ட்ரிங்.ட்ரிங்………
தொலைபேசி.
எடுக்கிறோம்.
”மச்சி!என்ன
பண்ணிட்டிருக்கே?”நண்பன்
”சும்மாதான் இருக்கேன்”
நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சொல்-சும்மா
“எங்க இந்தப் பக்கம்?”
”சும்மா,பாத்துட்டுப்
போகலாம்னு வந்தேன்”
என்ன பொருளில் இந்தச் சொல்லை பயன்படுத்துகிறோம்.?
வேலை ஒன்றும் இல்லாமல்
,எதுவும் செய்யாமல் இருப்பது.
ஆனால் சும்மா இருப்பது என்பது அதுவா?
அருணகிரிநாதர் சொல்கிறார்-
”செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருக பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே”
அவருக்கே பொருள் விளங்கவில்லையாம்!
கந்தரனுபூதி பாடியவருக்கே அனுபூதி
நிலை என்னவென்று தெரியாதாம்!
சும்மா இரு என்பது அனுபூதிநிலை.
சும்மா என்பது மெய்யுணர்வில் வரும் மௌனம்.
சும்மா என்பது இதயம் பேசுகிற மௌன மொழி.
இறைவனுடன் இரண்டறக் கலக்கும்போது
வாய்க்கும் நிலை சும்மா இருத்தல்.
சிவவாக்கியர் சொல்கிறார்-
”செய்ய தெங்கிலே இளநீர்சேர்ந்த
காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோவில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோவில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்பதில்லையே”
சும்மா என்பது பேச்சற்ற
பேரின்பத்தின்குறியீடு.
சும்மா என்பது இதயம் பேசுகிற
மௌனமொழி.
திருமூலர் சொல்கிறார்
”பெம்மான்,பெருநந்தி, பேச்சு அற்ற
பேரின்பத்து
அம்மான் அடி தந்து,அருட்கடல் ஆடினோம்
எம்மாயமும் விடுத்து,என்னைக் கரந்திட்டுச்
சும்மாதிருந்து இடம்சோதனை ஆகுமே.”
--பெருமையுடைய சிவபெருமான் உரையற்று
விளங்கும் நிலையில் அப் பெரியோனடி ஞானத்தாலருட்கடலில் மூழ்கினோம்.எல்லாவிதமான மாயா
தொடர்புகளையும் கடக்கச் செய்து அவற்றினின்றும் வேறுபடுத்திச் செயல் அற்று
இருக்கும்படி செய்வதே சோதனை.
சும்மா இருத்தல் என்பது மிகக்
கடினமான ஒரு செயல்.
எனவே சும்மா இருக்கிறேன் என்று
சொன்னால் நாம் வேறு நிலைக்குப் போனவர்கள் ஆகிறோம்.
நாம் சொல்லும் சும்மா என்பது
பொருளற்ற சும்மா
வேலையின்றி அமர்ந்திருந்தாலும் மனம்
ஊர் மேயப் போகிறது.
அவ்வாறன்றி,
உண்மையில் சும்மா இருத்தல் நிலைக்கு
முயல்வோமா இனி?
டிஸ்கி:பதிவு மாறிப்போச்சோ?!சொக்கா!