தொடரும் தோழர்கள்

வெள்ளி, பிப்ரவரி 27, 2015

ரே, பெனெகல்,அடூர்!



பதிவுலகம் எனக்குத் தந்த நண்பர்களான இளைஞர்கள் பலர் தற்போது குறும்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.மிகவும் பெருமையாக இருக்கிறது.தங்கள் அன்றாடப் பணிகளின் மத்தியில் இதற்கும் நேரம் ஒதுக்கி எவ்வாறு இவர்களால் சாதிக்க முடிகிறது என வியப்பாக இருக்கிறது.


ஒரு காலத்தில் நானும் சினிமாவில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்,குறிப்பாக இணை சினிமா.மதுரையில் பணிபுரிந்த காலத்தில்—1970-77-அங்கு இயங்கிக் கொண்டிருந்த ரே ஃபிலிம் சொசைட்டியில் சேர்ந்து பல ஞாயிற்றுக்கிழமை  காலைகளில் சத்யஜித் ரே படம் மட்டுமன்றி வேறு இணை சினிமாக்களும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.அபுர்சன்சார்,பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,சாருலதா தவிர வேறு சில படங்களும் பார்த்த நினைவு.அடூரின் சுயம்வரம்,பெனகல்லின் அங்கூர்,நிஷாந்த்,இவை அவற்றில் அடங்கும்.


அந்தக்காலகட்டத்தில்தான் எழுத்தாளர் ஜெயபாரதியும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து படம் எடுக்கத் திட்டமிட்டனர்.இவர்களைப் பற்றிச் சொல்லும்போது சுஜாதா சொன்னார்”ஒரே விதமான ஆசையும் மீசையும் உள்ள இளைஞர்கள்” என்று.அந்த முயற்சிக்கு உதவ எண்ணி என்னால் இயன்றை ஒரு மிகச்சிறு தொகையை அனுப்பினேன். அவர்களிடமிருந்து ஒரு கடிதமும்,ஒரு சிறப்பு மலரும் வந்தன”கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார்”எங்களைக் கொஞ்சம் உயரே பறக்க விட்டிருக்கிறீர்கள் ” என்று.ஆனால் படம் அப்போது வெளிவரவில்லை.

1979 இல் தான் ஜெயபாரதியின் “குடிசை” படம் வெளி வந்த்து.

மதுரைக்குப்பின் ஊர் ஊராகப்  பணி இட மாற்றத்தில் சுற்றி வந்ததில்,இந்த ஆசையெல்லாம் பின்னிருக்கைக்குத் தள்ளப்பட்டது.சினிமா இயக்கத்திலும் அதை விட நடிப்பிலும் ஆர்வம் இருந்தபோதும்//(என் நடிப்பு அனுபவங்களைப் பற்றி அறிய,இங்கேயும்,இங்கேயும் க்ளிக்கவும்//

 நான் முயலாததற்குக் காரணம்.

1)நான் சென்னையில் இல்லை
2)துணிந்து இறங்கும் தைரியம் இல்லாத மத்திய தர வர்க்க மனப்பாங்கு.

படம் பார்ப்பதே குறைந்து போன நிலையில் மீண்டும் நான் பார்த்த இணை சினிமா அரவிந்தனின் “சிதம்பரம்”-1986.

இப்போது திரை அரங்குக்குப் போவதே இல்லை.

ஒரு கூட்டுப் புழுவாய் என் கூட்டினுள் ஒடுங்கி விட்டேன்

எனக்கு ஒரே வடிகால்  அவ்வப்போது பதிவுலகம் மட்டுமே..


புதன், பிப்ரவரி 25, 2015

காதல் போயின் காதல்?!



காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
பாரதியின் குயில் சொல்கிறது.

புதன், பிப்ரவரி 18, 2015

இதுதான் வாழ்க்கை!



ஆயிற்று.

இன்று 13 ஆம் நாள்,சுபஸ்வீகரணக் காரியங்கள் முடிந்து விட்டன.

நம்புவது இன்னும் கூடக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

4ஆம்தேதியன்று கூட என்னுடன் பேசியவர் 7ஆம் தேதி பிடி சாம்பலாகிக் கடலில் கரைக்கப்பட்டு விட, இன்றைய சடங்குகள் முடிவில் ஆன்மா எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று விட்டது.

அழுகைகள் குறைந்து விட்டன.

பேச்சுக்களில் சகஜ நிலை திரும்பி விட்டது.

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பித்தானே ஆக வேண்டும்?!

இதுதான் வாழ்க்கை!

எந்தத் துயரத்திலும்,நடுவில் ஒரு மெல்லிய நகைச்சுவை தலைகாட்டத் தவறுவதில்லை.

என் அண்ணா இறந்த மறுநாள் ,அவர்கள் குடியிருப்பில் இருந்த ஒரு  வீட்டுவேலை செய்யும் பெண் ,என் அண்ணியிடம் வந்து”தை வெள்ளியன்னிக்கு,சுமங்கலியாப் போயிட்டாரு” என்றாளாம்.அதைக் கேட்ட என் அண்ணா பெண்ணுக்கு துக்கத்தையும் மீறிச்  சிரிப்பு வந்து விட்டதாம்!
அதை அன்று இரவு அவள் விவரிக்க எல்லோருக்கும் சிரிப்பு பீறிட்டு வந்து விட்டது.

இதுதான் வாழ்க்கை!

என் அண்ணா மருத்துவமனையில் இருக்கிறார் என அறிந்தவுடன் யு எஸ்ஸிலிருந்து புறப்பட்ட மற்றொரு மகளுக்கு நடு வழியில் வாட்ஸப் மூலம் செய்தி தெரிய வந்து அவள் உடைந்து அழ,உடன் இருந்தவர்கள்,ஓர் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆறுதல் சொன்னார்களாம்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன்,அவளுக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தவன்,அவளுடன் பேசிப் பேசி அவள் துயரைக் குறைக்க முயன்றானாம்.

அவனிடம் பேசும்போது அவளுக்குத் தெரிய வந்தது அக்குடும்பம் அந்த இளைஞனின் திருமணத் துக்காக  இந்தியா செல்கிறார்கள் என்று!

இதுதான் வாழ்க்கை!

இறுதியாக ......

"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே”--(திருமந்திரம்)

இதுதான் வாழ்க்கை!

திங்கள், பிப்ரவரி 09, 2015

புத்திர சோகம்



ஒரு தாய்.

வயது 96.

முப்பத்திரண்டாவது வயதில் கைம்பெண்ணானவள்.

அப்போது மூத்த மகனுக்கு வயது 16

கடைக்குட்டிப் பையனுக்கு வயது 5.

இடையில் மூன்று பெண்கள்.

குடும்பம் சிரமப்பட்டு முன்னேறியது.

படிப்பைத் தொடராமல் பெரிய மகன் 18 வயதில் ஒரு வங்கிப்பணியில் சேர்ந்தான்

முதல் மூன்று மாதம் சம்பளம் கிடையாது.

பின் நாற்பது ரூபாய் சம்பளம்.

குத்தாலத்தில் (மாயவரம்)ஒரு சொந்த ஓட்டு வீடு.

அதிலிருந்து வாடகை ரூபாய் 15.

சிக்கனமாகக் குடும்பம் நடத்தி பெண்களை எஸ் எஸ் எல் ஸி வரை படிக்க வைத்து மணம் முடித்தும் கொடுத்தாயிற்று.

குடும்பத்துக்காக மகன் தன் சில தேவைகளைத் தியாகம் செய்ய நேர்ந்தததுண்டு.

கடைசிப்பையன் கல்லூரியில் படிப்பது என்றால் விடுதியில் தங்கிப் படிக்க வைக்கும் அளவுக்கு வருமானம் போதாது.

எனவே பெரிய மகன் வங்கி நிர்வாக இயக்குனரைச் சந்தித்துக் கல்லூரி இருக்கும் ஊருக்கு மாற்றல் கேட்டுப் பெறுகிறான்

சிறிய ஊர்தான்,தம்பியைப் படிக்க வைக்கிறான்.

பட்டப்படிப்புக்குப் பின் மேற்படிப்பு சாத்தியமில்லை!

ஆனால் அந்த வங்கியைப் பெரிய வங்கி ஒன்று எடுத்துக் கொள்ள,அதனால் சம்பளம் உயர,அண்ணன் தயவில் தம்பி சென்னை சென்று பட்ட மேற்படிப்புப் படிக்க முடிகிறது.

இருவருக்கும் வயது வித்தியாசம் 11.

தனக்குப் படிக்க முடியாமல் போனாலும் தம்பி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெற்றி.


தன கடமைகள் செவ்வனே செய்து வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர் 81 வயதில் இறைவனடி சேர்ந்தார்

ஆனால் தலைச்சன் மகனை இழந்து மாளாத புத்திர சோகத்தில் தவிக்கும் அந்தத் தாயைப் பார்த்து இளைய மகன் மனதுக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.?

அந்தத்தாய் சில காலமாகவே இறைவனை வேண்டி வந்தாள்- முதலில் தான் போய்ச் சேர வேண்டும் என.

ஆனால் இறைவனுக்குக் கருணையில்லை.

தவிக்க விட்டு விட்டான்.

இறை நம்பிக்கையே ஆட்டம் காண்கிறது-அத்தாய்க்கு அல்ல.இளைய மகனுக்கு.

தாய்க்கு என்ன ஆறுதல் சொல்ல?

அவளுக்கு மனச்சாந்தி கொடு என்று யாரை வேண்ட?


                                                     அம்மாவும் அண்ணாவும்

அண்ணாவுக்கு என் அஞ்சலி

செவ்வாய், பிப்ரவரி 03, 2015

கன்னா,செம்மை நிறக் கன்னா!



தலைப்பைப் பார்த்ததும் என்ன இந்த ஆளுக்கு இரண்டு சுழி,மூணு சுழிக் குழப்பம் போலிருக் கிறதே என்று நினைக்கி றீர்களா.?

எனக்குப் பேசும்போதோ எழுதும்போதோ நிச்சயமாக னகர,ணகரக் குழப்பம் கிடையாது.

இது கண்ணா அல்ல.

கன்னாதான்

ஃபரிதாபாத்தில் என் உதவியாளராகப் பணியாற்றிய என்.கே.கன்னாதான்.

பஞ்சாபி,சிவப்பாக இருப்பார்.உயரம் கம்மி.

பல கிளை ஆய்வுகளில் என்னுடன் உதவியாளராக வந்தவர் அவர்.மற்றொருவர் டி.ஆர்.சாவ்லா.

எங்கள் ஆய்வின் போது இவர்கள் இருவரும் எனக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டு வருவது என்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது.ஒரு பரிதாப உணர்வுதான்!

மதியம் உணவு நேரத்தில் என்னைசேகர் சாப்!சாப்பிடலாம்” என அன்போடு அழைப்பார் கன்னா.

பல கிளை ஆய்வுகளில் எனக்கு உதவியாளராகப் பணி புரிந்திருக்கிறார்.

குர்கான் நகரில்தான் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்,

எந்தக்கிளை ஆய்வென்றாலும் அங்கிருந்து தினம் வந்து போவார்

ஒரு முறை குர்கான் கிளை ஆய்வே நாங்கள் இருவரும் மேற்கொண்டோம்.

அப்போது கோடைக்கலம்.

டெல்லியின் கோடை பற்றி உங்களுக்குத் தெரியும்.

தினமும் நான் ஃபரிதாபாத்திலிருந்து வந்து போக வேண்டும்

சனிக்கிழமை அரை நாள் வங்கி அலுவல் என்பதால் அந்த மதிய வெயிலில் ஃபரிதாபாத் திரும்புவது கடினம்.

எனவே கன்னா எனக்கு ஓர் அன்புக்கட்டளை இட்டு விட்டார்-சனிக்கிழமைகளில் மதிய உணவை அவர் வீட்டில் முடித்துக் கொண்டு ஓய்வெடுத்தபின் மாலைதான் ஃபரிதாபாத் திரும்ப வேண்டும் ஏன்று.

அது முதல் ஆய்வு முடியும் வரை சனிக்கிழமை மதிய உணவு அவர் வீட்டில்தான்.உணவுக்குப் பின் அவர் குழந்தைகளுடன்--ஒரு பெண்,இரு பையன்கள்--, உடைந்த இந்தியில் பேசிக் கொண்டி ருப்பேன்.பையன்கள் செஸ் ஆட்டத்தில் செய்த தவறுகளைத் திருத்தினேன்.மாம்பழ சீசன்.அவர் சஃபேதா மாம்பழம் வாங்கி வந்தார்.அதை வெட்டித் துண்டுகளாக்கிச் சாப்பிடுவதா அல்லது மாம்பழ ,பால் சாறு அருந்துவதா என்று..குழந்தைகளின் ஆசை மில்க்‌ஷேக்.கன்னா சொன்னார்”சேகர் சாப் நீங்கள் சொல்லுங்கள் .என்ன வேண்டும்”. குழந்தைகளைப் பார்த்து ரகசியமாகக் கண் சிமிட்டி விட்டுச் சொன்னேன் ”மில்க் ஷேக்” இதுபோல் கிட்டத்தட்ட  ஐந்தாறு வாரங்கள்,ஆய்வு முடியும் வரை.

அன்று ஞாயிற்றுக் கிழமை,ஃபரிதாபாத்தில்.வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்தேன்,

ஃபரிதாபாத் கிளை நண்பர்கள் இருவர் வந்தனர்

உற்சாகமாக வரவேற்றேன்

ஆனால் அவர்கள் முகம் இறுகிப்போயிருந்தது.

சொன்னார்கள்”கன்னா இறந்து விட்டார்’

நான் அப்டியே அருகில் இருந்த சோபாவில் சாய்ந்து விட்டேன்.

மிகப்பெரிய அதிர்ச்சி.

மறுநாள் ஓர் ஆய்வில் அவர் என்னுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியவர்

இப்போது.....குர்கான் சென்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பினோம்.

வேறொருவர் என்னுடன் ஆய்வுப்பணியில் சேர்ந்து கொண்டார்.

சில மாதங்களில் தெரிய வந்தது கருணை அடிப்படையில் அவர் மனைவிக்கு எங்கள் வங்கியில் ,குர்கான் கிளையிலேயே வேலை கொடுக்கப்பட்டது என்று.

சில நாட்கள் கழித்து ஒரு விசாரணைக்காக குர்கான் செல்ல வேண்டி இருந்தது.

கிளையில் கன்னாவின் மனைவியைப் பார்த்து நலம் விசாரித்தேன்.

மதிய இடைவேளையின் போது அவர் என்னருகே வந்து ஒரு கவரை நீட்டினார்””இதில் 1500 ரூபாய் இருக்கிறது.என் கணவருக்கு நீங்கள் கடனாக்க கொடுத்த பணம்’

திகைத்தேன்.கன்னாவுக்கு நான் பணம் கொடுத்தது எங்கள் இருவரைத் தவிர யாருக்கும் தெரியாது என எண்ணினேன். ஆனால்,,,

என் கண்களில் கண்ணீர் பெருகியது---அந்த நல்ல மனிதரையும் அவருக்கேற்ற மனைவியையும் நினைத்து!

கன்னா!உன் குடும்பத்துக்கு எந்தக் குறையும் வராது!