம் எழுதி அது காதலியின் கையில் கிடைக்காமல் ,அவள் அப்பா கையில் கிடைத்தால் அவர் கொடுப்பாரு பாருங்க ஒரு பரிசு….அம்மாடியோ!

மாறாக அவள் தங்கையும் வாலிபத்தின் வாசலில் நிற்க,கடிதம் அவளிடம் கிடைத்து,என்னை விட்டு விட்டு என் அக்காவை ஏன் காதலிக்கிறான் என்ற கோபத்தில்,விஷமத்தனம் செய்து அதனாலும் பரிசு கிடைக்கலாம்!

எனவே இயன்றவரை பேரைக் குறிக்காமல், கண்ணே,அன்பே, அமுதே,ஆருயிரே என்று எழுதினால் பிரச்சினை இல்லை.சம்பந்தப்பட்டவர்(ள்) கையில் கிடைத்தால் அவளுக்குத் தெரியும் அது அவளுக்குத்தான் என்று.மாறிப்போனாலும் பிரச்சினை இல்லை.தங்கையும் காதலிக்க (தங்கையையும் காதலிக்க ) ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது! அவள் அப்பாவிடம் என்றால் ”உங்கள் மகளுக்கு என்று ஏன் சார் நினைக்கிறீர்கள்?இது ஒரு அழகான பெண்ணுக்கு” என்று சொல்லிச் சமாளிக்கலாம்.(காதலியிடம் பின்னர் மண்டியிட்டு விடலாம்!)

ஆனாலும் இந்தக் கடிதம் எழுதுவது என்பது கொஞ்சம் சிக்கலான விசயம்தான்.அன்பைத் தெரிவிக்க ஆயிரம் வழிகள்.அதெல்லாம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனாலும் காதலிப்பவனால் சும்மா இருக்க முடியாது.கை பரபரக்கும்.மனத்தில் தோன்று வதை யெல்லாம் அவளிடம் தெரிவித்து விட வேண்டும் என்ற துடிப்பு.கடிதம் எழுதும்போது அவளையே நேரில் பார்த்து அவளிடம் சொல்வது போன்ற ஓர் உணர்வு;இவையெல்லாம் இழக்க முடியுமா? எனவே கடிதம் எழுத வேண்டியதுதான்;மாட்டிக் கொள்ளாமல் அனுப்புவது முக்கியம்.

தொடக்கத்தில் சொன்னது போல் அப்பாவிடமோ,தங்கையிடமோ பரிசு கிடைக்கலாம்! அல்லது காதலியே பரிசாகக் கிடைத்தாலும் கிடைக்கலாம்(அது அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்பது பின்னர்தான் தெரியும்.)

எப்படியோ ஏதாவது பரிசு கிடைத்தால் சரி.

பிள்ளையார்,ராமர், நாராயணர்,அப்பா(காதலியின்)வின்  அருட் பார்வை பட்டால் பரிசு நிச்சயம்!

நல்லாசிகள்!!

வெள்ளி, ஜூன் 07, 2013

பிறக்கப் போகும் குழந்தை ஆணா?பெண்ணா?--இது உங்கள் கையில்!



இது ஒரு சிறிய பதிவு!

நம் நாசியில் மூச்சு மாறி மாறி இயங்குவது உங்களுக்குத் தெரியும்.

வலது புறம் சிறிது நேரம்,இடது புறம் சிறிது நேரம் என மாறி மாறியே சுவாசம் வருகிறது.

இதை அடிப்படையாகக் கொண்டு திருமூலர்,  பிறக்கும் குழந்தையின்  பால் என்னவாக இருக்கும் எனத் தீர்மானிக்கிறார்,

புணர்ச்சியின்போது,ஆணின் மூச்சு வலப்பக்க நாசியில் (இதை சூரிய கலை என்று சொல்வார்கள்)இயங்குமானால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இடப்பக்க நாசியில் இயங்கினால்(இதைச் சந்திர கலை என்று சொல்வார்கள்)  பெண் குழந்தையாகவும் இருக்கும்!

பிராண வாயுவுடன் அபான வாயு எதித்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்!

அபூர்வமாக,இரு பக்கமும் மூச்சு இயங்கினால் குழந்தை ஆணுமின்றிப் பெண்ணுமின்றிப் போகும் .

இது திருமூலர் கூற்று,

அந்தப் பாடல்.........
”குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
 குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
 குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
 குழவி அலிஆகும்கொண்ட காலொக்கிலே” (திருமந்திரம்-482)

வியாழன், ஜூன் 06, 2013

ஆக்க பூர்வமாகச் செயல் படுங்கள்!



ஒருவர் ஒரு செயலை,நாம் செய்ய நினைக்காத ஒரு வழியில் செய்கையில்,அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையெனில்.....நமக்குக் கோபம் வருகிறது

மாறாக,ஒருவர் ஒரு செயலை நாம் செய்ய நினைக்காத ஒரு வழியில் செய்ய,அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தால்...நாம் பொறுத்துக் கொள்கிறோம்.

ஒருவரிடம் நம்மிடம் இல்லாத ஒன்று இருந்து,அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனில்....பொறாமை பிறக்கிறது.

ஒருவரிடம் நம்மிடம் இல்லாத ஒன்று இருந்து அதை நாம் ஏற்றுக் கொண்டால் நமக்கும் அதைப் போல ஒன்று அடைய உத்வேகம் பிறக்கிறது.

நம்மால் முடியாத ஒன்றை மற்றவர் செய்கையில்,நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்ல எனில் பொறாமை பிறக்கிறது;எற்றுக்கொள்ள முடிந்தால் நாமும் அதைச் செய்ய ஊக்கம் பிறக்கிறது

ஒருவர் நம்  நினைவில்  இருந்து நேரில் இல்லையெனில்,அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிடில் அவர் இராமை வருத்துகிறது ;

நாம் ஏற்றுக்கொண்டால், நினைவே சுகம் தருகிறது.

கீழே காண்பதுதான் உணர்ச்சிகளின் சமன்பாடு.....

1) ஒரு பொருள்/செயல்/நிகழ்வு+ஏற்றுக்கொள்ளல்= நேர்மறையான ஆக்கபூர்வமான செயல்பாடு.

2)ஒரு பொருள்/செயல்/நிகழ்வு+ஏற்றுக் கொள்ள இயலாமை=எதிர்மறையான உணர்வு,செயல்பாடு.

ஆம் யாராவது ஒருவரோ,ஒரு செயலோ,ஒரு நிகழ்வோ நம்மை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ உணரச் செயல்படத் தூண்டுவதில்லை.

மாறாக,அந்த ஒருவரை,செயலை,நிகழ்வை ஏற்றுக்கொள்வதோ, ஏற்றுக்கொள்ளாம லிருப்பதோதான் நம்மை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ உணர வைக்கிறது!

நாம் அடுத்தமுறை ஏதாவது எதிர்மறையான எண்ணங்களால் தாக்கப் படும்போது,எது அல்லது யார் அதற்குக் காரணம் எனக் கருதாமல்,நமது உணர்வுத் தடையை(ஏற்றுக் கொள்ள இயலாமையை),மாற்றி அதை ஏற்றுக்கொள்வோமானால்,நமது எதிர்மறையான சிந்தனை,ஆக்க பூர்வமானதாக மாறும்.நன்மை பயக்கும்.

வாழ்க்கையில் குறை காண்பதை விடுத்து,வருவதை ஏற்றுக் கொண்டு ஆக்க பூர்வமாகச் செயல் படுவதே வாழ்வாங்கு வாழும் வழி!



சனி, ஜூன் 01, 2013

உற்சாகமான பதிவர் சந்திப்பு!



மற்றவர்கள் கூடி சுவாரயமாகப் பேசிக் கொண்டிருக்க,ஸ்கூல் பையனிடம் தன்னைப் போட்டோ எடுக்கச் சொல்லி ஏணியில் ஏறிப் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் சீனு!







படங்களே நடந்ததைச் சொல்கையில் சொற்களும் வேண்டுமோ சொல்ல?!

இன்று மதியம் சிவகுமார் சந்திப்பு பற்றி தொலைபேசியில் தகவல் தர,பின்னர் புலவர் ஐயா போனில் உரையாட,நான்கு மணி அளவில் பாலகணேஷ் மீண்டும் போன் செய்ய,ஐந்து மணி அளவில் சந்திப்பு நடக்கும் இடம் அடைந்தேன்.

பத்துப்பேர் முன்னரே வந்திருந்தனர்.

புலவர் ஐயா,பால கணேஷ்,மதுமதி,ஆரூர் மூனா செந்தில்,சிவகுமார்,சீனு,பட்டிக்காட்டான் ஜெய்,ஸ்கூல் பையன்,அரசன்,சினிமா சினிமா ராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.

கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்

மிக்சர்(மொறு மொறு மிக்சர்!),பிஸ்கட்,சமோசா,ஃபாண்டா-பேச்சுக்கு நடுவே கொறிக்க, சுவைக்க!

முக்கியமாக என்ன பேசினோம் என்று முக்கியமானவர்கள் பதிவு எழுதுவார்கள்.

படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

என்னைப் பொறுத்த வரை சிலநாட்களாக எழுதாமல் சோர்ந்து கிடந்த எனக்கு இந்த இளைஞர்களின் சந்திப்பு மனத்துக்கு உற்சாகம் தரும் ஒரு டானிக்காக அமைந்தது!

நன்றி நண்பர்களே