தொடரும் தோழர்கள்

புதன், ஜனவரி 06, 2016

கட்டிக்கோ,கட்டிக்கோ!



வேஷித என்னும் வடமொழிச் சொல்லுக்குப் பொருள்,சுற்றப்பட்ட, சூழப்பட்ட என்பது; ஆங்கிலத்தில் encircled,wrapped என்று சொல்கிறது அகராதி.வேஷ்டி என்பதன் மூலச் சொல் இதுதான்.சுற்றிக் கட்டிக் கொள்வதால் இவ்வுடை வேஷ்டி ஆயிற்று,ஷ என்பது வடமொழி எழுத்து.எனவே தமிழில் இதுவே வேட்டி ஆயிற்று.

வேட்டியில் நான்கு முழம்,எட்டு முழம்,ஒன்பது முழம். பத்து முழம் எல்லாம் உண்டு. நான்கு முழம் வேட்டியை ஒற்றைச் சுற்று வேட்டி என்றும் எட்டு முழத்தை இரட்டைச் சுற்று வேட்டி என்றும் சொல்வதுண்டு.ஒன்பது முழம் வேட்டி,அங்கவஸ்திரத்துடன் சேர்ந்து வரும் ஒன்பதைந்து என்று சொல்வார்கள்.அது போலவே பத்தாறும்.இவை பஞ்சகச்சம்,மூலைகச்சம் கட்டப் பயன்படும்.வட இந்தியாவில் வேட்டி என்பது கச்சம் வைத்துக்கட்டுவது மட்டுமே.நம்போல் சாதாரணமாகக் கட்டினால் அதை லுங்கி என்று சொல்லி விடுவார்கள்.

நான் முதல் முதலாக எப்போது வேட்டி கட்டினேன்?

எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வு எழுதிய பின் கோடை விடுமுறை.சிவகாசியில் எங்கள் பள்ளி மைதானத்தில் கண்காட்சி நடை பெற்றது .இரு நண்பர்கள் சுற்றுவதற்கு என்னை அழைக்க வந்தனர். அரை டிரவுசரில் புறப்பட்ட என்னத் தடுத்து,இப்படி வராதே எங்களை மாதிரி வேட்டி கட்டி வா என்று சொல்லவே,அண்ணாவின் வேட்டி ஒன்றை எடுத்து ஒரு மாதிரிக் கட்டிக் கொண்டு சென்றேன்!அதுவே முதல் வேட்டி அனுபவம்.(அந்தக்கண்காட்சியில் நான் நடித்த நாடகம் பற்றி அறிய இங்கே செல்லவும்)

கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்கும்போது நாலு முழ வேட்டிதான் அனிந்து செல்வேன். பட்டப் படிப்பு ஆரம்பித்த பின்தான் முழு கால் சராய்(லோ-ஹிப்!). சென்னையில் பட்ட மேற்படிப்பு படிக்கும்போது,மாலை வேளைகளில் தழையத் தழைய வேட்டி கட்டி,முழுக்கை சட்டையை முக்கால் கையாக மடித்து அணிந்து அலட்சியத் துடன் ஸ்டைலாக  நடந்து மயிலையைச் சுற்றச் செல்வது ஒரு சுகம்! மயிலை மயில்கள் நடமாடும் மாலை!

வேட்டி கட்ட நடக்கத்தெரியாமல் தடுக்கிக் கொள்பவர்கள்,மடித்துக் கட்டிக் கொண்டு நடக்கலாம்;அல்லது ஒரு மூலையை இடது கையால் லேசாகப் பிடித்த படி நடக்கலாம்.


வேட்டிகட்டத் தெரியாதவர்களுக்காக,இப்போது ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகள் வந்து விட்டன!அதில் பாக்கெட் வேறு!


நான் திருமண முகூர்த்தங்களுக்கு வேட்டி அணிந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன்.சில நேரங்களில் அங்க வஸ்திரமும் உண்டு.பெண்களுக்குப் புடவை எவ்வளவு அழகோ ,அவ்வளவு அழகு ஆண்களுக்கு வேட்டி!

முன்பெல்லாம் வேதபாராயணத்துக்குச் செல்லும்போது என் குழு நணபர்கள் சாதாரணமாக வேட்டி கட்டி வந்து,அங்கு வந்து பஞ்சகச்சமாக மாற்றிக் கொள்வர்;நான் வீட்டிலிருந்தே பஞ்சகச்சம் கட்டிச் சென்று விடுவேன்.ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார்,பஞ்சகச்சம் அணிந்து நடப்பது,பேண்ட் அணிவது போல் வசதியாக இருக்கிறது என்று;அது உண்மைதான்



இன்று நான் வெளியில் செல்லும்போதும் வேட்டியே அணிந்து இந்த சர்வதேச வேட்டி தினத்தைக் கொண்டாடி விட்டேன்! 

ஒரு லிமெரிக்
வாட்ட சாட்ட வாலிபன்தான் வாசு
அவன் காதலிச்பொண்ணு பேரு சுகாசு
 பாக்கப் போகும்போது கிழிஞ்சது அவன் வேட்டி
 அப்படியேபோனான் அவன் அதை மடிச்சுக் கட்டி
அவ சொன்னா அவன் கிட்ட  ”நீ ஒரு லூசு!”


கடைசியில் ஒரு நகைச்சுவை
பாட்டி:70 எம் எம் எப்படிடா இருக்கும்;நான் பாத்ததே இல்லை.
பேரன்:தாத்தாவோட வேட்டியை அவுத்துப் பாத்தா எப்படியிருக்கும்?
பாட்டி:சீசீ!அசிங்கமா பேசாதடா
பேரன்:ஐயோ பாட்டி!தாத்தாவோட வேட்டி எவ்வளவு பெரிசு ?அவுத்து விரிச்சுப்பாத்தா எவ்வளவு இருக்குமோ அவ்வளவு பெரிசு 70 எம் எம்!
(எஸ்.வி.சேகரா,க்ரேஸி மோகனா நினைவில்லை)






12 கருத்துகள்:

  1. அருமை
    முகநூலில் வேறு ஒரு படம் பார்த்தேனே ஐயா

    பதிலளிநீக்கு
  2. வேட்டிக்கான விளக்கங்கள் நன்று ஐயா முடிவில் நகைச்சுவை ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. தங்களது ‘வேஷ்டி புராணம்’ வழியே ’வேட்டி’ பற்றி தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. வெட்டிப் பதிவு அல்ல இது. வேட்டிப்பதிவு. :)

    மிகச்சிறப்பாக உள்ளது.

    வேட்டியில் தோன்றும் தாங்கள் நல்ல அழகு. :)

    பஞ்சக்கச்சத்திலும் தங்களின் புகைப்படத்தினைக் காட்டியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. வேட்டிக்கான விபரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  6. எஸ் வி சேகர் ஜோக் என்றுதான் நினைக்கிறேன். வண்ணக் கோலங்கள்?

    பதிவை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

  7. பன்னாட்டு வேட்டி நாளான்று வேட்டி அணிவது பற்றியும் தாங்கள் முதன் முதல் வேட்டி அணிந்தது பற்றியும் எழுதி எங்களையும் நாங்கள் முதன் முதல் வேட்டி அணிந்த நாள் பற்றி அசை போட வைத்துவிட்டீர்கள்.

    லிமெரிக் கவிதையையும் நகைச்சுவையையும் இரசித்தென். நிச்சயம் இது போன்ற நகைச்சுவை துணுக்குகள் எஸ்.வி.சேகர் நாடகத்தில் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. வேட்டி புராணம் அருமை!! கேரளத்தார் பொதுவாகப் பலரும் வேட்டிதான் மிடில் ஏஜ்ட் ஆண்கள் வெளியில் செல்லும் போது அதுவும் இடது அல்லது வலது கையால் ஒரு நுனி பிடித்துத்தூக்கிப் பிடித்துக் கொண்டு நடப்பது வழக்கம்..

    அந்த ஜோக் செம...

    கீதா: அந்த ஜோக் எஸ்வி சேகர் என்று நினைவு.

    தென்னகத்து ஆண்களின் உடை வேட்டி
    இளைஞர்கள் கட்டினால் அவன் ஒரு கோட்டி
    பப்களில் இதற்கு அனுமதியில்லை ஓரம் கட்டி
    வேட்டி பற்றி அத்திப் பூப்பது போல் ஒரு பேட்டி
    இப்போது அதன் இடம் ஃபேஷன் பரேட் போட்டி

    ஹிஹி சும்மா உங்களுடன் வேட்டி பற்றியதற்கு ஒரு சிறு முயற்சி...

    பதிலளிநீக்கு
  9. ரசனையான படத்துடன் ரசிக்க வைத்த ரசனையான பதிவு!!

    பதிலளிநீக்கு
  10. #மயிலையைச் சுற்றச் செல்வது ஒரு சுகம்! மயிலை மயில்கள் நடமாடும் மாலை!#
    இதை படிக்கும் போதே எனக்கும் சுகமாஇருக்கே :)

    பதிலளிநீக்கு
  11. வேட்டி பற்றிய நினைவுகளும் கவிதையும் நன்று.

    பதிலளிநீக்கு