தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 06, 2013

கண் கலங்க வைத்தவர்கள்!



என் நேற்றைய பதிவில், முன் தினம் கண் மருத்துவமனைக்குச் சென்ற அனுபவத்தைச் சிறிது நகைச்சுவை சரக்குச் சேர்த்துச் சொல்லியிருந்தேன்.

ஆனால் நேற்றும் இன்றும் நடந்தவைகளை நடந்தவைகளாகவே சொல்லப்போகிறேன், கூடுதல் , குறைத்தல் இன்றி.

அன்று ஃபோட்டோ எடுத்தபின் மறுநாள்    வந்து அதைப் பெற்றுக்கொண்டு விழித்திரை வல்லுநரையும்,பின் பெண்மருத்துவரையும் பார்க்கச் சொல்லி விட்டார்கள்.

அவர்கள் சொன்னபடி மறுநாள்,அதாவது நேற்று மாலை 5 மணிக்கு அங்கு சென்றேன்.

ஃபோட்டோ பிரிண்ட் எடுக்கப் போயிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடும் என்றும் சொன்னார்கள்.

காத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் விழித்திரை வல்லுநரும் வந்து விட்டார்;ஆனால் படம் வரவில்லை,

5.30க்கு விசாரித்தேன்;இதோ வந்து விடும் என்றார்கள்

மணி 5.45;மீண்டும் அதே பதில்.

என்ன நிலைமை,எப்போது வரும் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.

அதிகமாகக் கோபம் வராத நான் கோபம் அடைந்தேன்

“நேற்று மாலை எடுத்படம் இன்று மாலை இன்னும் தயாரஇல்லை.உங்கள் மருத்துவ மனை இலாகாக்களுக்குள் ஒத்து இயங்கல் இல்லை;பொறுப்பாகப் பதில் சொல்ல யாருக்கும் தெரியவில்லை.நான் பின் எப்போதாவது வந்து படத்தை வாங்கிக் கொள்கிறேன்.நாளை வேறு மருத்துவரைப் பார்க்கிறேன்;உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.

வீட்டுக்கு வந்த பின் மீண்டும் தொலை பேசி அவர்கள் சேர்மனின் மின்னஞ்சல் முகவரி கேட்டேன்;எதற்கு என்று கேட்க,விஷயத்தைச் சொல்லி ,புகார் செய்யப்போகிறேன் எனச் சொன்னேன்.முகவரி கொடுத்தார்கள்.

பத்து நிமிடத்துக்குப் பின்.தொலைபேசி ஒலித்தது;மருத்துவ மனை அலுவலக மேலாளர் பேசினார் ;

நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார்.உடன் வந்தால் முடித்து விடலாம் என்றார்.

நான் அவர்கள் விருப்படியெல்லாம் என்னால் வர முடியாது என்றேன்.

நாளைக் காலை வர முடியுமா என்றார்;ஒப்புக் கொண்டேன் 11 மணிக்கு வருவதாக.

இன்று காலை 10 மணிக்குத் தொலை பேசினேன்.எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.

சரியாக 11 மணிக்கு அங்கிருந்தேன்.

மேலாளர் என்னைக் கை குலுக்கி வரவேற்று ஒரு பெண் ஊழியரை அழைத்து இவர் உங்கள் வேலையை முடித்துத் தருவார் என்றார்

அந்த ஊழியர் எந்தக் காத்திருப்பும் இன்றி என்னை விழித்திரை வல்லுநரிடமும்பின் மற்ற மருத்துவரிடமும் அழைத்துச் சென்றார்.மருத்துவர் ,நேற்று நடந்ததைக் கேள்விப்பட்டேன் சில நாட்கள் இப்படித்தான் எல்லாமே தவறாகி விடுகிறது, வருந்துகிறேன் என்று சொல்லவும் ,நான் சங்கடப் பட்டேன்.

அவர் எழுதிக் கொடுத்த குறிப்புடன் கீழே வந்த பின் அந்த ஊழியர் வேண்டிய மாத்திரை
களை வாங்கிக் கொடுத்தார்.(பணம் நான்தான் கொடுத்தேன்!)

மேலாளரும் அந்த ஊழியரும் சேர்ந்து எனக்கு விடை கொடுத்தனர்.

வெளியே வரும்போது நேரம் 11.25!

நான் உள் நுழைந்தது முதல் அனைவரும்,மருத்துவர் உட்பட காட்டிய பணிவு அவர்கள் வருத்தம் தெரிவித்த முறை இதெல்லாம் என்னை யோசிக்க வைத்தன.....

நான் அப்படி விரைவில் கோபம் கொண்டிருக்கக் கூடாதோ?

தவறு எங்குதான் நடக்கவில்லை?

கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காரணங்கள் எத்தனையோ இருக்கலாம்.

என் கோபத்தினால்தான் இன்று எல்லாமே நன்றாக நடந்தது என்று பெருமைப் படவா?

 இல்லை  அவர்களின் இன்றைய செயல் முறை பார்த்து நேற்று நான் விரைவில் கோபம் கொண்டதற்காக வெட்கப்படவா?

தெரியவில்லையே!

டிஸ்கி:இதுவே ஒரு அரசு நிறுவனமாக இருந்தால் ஒருவரும் என்னை ஒரு பொருட்டாகவே எண்ணியிருக்கப் போவதில்லை,ஆனால் எல்லாத் தனியார் நிறுவனங்களும் இவ்வளவு விரைவாகவும் பண்புடனும் தவறைச் சரி செய்வார்களா என்ன?அந்த வகையில் அம்மருத்துவ மனைக்கு ஒரு சல்யூட்!


செவ்வாய், மார்ச் 05, 2013

கண்ணே உன்னால் நானடையும் கவலை கொஞ்சமா?!



கண் மருத்துவரைப் பார்ப்பதை நீண்ட நாட்களாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன்.


நேற்று போவதென்று முடிவு செய்து மாலை 4 மணி அளவில் புறப்பட்டுச் சென்றேன்.

வரவேற்புப் பிரிவுக்குச் சென்று சொன்னேன்”வழக்கமான கண் பரிசோதனைதான்.”

ஒரு படிவம் கொடுத்தாள்;விவரங்கள் குறித்துக் கொடுத்தேன்.

சிறிது நேரத்தில் என் கையில் ஒரு அடையாள அட்டை கொடுத்தார்கள்.
”எப்போது வந்தாலும் இதைக் கொண்டு வாருங்கள்”

என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்றாள்.

அங்கு இருந்த இரண்டு கருவிகள் முன் அமர்ந்து சில சோதனைகள்.;

பின் முதல் மாடி;

ஒரு அறையில் ஒருவர் லென்ஸ்களை மாற்றி மாற்றிப் போட்டு எதிரில் இருக்கும் அட்டையில் இருந்த எழுத்துக்களைப் படிக்கச்சொன்னார்.

பின் மருத்துவர்.பெண்!இப்போதுதான் படிப்பை முடித்து விட்டு வந்திருப்பார் எனத் தோன்றியது!

அவரும் கண்ணில் டார்ச் அடித்துப் பார்த்தார்.

மீண்டும் முகவாய் பதித்து,நெற்றி அழுத்திவைத்துக்கொள்ள ஒரு கண் பரிசோதனைக்   கருவி.

எதிரில் டாக்டர் அமர்ந்து என் கண்களைப் பார்த்தார்

“என் வலது காதைப் பாருங்க!”

எதற்காகப் பார்க்கச் சொல்கிறார்?

பார்த்தேன்.காதில் அணிந்திருந்த ஜிமிக்கி புதிதாகத் தோன்றியது; இதற்காகத் தான் பார்க்கச் சொன்னாரோ?

”ஜிமிக்கி நல்லாருக்கு டாகடர்;ஜி.ஆர்.டி.யா?”

சார்!என் ஜிமிக்கியைப் பற்றிக் கருத்துக் கேட்கலை.என் வலதுகாதைப்  பார்த்தால் உங்கள் கண் இடது புறம் பார்க்கும்;பரிசோதனை செய்ய வேண்டும்.”

ஆயிற்று.

இப்போது இடது காது.

அதுவும் முடிந்தது!

அடுத்து முதலில் மேலே பின் கீழே பார்க்கச் சொல்வேன்.எதையாவது சொல்லித்  தொலைக் காதீர்கள்!”

பரிசோதனை முடிந்தது.

வெளியே போய் அமருங்கள்.கண்ணில் மருந்து விடுவார்கள்.பாப்பாவைப் பெரிதாக்கிப் பார்க்க வேண்டும்

எந்தப் பாப்பாவை எனக் கேட்கத்தோன்றியது!அடக்கிக் கொண்டேன்!

அடுத்தொரு அரை மணிநேரம் கண்ணை மூடித் தவம்.

ருத்ரம் சொல்லியவாறு நேரத்தை ஓட்டினேன்.

மீண்டும் பரிசோதனை.

முதலிலேயே நான் சொல்லியிருந்தேன் எனக்கு வலது கண் திரையில் சூரியச் சூடு இருப்பதாக மருத்துவர்கள் முன்பே சொல்லியிருப்பதை(சூரியக் கிரகணம் பார்த்தாதால் வந்த வினை!)

இப்போதும் அதையே சொல்லிய மருத்துவர்,விழித்திரை வல்லுநரையும் பார்த்துவிடச் சொன்னார்.

மீண்டும் தரைத்தளம்.

விழித்திரை வல்லுநரின் பரிசோதனை.

”திரையில் ஏதும் பிரச்சினை இல்லை.ஒரு கலர் ஃபோட்டோ எடுத்து விடலாம்!”

“இப்போது கருப்பு வெள்ளையே கிடையாதே;எல்லாம் கலர்தானே? ஃபோட்டோ எடுத்து அடையாள அட்டையில் ஒட்டிக் கொடுப்பார்களோ?” நினைத்தேன்

என்னை அழைத்துச் சென்ற பெண்ணிடம் சொன்னேன்”பாத்ரூம் போய் முகம் கழுவிப் பவுடர் பூசி வருகிறேன்.ஃபோட்டோ  எடுக்க வேண்டுமே!”

“அவள் என்னைப் பார்த்த பார்வை”அட,அல்பமே!”என்றது!

”சார்!ஃபோட்டோ உங்க கண்ணுக்குத்தான்!வாங்க மேலே போகலாம்”

மேலே போய், ஃபோட்டோ எடுத்து ,என்று எல்லாம் சொன்னால் மிக நீண்டு விடும்.

எனவே முடித்துக் கொள்கிறேன்!

இன்று மீண்டும் வரச் சொல்லியிருக்கிறார்கள்!



திங்கள், மார்ச் 04, 2013

என் காதலி- இன்றும் தொடர்கிறாள்

//செவ்வாய், பிப்ரவரி 15, 2011


சென்னைக்காதல்-3.


சென்னையின் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பற்றி இதுவரை நான் எழுதவில்லை.அதுவும் இன்றில்லாத ஓரிடம்தான்.

எத்தனை புத்தகங்கள் அங்கே தேடித்தேடிஎடுத்திருப்பேன்?.அதற்காக எத்தனை மணி நேரம் செலவிட்டிருப்பேன்?எத்தனை விதமான பொருள்களை பேரம் பேசி வாங்கியிருப்பேன்? எத்தனை நாட்கள் சும்மா சுற்றியிருப்பேன்?மறக்க முடியுமா?இன்றைய மால்களின் முன்னோடியான அந்த இடத்தை மறக்க முடியுமா?

சென்னையின் மிகப் பெரிய இழப்பாக நான் நினைக்கும் அந்த இடம்—

”மூர்மார்க்கெட்”

அங்கு ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் உங்களுக்குக் கண்டிப்பாக நன்கு பேரம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.இல்லயெனில் ஏமாற வேண்டியதுதான்.

எனக்கு பேரம் பேசக் கற்றுத்தந்ததே மூர் மார்க்கெட்தான்.புத்தகம் வாங்க ,எப்பொருள் வேண்டுமாயினும் வாங்க,பொழுதுபோக்காகச் சுற்றி வர என மனிதர்கள் கூடிய இடம்!

இப்படி எத்தனையோ இடங்கள்!எத்தனையோ நினைவுகள்!

இதற்கு மேல் என்ன இருக்கிறது என் காதலியைப் பற்றிச் சொல்ல?

ஆனால் அவள் என்னை மாற்றினாள்!

சென்னை வரும் முன் அப்பாவியாக,நண்பர்கள் தவிரப் புதியவர்களிடம் பேசிப் பழகக் கூச்சப் படுவனாக,வீட்டுப் பெண்களைத்தவிர மற்றப் பெண்களிடம் பேசப் பயப்படும்,அவர்களாகப் பேசினால் கால் நடுங்கும், பதில் சொல்ல நாக் குழறும் ஒருவனாக இருந்த என்னை இரண்டே ஆண்டுகளில் முழுதுமாக மாற்றியது சென்னை.

பேசத் தெரிந்தவனானேன்.

பெண்களிடம் பேசப் பயந்த நிலை மாறியது.இரு சம்பவங்களை விவரிப்பதின் மூலம் இந்த மாற்றத்தைப் புரிய வைக்க முடியும் என நினைக்கிறேன்.

மதராஸ் வந்த புதிதில் பட்டமளிப்பு விழாவில் நேரில் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன். அன்று காலை வெளியில் சென்று வந்தபோது ஹாஸ்டல் அலுவலகத்தில் அழைத்தார்கள். நான் இல்லாதபோது எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகச் சொன்னார்கள்.மதுரை ஃபாத்திமா கல்லூரியில் பணி புரிந்து வந்த என் சித்தி, மாணவிகளுடன் வந்து மாநிலக் கல்லூரி மகளிர் விடுதியில் தங்கியிருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும் சொன்னார்கள்! அன்று மாலை பட்டமளிப்பு விழா முடிந்தபின் அங்கிருந்தே சென்று பார்த்து வரலாம் எனத் தீர்மானித்தேன்.விழா முடிந்ததும், விசாரித்துக்கொண்டு பேருந்தில் ஏறினேன். நடத்துனரிடம் சொன்னேன்’மாநிலக் கல்லூரி மகளிர் விடுதியில் இறங்க வேண்டும்.இடம் வந்ததும் சொல்லுங்கள்” என்று.

இடம் வந்ததும்,நடத்துனர் உரத்த குரலில் சொன்னார்”யாருப்பா,மாநில மகளிர் விடுதி, இறங்கு!”நான் இறங்கும்போது பஸ்ஸில் இருந்த அனைவரும் என்னையே பார்ப்பது போன்ற ஓர் உணர்வு!

விடுதி காம்பவுண்டுக்குள் நுழைந்தேன்.வாசலிலிருந்து சிறிது தூரம் தள்ளி விடுதிக் கட்டிடம்.கேட்டிலிருந்து நீண்ட நடை பாதை.பாதையின் இரு புறமும் மரம்,செடி. புல்தரை நிறைந்த தோட்டம்!ஆங்காங்கே,கொத்துக் கொத்தாய் பெண்கள்!வித விதமான உடைகள்;அலங்காரங்கள்.ஆனால் நேரில் பார்க்கப் பயம்.கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.கழுத்தில் டை,கையில் மடித்துப் போட்ட பட்டமளிப்பு கவுன்,சுருட்டிப் பிடித்த பட்டம்,இந்தத் தோற்றத்தில் சென்று கொண்டிருந்த என்னை அப்பெண்கள் எல்லாரும் உற்றுப் பார்க்க ஆரம்பிப்பதாக உணர்ந்தேன்.கால்கள் பின்ன ஆரம்பித்தன. கழுத்திலிருந்து வேர்வை ஊற்றெடுத்து ஓட ஆரம்பித்தது-கழுத்து,முதுகு,கால்கள் என்று..ஒரு வழியாகக் கட்டிடத்தை அடைந்தேன், விசாரித்தேன்.சித்தி வெளியே சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.நான் வந்தவுடன் சொல்லுங்கள் என்று என் பெயரைச் சொன்னேன்.

திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.முன்பை விடப் பார்வைகள் தீவிரமாக இருப்பதாக உணர்ந்தேன்.யாரோ ஒரு பெண் என் பெயரைச் சொல்லி விட்டுச் சிரித்தாள்.கால் நடுக்கம் அதிகமானது!பாதை நீ..…..ண்டது.கடைசியாக கேட்டை அடைந்தேன்.

ஓராண்டுக்குப் பின்!

மூர் மார்க்கெட்!

முக்கியமான புத்தகங்களைத்தேடி வாங்கத் தனியாகச் சென்றேன்.கடையை விட்டு வரும் போது அப்பெண்ணைப் பார்த்தேன்.அழகும்,கம்பீரமும் கலந்த ஒரு தோற்றம். தோற்றத்தில் தன் அழகின் மீது செருக்குக் கொண்ட பெண்ணாகத் தோன்றவில்லை.ஒரு தோழி மட்டும் உடன். அவளுடன் பேச வேண்டும்;அவள் அழகைப் புகழ வேண்டும் எனத்தீர்மானித்தேன்.

இரண்டு மூன்று கடைகளில் சில பரிசுப் பொருள் பற்றி விசாரித்தேன், அவளைப் பார்வையால் பின் தொடர்ந்தவாறே! பின் அவளை நெருங்கினேன்.

“மன்னிக்கவும்.உங்களால் எனக்கு உதவ இயலுமா?” கேட்டேன்.

”சொல்லுங்கள்”

“தவறாக நினைக்காதீர்கள்.ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும்.தேடித்தேடிப் பார்த்து விட்டேன்.என்ன வாங்குவதென்று தெரியவில்லை.”

”யாருக்கு”

என் முகத்தில் வரவழைத்துக் கொண்ட ஒரு வெட்கம்.தயங்கிச் சொன்னேன்”என் நண்பிக்குப் பிறந்த நாள்.பரிசு அளவில் சிறியதாக இருக்க வேண்டும்;பெண்களுக்குப் பிடித்த பொருளாக இருக்க வேண்டும். எனவேதான் உங்கள் உதவி நாடினேன்.”

அவள் என்னை உற்றுப் பார்த்தாள்.என் முகத்தில் தப்பாக எதுவும் தெரியாத நிலையில் சொன்னாள்”அவளுக்கு ஏதாவது ஃபிலிக்ரி நகைகள் வாங்கிக் கொடுங்களேன். நிச்சயம் பிடிக்கும்—நான் அணிந்திருப்பது மாதிரி.”

“வாவ்!அழகாக இருக்கின்றன.அழகான பொருட்கள், இருக்கும் இடத்தைப் பொறுத்து மேலும் அழகாகின்றன.இங்கு கிடைக்குமா?”

என் பாராட்டை ஒரு தலையசைப்பால் ஏற்றுக் கொண்ட அவள் சொன்னாள்

”இல்லை.மவுண்ட் ரோடில்”கலிங்கா ஃபிலிக்ரியில் கிடைக்கும்”

“நன்றி” அவளை விட்டு விலகத்தயாரானேன்.

”ஒரு நிமிடம் ”அவள் அழைத்தாள்.முகத்தில் லேசான குறும்போ!

”அவளுக்குப் பிடித்ததா என்று என்னிடம் சொல்லுங்கள்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இங்கு இருப்பேன்!”

நான் திகைத்தேன். அவள் அகன்றாள்!

இந்தத் தைரியத்தை,மாற்றத்தை என்னில் ஏற்படுத்திய சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியுமா?

சென்னைக்காதல் (பதிவு) முடிந்தது!

(இப் பதிவுத்தொடரை எழுதக் காரணமான அமீரகப் பதிவர் நண்பர் கக்கு-மாணிக்கம் அவர்களுக்கு நன்றி)//
...................
டிஸ்கி:
இத்துடன் முடித்துக் கொண்டேன்.இன்னும் எழுதியிருக்கலாம்.இப்போதும் கூட எழுதலாம்.

நணபர் கக்கு பற்றிக் குறிப்பிடக் காரணம்- என்னை சென்னைக் காதலன் என்று அவர் ஒரு பின்னூட்டத்தில் அழைத்திருந்தார்!



சனி, மார்ச் 02, 2013

என் காதலி!(தொடர்கிறாள்)

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

சென்னைக்காதல்-2

'காதலிக்க நேரமில்லை’ என்று ஆரம்பமாயிற்று என் சென்னைக் காதல்!

பத்தொன்பது வயது வரை சிற்றூர்களிலேயே வாழ்ந்து பழகிய ஒருவன்,இருபதாவது வயதில் நகரத்துக்கு வந்தால் பிரமிப்பு ஏற்படாதா?

அந்தத் திரை அரங்கம்,,ஓட்டல்,அவை தவிர முதன் முதலாகப் பார்த்த அலை மோதும் கடல்,பரந்த கடற்கரை எல்லாமே புதிய அனுபவம்தான்.கடலில் கால் நனைய நின்றது, தே.மா.ப.சு. சாப்பிட்டது,குழந்தையாக மாறி மணலில் ஓடியது எல்லாமே புது அனுபவம்தான்.எல்லாவற்றையும் விட வியப்பை எற்படுத்தியது,அவன் பார்த்த இளம் பெண்கள்,அவர்களின் நாகரிக உடை,அவர்கள் பேசிய ஆங்கிலம்.

மெஸ்ஸில் சுவை உணவு
லஸ்ஸில் விண்டோ ஷாப்பிங்
பஸ்ஸில் ஊர் சுற்றல்
மிஸ்ஸிங்—வேறென்ன படிப்புதான்!
(கடைசியில் மேக்கப் பண்ணிட்டோமுன்னு வச்சிக்குங்க!)

கல்லூரி விடுதியில் மிக அருமையான சைவ உணவு கிடைத்தது.ஞாயிறன்று தயாராகும் மோர்க்குழம்பு மிகப் பிரசித்தம்.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி,எண்ணெயில் வறுத்து,மோர்குழம்பில் போட்டிருப்பார்கள்!பீன்ஸ் பொரியல்,மைசூர் ரசம்,தயிர்.
சாப்பிட்ட சாப்பாடு செரிக்க வேறென்ன செய்வது?—ஊரைச் சுற்று!

லஸ்!மயிலையின்ரத்த நாளம்!இன்றும் இருக்கும் சுக நிவாஸ்-மங்களூர் போண்டா பிரமாதம்.இன்று இல்லாமல் போய் விட்ட சாந்தி விஹார்.அன்றைக்கு ’காஃபி டே’ யோ, ’ஜாவா க்ரீனோ’ ‘மோக்கா’ வோ இல்லை—சந்திப்பதற்கும்,சல்லாபிப்பதற்கும்.(இப்போதெல்லாம் இம்மாதிரி இடங்களில் எழுதுகிறார்கள்—’காஃபியும், பேச்சும்’,காஃபியும் அதற்கு மேலும்,’என்றெல்லாம்!

அப்போது எங்களுக்கு இருந்ததெல்லாம் சாந்தி விஹார் தான்.வெறும் காஃபி மட்டும் குடிப்பதற்காகக் கூட்டமாய்ப் போய் அரைமணிக்கும் மேல் அங்கு அமர்ந்து பேசி விட்டு(பார்த்து விட்டும்!) வருவோம்.இல்லையென்றால், குளக்கரையில் இருந்த உடுப்பியின் ரூஃப் கார்டனில், மணக்கும் நிகரற்ற குழம்பியுடன் ஊர் வம்பு!

வெள்ளியன்று,பக்தி அதிகமாகி விடும்!கபாலீச்வரரையும், கற்பகாம்பாளையும், பார்க்காமல் இருக்க முடியாது—நல்ல தரிசனம் அன்றுதானே கிடைக்கும்!!அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்!வேறுபாடு பார்வகளில்தான்!

லஸ்ஸிங்கும்(லஸ்ஸுக்குப் போய் சுற்றி விட்டுப் பார்த்து விட்டு வருவதற்கு நாங்கள் வைத்த பெயர்),கோவிலிங்கும் இல்லாத நாட்களில் இருக்கவே இருக்கிறது அழகிய சாந்தோம் கடற்கரை.(பீச்சிங்).முன்பே எழுதியது போல சிறிய, ஆர்ப்பாட்டமில்லாத ,அழகிய கடற்கரை.இன்று இல்லாமல் போய் விட்டாலும் என் நினைவில் நிற்கும்,நினைவில் கலந்து விட்ட கடற்கரை.கச்சேரி ரோடு வழியாக நடந்தே போய்க் கடற்கரையில் பொழுதைக் கழித்துவிட்டு நடந்தே திரும்பி வருவோம்.

இன்று பெரிய பெரிய வணிக வளாகங்கள் இருக்கலாம்.ஆனால் அன்று சிறிய ’லாக்ஸ் அண்ட் லாக்ஸ்’, கடையில் பொருள் வாங்கிய(அல்லது பார்த்துவிட்டு வாங்காமல் வந்த),சுகமே தனிதான்!அச்சிறிய கடையின் நெரிசல் நெருக்கங்கள்,எங்கள் அலட்டல்கள்(பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆயிற்றே!) ,கடைக்காரரின் தனிக் கவனிப்பு எல்லாமே மறக்க முடியுமா?

சனிக்கிழமை இரவுகள் விடுதியில் கட்டவிழ்த்து விட்ட இரவுகள். பெரும்பாலும் சினிமா பார்க்கும் நாட்கள்.இன்றில்லாத அரங்குகளான மினர்வாவில் ‘ஹடாரி’ குளோபில் முதல் நாள் முதல் காட்சி ‘ஃப்ரம் ரஷ்யா வித் லவ்” சஃபைரில் ‘க்ளியோபாட்ரா’,’மை ஃபேர் லேடி’,சஹானிஸ்(ராஜகுமாரி)யில் ’சரேட்’ ’டாக்டர்.நோ’’எல்ஃபின்ஸ்டன், ஓடியன் அரங்குகளில் பல ஆங்கிலப் படங்கள்,--மறக்க முடியுமா?

எல்லாவற்றிலும் முக்கியமானது இந்தச்சென்னையென்னும் பெண் என்னில் நிகழ்த்திய மாற்றங்கள்!

அவை பற்றிப் பின்னால் பார்ப்போம்!

(தொடர்கிறேன்)

வெள்ளி, மார்ச் 01, 2013

என் காதல்!

சென்னை  பித்தனான நான் என் காதல் பற்றி எழுதிய பதிவுகள்,மலரும் நினைவுகள்.

ஆம் நான் காதலித்தேன்- சென்னையென்னும் அழகியை!
அக்காதல் பற்றி நான் எழுதிய பதிவுகளை இங்கு மீள் பதிவாகப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இதோ சென்னைக்காதல்

//வெள்ளி, பிப்ரவரி 04, 2011

சென்னைக் காதல்!

சென்னையின் மீதான என் காதல் எப்போது ஆரம்பமானது?

நான் பிறந்தது இந்த தரும மிகு சென்னையில்தான்.-மதராஸ்- திருவல்லிக்கேணியில்..ஆனால் குடும்பத்தலைவரான என் தந்தையின் மறைவுக்குப் பின் ஐந்து வயதே நிறைந்த நான் புலம் பெயர வேண்டியதாயிற்று!தென் தமிழ்நாடு எங்களை வரவேற்றது.எனவே அந்த வயதுக்குள் என் சென்னைக் காதல் சாத்தியமில்லை!

பின் என் பள்ளி வாழ்க்கை தொடங்கியது .சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி என்று பல இடங்களில் தொடர்ந்தது.பள்ளி கோடை விடுமுறையில் ஒரு முறை என்னை சென்னையில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பவதாக என் அண்ணா சொல்லியிருந்தார்;நானும் சென்னையில் போய் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற கனவுகளிலும், கற்பனைகளிலும் மூழ்கியிருந்தேன்.ஆனால் என்ன காரணத்தாலோ அது நடக்கவில்லை.சில நாட்கள் மிக வருத்தத்தில் இருந்தேன்.எனவே காதல் தள்ளிப் போய் விட்டது(நான் என்ன காதல் கோட்டை அஜித்தா,பார்க்காமலே காதலிக்க!)

பின் கல்லூரி வாழ்க்கை.வங்கி ஊழியரான என் அண்ணா செல்லும் ஊர்களில்லாம் என் கல்வி தொடர்ந்தது போல்,புகுமுக வகுப்பும் பட்டப் படிப்பும் உத்தமபாளையத்தில் தொடர்ந்தன. சென்னை வெறும் கனவாகவே இருந்தது.கணிதத்தில் பட்டம் பெற்ற பின்,பட்ட மேற் படிப்புக்காக விண்ணப்பம் அனுப்பும் நேரம் வந்தது .அப்போதெல்லாம், விண்ணப்பம் பல்கலைக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.அதில் முன்னுரிமை அளித்து மூன்று கல்லூரிகளின் பெயர் குறிப்பிட வேண்டும்.இங்கேதான் விழுந்தது காதலின் வித்து!முதலில் குறிப்பிட்ட கல்லூரி,சென்னை விவேகானந்தா கல்லூரி..அவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள்!சில நாட்களுக்கு முன்தான் என் அக்காவுக்குத் திருமணம் முடிந்து, கணவனுடன் சென்னை சென்றிருந்தாள்.நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்.ரயிலில் செல்லும்போதே ஜுரம் வந்து விட்டது(காதல் ஜுரம்!) சென்னை சென்று அடைந்தேன்!

முதல் நாள் என் அக்காவுடனும்,என் அத்திம்பேருடனும்,சினிமா பார்க்கப் புறப்பட்டேன்-கேஸினோவில்.அதன்பின்,மவுண்ட் ரோடு மதுபன் ஹோட்டலில் போண்டா சாம்பார், காபி,கடைசியில் மெரினா கடற்கரை.

சென்னையின் திரையரங்கும்,ஸ்பூனால் வெட்டியெடுத்துச் சாப்பிட்ட சாம்பாரில் மிதக்கும் மைசூர் போண்டாக்களும் , பிரம்மாண்டமான மெரினா கடற்கரையும்,ஆர்ப்பரித்து அலைக்கரங்கள் நீட்டும் வங்கா விரிகுடாவும்,என்னை சென்னையின் பால் ஈர்த்தன.

காதல் தொடங்கியது!

மதராஸில்,முதலில் அன்று பார்த்த திரைப்படத்தின் பெயரில் ஒரு வேடிக்கையான பொருத்தம்,அல்லது முரண்நகை இருக்கிறது!

அந்தப் படம்---”காதலிக்க நேரமில்லை”!//.
..........................
இந்த வரிசையில் நான் எழுதிய மற்றப்பதிவுகள் அணிவகுத்து வரும்!

வியாழன், பிப்ரவரி 28, 2013

மீண்டும் பதிவு எழுதலாமா?!



சித்திரமும் கைப்பழக்கம்,செந்தமிழும் நாப்பழக்கம்!

கை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்;நா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்.

தொடர்ந்து பழகுதல் என்பது அவசியம்

ஒரு சிறந்த பாடகனாயினும் தினம் சாதகம் செய்தால்தான் குரல் ஒத்துழைக்கும்.

அது போலத்தான் எழுதுவதும்.

எழுதிக்கொண்டே இருந்தால் புதிய கருத்துகள்,சிந்தனைகள் பிறந்து கொண்டே இருக்கும்.

சில காலம் எழுதாமல் இருந்து விட்டால்,சிந்தனை துருவேறி விடும்;கற்பனை  சண்டித் தனம் செய்யும்.

அதுதான் இன்று என் நிலையும்.

சில காரணங்களால் பதிவு எழுதுவதையே நிறுத்தியிருந்தேன்.

மீண்டும் எழுதலாம் என்ற எண்ணம் எழும்போதும் ,ஒரு தயக்கம் வந்து தடுத்துக் கொண்டிருந்தது.

ஆனால் இரு வாரங்களாக வலைச்சரத்தில் திரு தமிழ் இளங்கோ அவர்களும், திரு நாஞ்சில் மனோ அவர்களும் என்னை அன்புடன் நினைவு கூர்ந்து அறிமுகப்படுத்தி,மீண்டும் எழுதும் எண்ணத்தைத் தூண்டி விட்டு விட்டார்கள்.

ஆனால் கணினி முன் அமர்ந்தால்   படிக்காமல் போய்த் தேர்வில் கேள்வித்தாளைக் கையில் வாங்கிப் பார்த்து விழிக்கும் மாணவன் போல் உணர்கிறேன்.

என்ன செய்யலாம்?

மனக்குதிரை ஓடத் தொடங்கும் வரை,இதுநாள் வரை நான் எழுதியவற்றில்  எனக்குப் பிடித்த சில பதிவுகளை மீள் பதிவாகத் தர எண்ணுகிறேன்.

 முன்பே படித்தவர்கள் பொறுத்தருள்க!

இது வரை படிக்காதவர் படித்துப் பயன்(!) பெறுக!


நாளை முதல், மீள்பதிவு!
நாளை,முதல் மீள் பதிவு!