தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 29, 2008

காமம் இல்லாக் கதை-4

வழக்கத்தை விடச் சீக்கிரமாக வீடு திரும்பிய மனைவி,தன் கணவன் ஒரு அழகிய இளம்பெண்ணுடன் சல்லாபமாக இருப்பதைப் பார்த்தாள்.

"என்ன இது? உங்களுக்கு உண்மையாக இருக்கும் நல்ல மனைவியான எனக்குத் துரோகம் செய்கிறீர்களா?நீங்கள் எல்லாம் ஒரு மனுஷனா?இந்த நிமிஷமே நான் வெளியே போகிறேன்.விவாக ரத்து நோட்டிஸ் உங்களை வந்து சேரும்"

"லில்லி,லில்லி,நான் சொல்வதைக் கொஞ்சம் கேளேன்.உனக்கு எல்லாவற்றையும் விளக்குகிறேன்."

"நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரரென்பது புரிந்து விட்டது.இருந்தாலும்போகுமுன் என்னதான் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறீர்கள் என்று பார்க்கிறேன்."

"தாங்க்ஸ் லில்லி.நான் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது,இந்தப் பெண் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தாள்.நல்ல உடையணியாமல், சோர்வாகக் காணப்பட்டாள்.பார்க்கப் பரிதாபமாக இருந்தது.அருகில் சென்று விசாரித்தேன்.இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை என்று சொன்னாள். வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன்,ஏதாவது உணவு கொடுக்கலாம் என்று.வீட்டுக்கு வந்து பார்த்தேன்.நேற்று நான் தயார் செய்து உனக்குப் பிடிக்காது வைத்துவிட்ட பிரியாணி இருந்தது.அதை அவளுக்குக் கொடுத்தேன்.ருசித்துச் சாப்பிட்டாள்.அதன் பின் அழுக்காக இருக்கிறாளே என்று 'குளிக்கிறாயா' என்று கேட்டேன். சரி என்று குளிக்கப் போனாள். அவளது உடைகள் கிழிந்திருப்பதைக் கண்டு,போன தீபாவளிக்கு நான் வாங்கிக் கொடுத்த,உனக்குப் பிடிக்காததால்,அணியாமலே இருந்த புடவையை கொடுத்தேன்.கடைசியாகப் புறப்படும் முன்,கதவருகே நின்று,கண்களில் கண்ணீர் ததும்பக் கேட்டாள்-

"ஸார்,உங்கள் மனைவி உபயோகிக்காத இன்னும் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?"

"அதனால்தான் -----------------!!"

(இது எப்படிக் காமம் இல்லாக்கதை என்கிறீர்களா?.கடைசி வரியில் பதில்!!)

ஞாயிறு, செப்டம்பர் 28, 2008

கருத்துக்களின்றி!

தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்;

யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

------------------------------------------------------

எண்ணிலா நோயுடையார்-இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்,
கண்ணிலாக் குழந்தைகள் போல்-பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்.--------(பாரதியார்)

சனி, செப்டம்பர் 27, 2008

வாழ்க்கையின் முடிவு

வியாழனன்று(25-9-08) மதியம் ஒரு மணி அளவில் கணினி முன் அமர்ந்து பதிவில் ஏதாவது தட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது,தொலை பேசி அழைத்தது.வந்த செய்தி நல்ல செய்தி அல்ல-திருவண்ணாமலையில் இருந்த என் தமக்கையின் கணவர் காலமானர்.எண்பது வயதைத் தொட்டுக் கொண்டிருந்தவர்.விமானப் படையில் பணி புரிந்தவர்.வாழ்க்கையில் தன் எல்லாக் கடைமைகளையும் குறைவரச்செய்து முடித்தவர்.ஆனாலும் அச்செய்தி அதிர்ச்சியை அளிக்கத்தான் செய்தது.கண்களில் கண்ணீர் வரவழைக்கத்தான் செய்தது.இனி என் தமக்கை முழுவதும் தன் மகனைச் சார்ந்தே வாழவேண்டுமே,அவள் நன்கு நடத்தப் படுவாளா என்ற கவலை எழுந்தது.சில முக்கிய வேலைகளை முடித்துவிட்டு 3மணிக்குப் பேருந்தைப் பிடித்து 7 மணி அளவில் திருவண்ணாமலை சென்றடைந்தேன்.

வீட்டின் ஹாலில் குளிர்பதனப் பெட்டியில் உடல் வைக்கப் பட்டிருந்தது(அன்று மதியம் வரை அவ்ர் அவரது பெயரால் அழைக்கப் பட்டிருந்தார். இப்போது வெறும் உடல்.)வீட்டில் அனைவரும் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.சொந்தக்காரர்கள்,தெரிந்தவர்கள் வரும்போதெல்லாம், எப்படி நடந்தது என்று ஒவ்வொருவருக்கும் விவரமாகச் சொல்லப்பட்டது. யாராவது வரும்போது அழுகுரல்கள் ஓங்கி ஒலித்தன.மறுநாள் மதியம் 12 மணிஅளவில் உடலுக்கு எரியூட்டப்ப்பட்டது.காட்டிலிருந்து வீடு திரும்பிக்,குளித்துச் சாப்பாடு முடிந்தது.நான் மாலை 3 மணிக்குத் திரும்ப முடிவு செய்தேன்.ஹாலில் அனைவரும் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம். குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தனர்.பெரியவர்கள் எதைப் பற்றியெல்லொமோ பேசத் தொடங்கினர்.கலகலப்பும் சிரிப்பும் திரும்பி வந்தன.இதே ஹாலில்தான் இன்று காலை வரை என் அத்தானின் உடல் குளிர் பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.இப்போதோ,எல்லோரும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறோம்.

எனக்குத் திருமந்திரப் பாடலொன்று நினைவுக்கு வந்தது.

"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூறையங்காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே."

இதுதான் வாழ்க்கை.

இது நட்பா?காதலா?(இறுதிப் பகுதி)

மாலை 6 மணி அளவில் மேரியிடமிருந்து ஃபோன் வந்தது.இன்னும் அரை மணி நேரத்தில் புறப்படப்போவதாகத் தெரிவித்தாள்.நான் அங்கு சென்று அவளைஅழைத்து வருவதாகக் கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றேன்.அரங்கின் வாசலிலே மேரி நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி ஐந்தாறு பேர் நின்று அவளுடன் பேசிக் கொண்டிருந்தனர்.என்னைக் கண்டதும் மேரி அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.அவர்கள் மறுநாள் அவளது உரைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினர்.நான் மேரியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.காஃபி அருந்தி விட்டுப் பல விஷயங்கள் பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம். இரவு உணவுக்காக வெளியே சென்றோம்.அவள் விருப்பப்படி சுவையான தென்னிந்திய உணவு கிடைக்கும் உணவகத்துக்குச் சென்றோம். மேரிக்கு அந்த உணவு மிகவும் பிடித்திருந்தது.
வீடு திரும்பிய பின் சிறிது நேரம் வரவேற்பறையில் சோஃபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.அவளிடம் நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்கத் தயங்கிக்கொண்டே இருந்தேன்.திடீரென்று மேரி கூறினாள்”பால்கனியில் அமர்ந்து பேசுவோமே,கிருஷ்”பால்கனிக்கு வந்தோம்.அவள் விருப்பப் படித் தரையில் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்துகொண்டோம். அவள் கண்கள் எங்கோ தொலைவானத்தில் லயித்திருந்தன . ”இப்படித்தான் நாங்கள் குடும்பமாக பால்கனியில் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம்.அது ஒரு காலம்,கிருஷ்”-அவள் சொன்னாள் நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவள் கடந்தகால நினைவுகளில் சஞ்சரிப்பதைப் புரிந்து கொண்டேன் . இதுதான் சரியான நேரம்;கேட்டு விடலாம்

“மேரி,உன்னிடம் ஒன்றுகேட்கவேண்டும். கேட்கலாமா?”
”உம்”எங்கோ லயித்தபடி மேரி.
“திடீரென்று என் தொடர்பை ஏன் துண்டித்தாய் மேரி.?”
அவள் நிகழ் காலத்துக்கு வந்தாள்.என்னையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.கண்கள் சிறிது கலங்கியிருப்பது போல் தோன்றியது.பின் சொன்னாள்”மன்னித்துவிடு,கிருஷ்.இதை நீ கேட்டு விடுவாயோ எனப் பயந்திருந்தேன்.கட்டாயம் கேட்க வேண்டுமே எனத் தவித்திருந்தேன். கேட்டால் எப்படிப் பதில் சொல்வது எனத் திகைத்திருந்தேன்.அந்த நேரத்தில், ஒரு அதீத சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது அதற்கு மாற்றாக எனக்கு ஒரு துணை தேவைப்பட்டிருக்கிறது-காற்றில் ஆடும் கொடிக்கு ஒரு கொம்பு தேவைப் படுவது போல்.உன்னிடம் நான் எதிர் பார்த்திருந்தது அதுவாகத்தான் இருக்க வேண்டும்.நமது நட்பு வேறு விதமாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.அந்த நிலையில் உன் கடிதம் எனக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.அது கோபமாக மாறி உன் தொடர்பைத் துண்டிக்கக் காரணமாகி விட்டது.காலம் செல்லச் செல்ல என் கோபம் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தேன்.நீ எப்போதுமே ஒரு மிக நல்ல நண்பனாகத்தான் இருந்திருக்கிறாய்.தவறு என்னுடையதுதான்.”
நான் அவளை இடை மறித்தேன்.”போதும் மேரி.நடந்ததைப் பற்றி இனிப் பேச வேண்டாம். இந்தக் கணம் நம் நட்பின் கணம்.அதற்காக வாழ்வோம்”
” நன்றி கிருஷ்.மனம் லேசாகி விட்டது.இந்தக் கணத்துக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.” பின் கேட்டாள் ”உன் மடியில் தலை வைத்துச் சிறிது நேரம் படுத்துக் கொள்ளட்டுமா,கிருஷ்?”.ஒரு குழந்தை போலக் கெஞ்சலாக அவ்ள் கேட்டது என்னை நெகிழ வைத்தது.”செய் ,மேரி”
அவள் என் மடியில் தலை வைத்து உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.ஒரு தாயின் மடியில் படுத்துறங்கும் குழந்தை போல உறங்கும் அவள் முகத்தையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தால் ஒரு பெண்ணால்,எத்தனைவயதானவளாக இருந்தாலும்,ஒரு ஆணின் மடியில் தலை வைத்துச் சலனமின்றி உறங்க முடியும்?இது நட்பின் மிக உன்னத நிலை.
அரை மணி நேரம் சென்று அவள் கண் விழித்தாள்.பரபரப்புடன் கேட்டாள்”நீண்ட நேரம் தூங்கி விட்டேனா?என்னை எழுப்பியிருக்கலாமே கிருஷ்?”
” எழுப்ப மனம் வரவில்லை மேரி”
“சரி,நான் என் அறைக்குப் போகிறேன்.நாளைய உரையை சிறிது மெருகேற்ற வேண்டும்.நீ போய் உறங்கு”மேரி தன் அறைக்குச் சென்றாள்.நானும் உறங்கச் சென்றேன்.
மறு நாள் காலையில் அவளை பல்கலைக் கழகத்தில் விட்டு வந்தேன்.மதியம் இரண்டு மணிக்கு,முன்பே பேசிவைத்தபடித் தயாராக இருந்த அவளது பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.காத்துக் கொண்டிருந்த மேரியை அழைத்துக் கொண்டு விமானநிலையம் சென்றேன்.அவள் உள்ளே செல்லும் முன் அவளிடம் சொன்னேன்”அடிக்கடி தொடர்பு கொள்,மேரி.நானும் உன்னிடம் தொலை பேசுகிறேன். ”
அவள் முகத்தில் சிறிது சோகம் தெரிந்தது.”கிருஷ், கடைசி நேரத்தில் சொல்லலாம் என்றுதான் இது வரை சொல்லவில்லை.அடுத்த வாரம் நான் அமெரிக்கா செல்கிறேன்.என் துறையில் பிரபலமான இரு பேராசிரியர்கள் ஒரு ஆராய்ச்சியில் அவர்களுடன் இணைந்து பணி புரிய என்னை அழைத்திருக்கின்றனர்.இது மிகப் பெரிய கவுரவம்.இதற்குத் தகுதி உள்ளவளாக நான் செயல்பட வேண்டும்.அங்கு சென்ற பின் என் முழுக் கவனமும் ஆராய்ச்சியில்தான் இருக்க வேண்டும்.உண்ணவும்,உறங்கவும் கூட மிகக் குறைந்த நேரமே எடுத்துக்கொள்ள வேண்டும்,அந்நிலையில் அடிக்கடி தொலை பேசுவதோ,மின்னஞ்சல் அனுப்புவதோ இயலாமல் போகும்.ஆனால் எப்போதும் என் நினைவில் நீ இருப்பாய்.என் வாழ்க்கையில் கடைசி வரை ஒரே நட்பு,உறவு எல்லாமே நீதான்,கிருஷ்”
நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.சமாளித்துக் கொண்டுசொன்னேன்”வாழ்த்துகள்,மேரி.நீ உன் பணியில் வெற்றி பெற்றுப் பேரும் புகழுடன் தாயகம் திரும்ப நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.நாம் மீண்டும் சந்திக்கும் அந்த நன்னாளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பேன்.”
மேரி என்னை லேசாக அணைத்துப் பின் என் கையைக் குலுக்கி விட்டு உள்ளே சென்று மறைந்தாள்.
நான் கனத்த மனத்துடன் என் காரை நோக்கி நடந்தேன்.
–x–x–x–x-x–x
ஒரு மாதத்துக்குப் பின் அமெரிக்காவின் டல்லஸ் நகர உள்ளூர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தி-”நேற்று நடந்த சாலை விபத்து ஒன்றில் ஒரு கார் ஒட்டுநரும் காரில் பயணம் செய்த பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.அந்தப் பெண் ஒரு இந்தியர்.பெயர் மேரி தாமஸ்”
இது ராதாகிருஷ்ணனுக்குத் தெரியாது. அவன் மேரியின் வெற்றிக்காகப் பிரார்த்தித்துக்கொண்டே இருப்பான்.அவள் வருகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டே இருப்பான்.அவன் அப்படியே இருக்கட்டும்.

(பழைய வீட்டிலிருந்து)

புதன், செப்டம்பர் 24, 2008

இது நட்பா?காதலா?(இரண்டாம் பகுதி)

சில மாதங்களுக்குப்பின் ஒரு பயிற்சிக்காகத் தலைமை அலுவலகம் சென்ற போது பெங்களூரிலிருந்து வந்த சில நண்பர்கள்,மேரி பணியிலிருந்து விலகி வேறு பணிக்காக டில்லி சென்று விட்டதாகத் தெரிவித்தனர். அவ்வப்போது மேரியின் நினைவு வரும்.ஒரு பெண்ணால் நல்லதொரு நட்பை இவ்வாறு திடீரென்று வெட்ட முடியுமா என்று யோசிக்கும் அதே நேரத்தில் நான்தான் அந்நட்பை/உறவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கொச்சைப் படுத்தி விட்டேனோ என்ற எண்ணமும் வரும்.

அந்த மேரிதான் நாளை வருகிறாள்.இத்தனை நாட்களுக்குப்பின் சென்னைக்கு வரும் வாய்ப்பு வந்ததும் என் நினைவு அவளுக்கு வந்திருக்கிறது. சென்னை மண்டல அலுவலகத்திலிருந்து என் விலாசத்தை,தொலைபேசி எண்ணை அறிந்து கொண்டிருப்பாள்.

அன்றிரவு எனக்குச் சரியான உறக்கமில்லை.இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மேரியைச் சந்திக்கப் போகிறேன்.எப்படியிருப்பாள்?எப்படிப் பழகுவாள்?இப்படிப் பல எண்ணங்கள் என்னெஞ்சில் அலை மோதி உறக்கம் வராமல் செய்தன.காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு வெகு நேரம் முன்பாகவே விமான நிலையம் சென்று தவிப்புடன் காத்திருந்தேன்.விமானம் தரையிறங்கிய அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் வெளி வரும் மனிதர்களைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அதோ,அவள் வந்துவிட்டாள்.அவள்தான். இடைப்பட்ட காலம் அவள் உடலைச் சிறிது சதைப் பிடிப்பாக்கியிருந்தது. அதனால் அவள் அழகு கூடியிருந்ததே தவிரக் குறையவில்லை. அவள் நடையில் நளினமும், கம்பீரமும் கலந்து இருந்தது.எவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு நளினம்,எவரையும் மரியாதையுடன் நோக்கவைக்கும் ஒரு கம்பீரம்.அவளும் என்னைப் பார்த்து விட்டாள்.அங்கிருந்தே என்னைப் பார்த்துக் கையசைத்தாள்.”ஹாய்,கிருஷ்” என்றபடியே என்னை நெருங்கி என் கையைப் பிடித்தாள்.எனக்கு அவளது முதல் தொடுகை நினைவுக்கு வந்தது.”ஹலோ,மேரி” என்றபடியே அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டேன்.இருவரும் என் மகிழ்வூர்தியை!(கார்) நோக்கி நடந்தோம்.கார் புறப்பட்டதும் அவள் கேட்டாள்”இப்போது எங்கே போகிறோம்,கிருஷ்?”

“என் வீட்டுக்கு.ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதை விட அதிக வசதியை உனக்கு நான் செய்து தருகிறேன்”சிரித்துக் கொண்டே சொன்னேன்.”உன் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் ஒரு இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.”-மேரி

” யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை.வந்து பார்.”என் பதில்.காரில் சென்று கொண்டிருக்கும்போதே நான் கேட்டேன்”மேரி,மிஸ்டர்.மேரி என்ன செய்கிறார்?”

அவள் சிரித்தாள்”நான் இன்னும் மிஸ்தான்”

” ஏன் மேரி?”-அவள் பதிலளித்தாள்”சில கேள்விகளுக்குப் பதில் கிடையாது அன்பு நண்பரே.அது சரி, உங்கள் மறுபாதி என்ன செய்கிறார்?குழந்தைகள்?”

“பொறு,பொறு.வீட்டுக்குப் போனதும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.”

வீட்டை அடையும் வரை என் குடும்பம் பற்றிய அவளது கேள்விகளுக்குப்பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினேன்.அவள் ஜெ.என்.யு.டில்லியில் பணி புரிவதையும் ஒரு கருத்தரங்குக்காக சென்னை வந்திருப்பதையும் அறிந்து கொண்டேன்.நான் வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று தற்போது ஒரு”தொழில்துறை-வங்கிக்கடன்” ஆலோசகனாக இருப்பதையும் பற்றிக் கூறினேன்.

என் குடியிருப்பை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு என் “ஃப்ளாட்”டை அடைந்து பூட்டிய கதவைத் திறக்க சாவியை எடுத்தபோது அவள் கேட்டாள்”என்ன, கிருஷ்,வீட்டில் யாரும் இல்லையா?”

உள்ளே நுழைந்துகொண்டே சொன்னேன்”இல்லை மேரி.இப்போது நான் மட்டும்தான்”

“அப்படியென்றால்–?”

” இல்லை,மேரி.நீ நினைப்பது போலில்லை.அவள் இப்போது இல்லை பத்தாண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டாள்.என் இரு பையன்களும் பிலானியில் படிக்கிறார்கள்.எனவே இப்போது நான் தனி.”

அவள் என் தோளில் கை வைத்து ஆறுதலாக அழுத்தினாள்,”வருந்துகிறேன், கிருஷ்.”"விடு மேரி .எல்லாம் பழைய கதை.”

அவளை அவளுக்கென்று ஒதுக்கிய அறைக்கு அழைத்துச்சென்றேன்.”இது உன் அறை.எல்லா வசதிகளும் உள்ளது”.

“சரி கிருஷ்.நான் என்னைச் சிறிது புதிப்பித்துக் கொண்டு புறப்படுகிறேன்.”

” நான் உன்னை அங்கு கொண்டு சேர்க்கிறேன். நீ இங்கு இருக்கும் வரை நான்தான் உனக்கு வாகன ஓட்டுனர்.”

சிறிது நேரத்தில் அவள் புறப்பட்டாள். பல்கலைக்கழக வளாகத்தில் அவளை இறக்கி விட்டேன்.”கிருஷ்,மாலை சந்திப்போம்.நிறையப் பேசலாம் ”

வீட்டுக்குத் திரும்பினேன்.எந்த வேலை யிலும் கவனம் செல்லவில்லை.மாலையின் வருகைக்காகக் காத்திருந்தேன்.

(பழைய வீட்டிலிருந்து)

கிசு கிசுக்கள்

வலைப் பதிவுகளில் 'கிசு கிசு' அதிகமாயிடுச்சாம்.எங்கயோ படிச்சேன்.சமீபத்தில் ஆற்றின்சப்தம் கேட்கும் ஒரு பதிவில்,'யார் முந்தி,யார் பிந்தி"ன்னு ஏதோ புள்ளி விவரம் எடுத்துவிட,அதைப் பார்த்த" நல்லூழ்ப் பார்வை" கொண்ட பதிவர் இது எதோ கோல்மால் அப்படின்னு சொல்ல,மயிலின் பெயரைக் கொண்ட
ஒருவர் இவரைதன் ஏஜண்ட் என்று சொல்ல,சென்னையின் ஒரு முனையைப் பேரில் கொண்ட ,ஆற்றொலிப் பதிவர் பதிவுலகக் 'கிசு,கிசு'பற்றிப் புலம்பி ஜெமினி கணேசன் ,ஜீவன் நடித்த திரைப் படத்தின் பெயர் சொல்லி மறுக்க--------
"அப்பா--இப்பவே கண்ணைக் கட்டுதே"

(இது முழுக்க முழுக்க மொக்கை.மொக்கையை மொக்கையென்று புரிந்து கொள்ளும் மொக்கை மனம் கொண்டவர்களுக்காக இந்த மொக்கைச்சாமி எழுதியது.ஒன்று கவ்னித்தீர்களா?மொக்கை,கும்மி இரண்டிலும் இருப்பவை ஒரே எழுத்துகள்தான்.பஞ்சதந்திரத்தில் (திரைப்படம்)வரும் டெலுகு,கொல்டி போல்.அடியுங்க கும்மி!)

செவ்வாய், செப்டம்பர் 23, 2008

இது நட்பா?காதலா?(முதல் பகுதி)

தொலைபேசி மணி ஒலித்தது.எடுத்தேன்,”ஹரி ஓம்,ராதாகிருஷ்ணன் பேசுகிறேன்”.மறுமுனையிலிருந்து குரல்”ஹாய்,கிருஷ்!என்ன இது ஹரி ஓம் எல்லாம்?யாரென்று தெரிகிறதா?’

என் கடவுளே!இது அவள்தான்.என் வாழ்க்கையில் என்னைக் கிருஷ் என்று அழைத்திருக்கும் ஒரே நபர்.இத்தனை ஆண்டுகளுக்குப் பின்!மேரி! மேரியேதான். ”மேரி!என்ன சுகமான அதிர்ச்சி!அன்று போலவே இன்றும் உன் குரல் இனிமையாகவே இருக்கிறது.எங்கே இருக்கிறாய்?எப்படி இருக்கிறாய்? திடீரென்று என்ன தொலை பேசுகிறாய்?”

” மெள்ள, மெள்ள,கிருஷ்!எல்லாக்கேள்விகளுக்கும் இப்போதே பதில் சொல்லி விட்டால் நாளை நேரில் பேசுவதற்கு ஒன்றும் இருக்காது.”

” நேரில்?நீ சென்னை வருகிறாயா?உண்மையாகவா”

“ஆம்.நாளை காலை டில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருகிறேன்.காலை 10.30க்கு விமானம் தரையிறங்கும்.விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல வருவாயா?”

“நிச்சயமாக.மகிழ்ச்சி என்னுடையது.”

“கிருஷ்!நான் இரண்டு நாள் தங்குவதற்கு ஏதாவது நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்து விடு”

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.நீ வா”

இருவரும் தற்காலிக விடை பெற்றுக் கொண்டோம்.

தொலைபேசியை வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தேன்.என் மனம் கடந்த காலத்துக்குச் சென்றது.அந்த நாட்கள்………….

அந்த வங்கியில் அதிகாரியாக நியமனம் பெற்று அன்று எங்கள் பயிற்சி ஆரம்பம்.ஓராண்டுப் பயிற்சியில் முதல் இரண்டு மாதங்கள் தலைமை அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள்.பயிற்சி இயக்குனரிடம் என் வருகையை அறிவிக்க அவர் வகுப்புகள் நடக்க இருக்கும் ‘போர்டு’ அறைக்கு என்னைப் போகச் சொன்னார்.கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.ஏ.சி யின் குளிர் என்னைத் தாக்கியது.வெளியே மழை விடாது கொட்டிக் கொண்டிருக்கும்போது இது வேறா?உள்ளே ஒரு மேசையில் வங்கி பற்றிய துண்டுப் பிரசுரங்களை அடுக்கிக் கொண்டிருந்த பெண் திரும்பி என்னைப் பார்த்தாள். இயல்பான புன்னகையுடன் என்னை நோக்கி வந்தாள்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.” நான் மேரி தாமஸ்.” குலுக்குவதற்காகக் கையை நீட்டினாள்.

கையைப் பற்றிக் குலுக்கியவாறே சொன்னேன் ”நான் ராதாகிருஷ்ணன்.” -முதல் முதலாக ஒரு பெண்ணின் கை பற்றிக் குலுக்கும் அனுபவம்.என்ன மென்மையான கரம்!

“நீங்கள் பெங்களூரா?பார்த்த முகமாகத் தெரிகிறது”-அவள் கேட்டாள்.”இல்லையில்லை.நான் மெட்ராஸைச்சேர்ந்தவன்.இன்று வரை பெங்களூர் சென்றதேயில்லை”-என் பதில்.நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மற்றவர்கள் வரத்துவங்கினர்.அறிமுகப் படலம் ஆரம்பமாயிற்று.20 பேரில் எட்டுப் பேர் தமிழர்கள்.

சிறிது நேரம் சென்று பயிற்சி இயக்குனர் வந்து எங்களையெல்லாம் இருக்கையில் அமரச்சொன்னார்.பெரிய மேசையைச்சுற்றி இருபது இருக்கைகள்.இடது புறம் முதல் இருக்கையில் சுகுணா என்ற தமிழ்ப் பெண்.அடுத்து மேரி.அவள் அமர்ந்து என்னைப் பார்த்தாள்.நான் சிறிதே தயங்கும் போது ஆந்திர நண்பர் ஒருவர் அமர்ந்து விட்டார்.மேரியின் உதடுகளில் ஒரு புன்முறுவல்-என் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்த்து என நினைத்தேன்.அடுத்த இருக்கையில் நான்.

ஆரம்ப விழா,பின் வகுப்புகள் தொடங்கின.நான் இடையிடையே கேட்ட கேள்விகள் பாராட்டப்பட்டன.ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்த மேரியின் முகத்தில் வியந்து பாராட்டும் ஒரு பாவனை.-அது மேலும் எனக்கு ஊக்கம் அளிப்பதாயிருந்தது.அன்று மாலை வகுப்புகள் முடிந்த பின் மேரி சொன்னாள்”நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், மிஸ்டர்.ராதாகிருஷ்ணன்.ஓ! ஒவ்வொரு முறையும் உங்களை முழுப்பெயரில் அழைப்பது கஷ்டமாயிருக்கிறது.”

நான் சொன்னேன்”சுருக்கமாக ராதா என்று அழையுங்களேன் மிஸ்.தாமஸ்.என் நண்பர்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள்”

“எனக்குப்பிடிக்கவில்லை.ஒரு பெண்ணை அழைப்பது போல் இருக்கிறது .உங்களை ‘கிருஷ்’என்று அழைக்கிறேன்.ஆனால் இந்த மிஸ் தாமஸ் எல்லாம் வேண்டாம்.நீங்கள் என்னை வெறும் மேரி என்றுதான் அழைக்க வேண்டும்” நான் குறும்பாகச்சொன்னேன்”சரி,வெறும் மேரி”.அவள் ’குபீர்’ என்று சிரித்துப் பின் சொன்னாள் “நீங்கள் மிகவும் குறும்புக்காரர்”

” சரி,மேரி,நண்பர்களுக்குள் என்ன மரியாதை?இந்த நீங்கள்,நாங்கள் எல்லாம் வேண்டாமே.”அவள்சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.(ஆங்கிலத்தில் நீ,நீங்கள் என்பதற்கு வேறுபாடு இல்லாவிட்டாலும் பேசுகின்ற தொனியில் அதைப் புரிந்து கொள்ளலாம்.)

ஆக,முதல் நாளே நாங்கள் நெருங்கிவிட்டோம்.மறு நாள் முதல்,வகுப்பு தொடங்குமுன்,இடை வேளையில் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம்.எங்களுக்கு நடுவில் அமர்ந்த நபர் பின்னால் சாய்ந்து உட்கார்ந்தால் முன்னே சென்றும்,அவர் முன்னால் சாய்ந்தால் நாங்கள் பின் சென்றும் பேசிக் கொண்டிருப்போம் .சில மாலைகளில் அருகில் உள்ள ஒரு குன்றின் மீது அமர்ந்தபடி நேரம் போவது தெரியாமல் பேசுவோம். திடீரென்று வரும் மழையில் நனைந்த படித்திரும்புவோம் .எங்களுக்குப் பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது-எங்கள் இளமைப் பருவம்,கல்வி,கல்லூரி வாழ்க்கை,குடும்பம் இப்படி.சில சமயம் என் தமிழ் நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள்.நான் அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளுவேன்.ஏதோ சில காரணங்களால் நாங்கள் ஒருவர் பால் மற்றவர் அதிகமாக ஈர்க்கப்பட்டோம்.

ஒரு நாள் அவள் கேட்டாள்”யாரையாவது காதலித்திருக்கிறாயா,கிருஷ்?”

அப்போதுதான் நான் அவளிடம் என் ரயில் காதல் பற்றிச் சொன்னேன். கேட்டுவிட்டு அவள் சொன்னாள்”அந்தப் பெண் உன்னை மிகவும் பாதித்திருக்கிறாள் என்று உணர்கிறேன்.ஏன் கிருஷ் அவளைத் தேடுவதற்கான எந்த முயற்சியும் நீ எடுக்கவில்லை?திருச்சியில் அவளைத் தேடிப் பார்த்திருக்கலாமில்லையா?”

நான் சொன்னேன்”பயம்,மேரி.என் நடுத்தர வர்க்கத் தற்காப்பு மனப்பாங்கு. வாழ்க்கை பற்றிய பயம்.”

அவள் முகத்தில் லேசாகக் கோபம் தோன்றியது.”இந்த விஷயத்தில் உன் நடத்தை எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது”.

நிலைமையைச் சரியாக்க நான் வினவினேன்”நீ எப்படி மேரி?ஏதாவது காதல்?’”

சிறிது இறுக்கம் தளர்ந்தவளாய் அவள் பதிலளித்தாள்.”இல்லை.இன்றுவரை என் கற்பனை ராஜகுமாரனை நான் சந்திக்கவில்லை.”நான் அவளைக் கூர்ந்து பார்த்தேன்.அந்தப் பளிங்கு முகத்தில் பொய்மை இல்லை;கள்ளம் இல்லை.

நடுவில் ஒரு நாள் எங்களுடன் பயிற்சியில் இருந்த கிறிஸ்தவ நண்பர் ஒருவருக்குத் திருமணம்.அருகில் இருந்த ஓர் ஊர் மாதா கோவிலில் மாலை திருமணம்;பின் ஓட்டலில் வரவேற்பு.மேரிக்கு வேறு அலுவல் இருந்த காரணத்தால் வர இயலவில்லை.எனக்கு ஏமாற்றந்தான்.நாங்கள் ஆண்கள் மட்டும் சென்றோம்.அந்தக் கலாசாரமே புதிதாக இருந்தது.திருமணம் முடிந்த பின் மணப்பெண்ணின் கையில் எல்லோரும் முத்தமிட்டோம்!பின் வரவேற்பில் ஆண் பெண் எல்லோரும் கட்டிப் பிடித்து ஆடினார்கள்.நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.பல வித பானங்கள்,சைவ-அசைவ விருந்து(பஃபே) என்று எல்லாமே எனக்குப் புதிதான அனுபவங்கள்.

மறுநாள் மேரி கேட்டாள்”எப்படி இருந்தது கிருஷ், திருமணம்?”

“எனக்கு ஒரு கலாசார அதிர்ச்சி.எல்லாமே ஒரு புதிய அனுபவம்”-நான் .

” நடனம் இருந்ததா? நீ நடனமாடினாயா”

நான் சிரித்தேன்.”நானா?நடனமா?நடக்கவே முடியாது.நடனத்தைப் பொருத்தவரை நான் ஒரு பூஜ்யம்.”

” நான் கற்றுத்தரட்டுமா?”ஆர்வமாய்க் கேட்டாள்

“அய்யய்யோ!ஆளை விடு.என்னால் முடியாது”.அவள் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றத்தின் சாயல் பரவி மறைந்ததோ?நான் அவளை ஏமாற்றி விட்டேனோ?தெரியவில்லை.

பயிற்சிக்காலம் முடிந்து புறப்படும் நாள் வந்தது.எல்லோரும் மற்றவர்களிடம் விடை பெற்றுக் கொண்டோம்.நானும் மேரியும் ஒன்றும் பேசாமலே அலுவலக வாசல் வரை நடந்து வந்தோம்.அங்கு நின்றோம்.நான் மேரியின் கைகளைப்பற்றிக்கொண்டு சொன்னேன்”இந்தப் பயிற்சிக் காலத்தை இனிமையாக்கியது உன் தூய நட்புதான் மேரி.அந்த நினைவுகளுடனே பிரிகிறேன்.தொடர்பில் இருப்போம்.மீண்டும் சந்திப்போம்”ஒரு மெலிதான சோகம் என்னுள் பரவியிருந்தது.மேரியின் அழகிய கண்கள் கலங்கியிருந்தன.”சென்று வருகிறேன்,கிருஷ்.இறைவன் நமக்குத் துணையிருக்கட்டும்.”

பிரிந்தோம்.எங்கள் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து நடந்தது.எங்கள் அலுவலக வேலையின் பளு,எங்கள் இன்ப நிகழ்வுகள் ,சோகங்கள் எல்லவற்றையும் கடிதங்களில் பகிர்ந்து கொண்டோம்.

ஒரு நாள் அந்தக் கடிதம் வந்தது-விமானப்படையில் பணி புரிந்து வந்த அவள் அண்ணன் ஒரு ‘மிக்’விமான விபத்தில் இறந்த செய்தியைத்தாங்கி.அவள் மிகவும் உடைந்து போயிருந்தாள்.அவள் அண்ணனை மிகவும் நேசித்தவள்.அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ஒரு கடிதம் எழுத நீண்ட நேரம் யோசித்தேன்.பல எண்ணங்கள் என்னுள் அலை மோதின.கடைசியில் எழுதினேன்”அன்பு மேரி.இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்புதான்.உன் அண்ணன் இடத்தில் நான் இருக்கிறேன்.உன் வாழ்நாள் முழுதும் உனக்கு ஒரு அண்ணனாக நான் இருப்பேன்.”

அவளிடமிருந்து பதில் வரவில்லை.மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை.அவள் பணி புரிந்த வங்கிக் கிளைக்கு தொலை பேசினேன். அவளை அழைப்பதாக யாரோ சொன்னார்கள்.பல நிமிடக் காத்திருப்புக்குப் பின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவளுடன் தொடர்பு கொள்ள நான் செய்த முயற்சிகள் அனத்தும் பலனற்றுப் போயின.பெங்களுர் சென்று அவளைப் பார்க்க முடியாமல் என்னுள் ஏதோ ஒரு உணர்வு.(குற்ற உணர்ச்சி?)

எங்கள் தொடர்பு அற்றுப் போயிற்று .

(இன்னும் வரும்)

(பழைய வீட்டிலிருந்து)


ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

கொடிது,கொடிது.

சென்ற கும்பமேளாவின்போது(2000-2001) நான் அலகாபாதில் பணி புரிந்து கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகாமகம் போன்றதுதான் இக் கும்பமேளா என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.ஒரு அரசுடைமையாக்கப் பட்ட வங்கியில் முதல் மேலாளராகப் பணி புரிந்து வந்ததால் அரசு அதிகாரிகளின் துணையுடன் முக்கிய நாட்களில் திரிவேணி சங்கமத்தில் எளிதாக நீராட முடிந்தது.

இக் கும்பமேளா பற்றி எண்ணும்போதெல்லாம்,அதனுடன் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் சேர்ந்தே நினைவுக்கு வரும். முதலில் பிரமிக்க வைக்கும் அந்த மக்களின் நம்பிக்கை.மாக மாதம் என்றழைக்கப் படும் அந்த மாதம் முழுவதும் பல ஊர்களிலிருந்து கையில் மிகக் குறைந்த சமையல் சாதனங்கள், துணிமணிகளுடன் வந்து,கிடைத்த இடத்திலே தங்கி (பல நேரங்களில் வானமே கூரை)அந்த நடுக்கும் குளிரையும் பொருட் படுத்தாமல் தினமும் நதியில் நீராடி கடவுளை நினைத்தே வாழும் அம்மக்களின் நம்பிக்கை.(இரண்டு ஸ்வெட்டர் அணிந்தும் பகல் நேரத்தில் நடுங்கிக் கொண்டே வங்கியில் பணி புரிந்து வந்தவன் நான்.)

அடுத்தபடியாக மூன்று கோடி மக்கள் வந்திருந்தும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் திறமையாக அனைத்தையும் கையாண்ட நிர்வாகம்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும் தவறாமல் எங்கிருந்தெல்லாமோ வரும் சாதுக்கள்கூட்டம்.

இவை அனைத்தையும் பின் தள்ளி இன்று நினைத்தாலும் என் மனத்தைப் பிசையும், கண்களில் கண்ணீர் வரவழைக்கும்,செய்தி-அந்தத் திருவிழாவுக்குத் தங்கள் வயதான தாய்/தந்தையுடன் வந்த சிலர் அந்தக் கூட்டத்தில் அவர்களைத் தனியே தவிக்க விட்டுச் சென்று விட்ட கொடுமை!எழுத்தறிவற்ற பாமரர்களான அவர்கள் தங்களைப் பற்றி,தங்கள் ஊர் பற்றி,உறவினர் பற்றி எந்தத்தகவலும் கொடுக்க இயலாதவர்களாய் , நடுங்கிக் கொண்டு, அறியாத ஒரு ஊரில் நிர்க்கதியாக நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் உங்கள் நெஞ்சில் ரத்தக்கண்ணீர் வரவில்லையா?ஏன் இந்த நிலை?இதற்குக் காரணம் வறுமையா? பெற்றோரைக் கூட அநாதையாக விடும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானதா அவர்கள் வறுமை?என்ன செய்யப் போகிறோம் நாம்?

“ஜகத்தினை அழிக்கலாமா?!”

(பழைய வீட்டிலிருந்து)

காமம் இல்லாக் கதை-3

"ஏய்,சொர்ணம்,சொர்ண நாயகி,இங்க வாடி.ஒரே ஒரு தடவை."

"உங்களுக்கு வேற வேலையில்லை.பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடினானாம். "

"யாருடி கிழவன்?கையை மடக்கிக் காட்டறேன் பாரு,எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு.இரும்பு உடம்புடி, தெரியுமா?"

"ஆமாம் உங்க உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம்? இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இருங்க.எனக்குத் தூக்கம் வருது."

"எனக்கு வரல்லையே.வாடி.ஒரே ஒரு தடவை மட்டும்."

"அய்யோ,சொன்னாக் கேக்க மாட்டிங்களே.எனக்கு லேசாத் தலையை வலிக்குதுங்க.அதை சொல்ல வேணாமுன்னு பாத்தேன்."

"தலைவலியா?இதோ நான் தைலம் தேச்சு விடறேன்.அப்படியே படுத்துக்க."

"வேண்டாங்க,தன்னாலே சரியாயிடும்"

"ஒண்ணும் பேசாதே. கண்ணை மூடிப் படுத்துக்கோ.இப்படி நல்லாத்தேச்சு, அமுக்கி விட்டாத் தலவலி பறந்து போயிரும்"

"உங்க கை பட்டதுமே வலி போயிருச்சுங்க.வாங்க.இப்ப நான் தயார்"

"வேண்டாம் சொர்ணம்.நீ ஒய்வெடுத்துக்கோ.நானும் அப்படியே படுக்கிறேன்."

"ரொம்ப ஆசையாக் கூப்பிட்டீங்க.ஏமாத்தமாப் போயிடும்.வாங்க. "

"சரி,வா.உன்னை எப்படிக் கட்டறேன் பாரு"

"ஆமாம்,அதிலெ நீங்கதான் கெட்டிக்காரராச்சே "

இருவரும் "ஆடு புலி ஆட்டம்"ஆட ஆரம்பித்தனர்.

கணவன் மனைவி உறவில் உடல் முக்கியமல்ல.மனமே பிரதானம்.வயதாகி உடல் தளர்ந்து இச்சைகள் அற்றுப் போனாலும்,அன்பு குறைவதில்லை.மாறாக அதிகமாகிறது.இது ஒருவரின் துணையை மற்றவர் உணர்ந்த நிலை.ஒருவர் இன்றி மற்றவர் வாழ்க்கையைப் பற்றி நினைப்பதற்கே பயப்படும் நிலை. ஒருவரைச் சார்ந்தே மற்றவர் வாழும்,இயங்கும் நிலை.

இதுவே இல்லறம் என்னும் நல்லறம்.

சனி, செப்டம்பர் 20, 2008

காமம் இல்லாக் கதை-2

"என்னங்க,கொஞ்சம் பாத்துங்க;நேத்து ரொம்ப வலிச்சுருச்சுங்க"
"ஏண்டா,கண்ணம்மா,நேத்தே சொல்லலை.ரொம்ப வலிச்சுதா?சொல்லிருந்தா பாத்துச் செஞ்சிருப்பேன் இல்ல?"
"எப்படிங்க?எவ்வளவு பிரியத்தோட நீங்க வந்து செய்யறீங்க?இந்த மாதிரிப் புருஷன் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்."
"சரிடா,இன்னிக்கும் வலிச்சா சொல்லு.பேசாம இருந்திடாதே"
------
------"ஆ!வலிக்குதுங்க."
"இரு,இரு,இங்கதானே,------இப்ப எப்படி இருக்கு?"
"ஹம்மா--இதம்மா இருக்குங்க"
"இன்னிக்கு இன்னும் ரெண்டு தடவை செஞ்சுடலாம்."
கீழே விழுந்ததால் சுளுக்கிய தன் மனைவியின் காலைத் தன் மடியில் வைத்து அன்புடன் எண்ணை தடவி நீவிக் கொண்டிருந்த கணவன்,அவள் காலை மெதுவாகக் கீழே வைத்துவிட்டுக் கை கழுவ எழுந்தான்.
"காதல் என்பது ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளுதல்; ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல்.சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.ஒருவருக்காக ஒருவர் வாழ்தல்"

"உடம்பொடு உயிரிடைஎன்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு"----(குறள்)

வியாழன், செப்டம்பர் 18, 2008

ஒரு காமம் இல்லாக் கதை

அவன் ஒரு பட்டு உள்ளாடை மட்டும் அணிந்து மலர்கள் தூவப்பட்ட மஞ்சத்தில் ,கையில் இருந்த வெள்ளி டம்ளரிலிருந்த சோமபானத்தை உறிஞ்சியபடி படுத்திருக்க,அவன் முன் நமிதா மார்க்கச்சையும்,இடையில் ஒரு சிறிய ஆடையும் மட்டும் அணிந்தபடி ஆடிக் கொண்டிருந்தாள்.அவள் உடல் குலுக்கி ஆட ஆட,அவன் உடலில் சூடேறியது.ஆடியவாறே அவள் அவனை நெருங்கி வந்தாள்.அவளை எட்டிப் பிடிக்க அவன் கைகளை வீசியபோது கைகள் காற்றைத் துழாவின;அவன் விழித்துக்கொண்டான்.அவன் உடல் சூடாகி சுகத்துக்காய் தவித்தது.அவன் அருகில் படுத்திருந்த மனைவியை இறுக அணைத்தான்.விழித்துக்கொண்ட அவள் சிணுங்கினாள்."என்னங்க இது" என்று திமிறினாள்.அவன் தன் பிடியை இறுக்கினான்."இப்போ வேண்டாங்க" என்ற அவள் மறுப்பையும் பொருட்படுத்தாமல் அவள் மீது பரவி இயங்க ஆரம்பித்தான்.சிறிது நேரத்துக்குப்பின் அவன் புலன்கள் கூர்மையாகின.அவன் இயக்க வேகம் குறைந்தது."தண்ணி வருது போல இருக்கு" என்றான்.அவள் முகத்தில் ஓர் அலுப்புப் படர்ந்தது."அதுக்குதான் அப்பவே சொன்னேன் இப்போ வேண்டாமுன்னு"என்றாள்.

இப்போது இருவருக்கும் அந்த சத்தம் தெளிவாகக் கேட்டது.யாரோ அடி பம்பில் தண்ணீர் அடிக்கும் சத்தம்.எட்டுக் குடும்பங்கள் இருந்த அந்த ஸ்டோரில் இரண்டு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் வரும் நாளில்,சீக்கிரம் எழுந்து பம்பில் தண்ணீர் அடித்தால்தான் நாலைந்து குடம் தண்ணீராவது கிடைக்கும்.இன்று,தண்ணீர் வரும் நாள்.இருவரும் அவசரமாக எழுந்து,உடைகளைச் சரி செய்து கொண்டு குடம்,வாளிகளை எடுத்துக் கொண்டு தண்ணீர் அடிக்க விரைந்தனர்.

புதன், செப்டம்பர் 17, 2008

ஒரு பாடல்,ஒரு நினைவு

திரைப் படங்களிலெல்லாம் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க ஒரு பாடல் வரும்.அது போல ஒரு பாடலை கீழே தருகிறேன்.யாருக்காவது அது பற்றித் தெரியுமென்றால்,உங்கள் நினைவொன்றை இப்பாடல் தட்டியெழுப்பினால், தெரிவியுங்கள்.

"கன்னித் தமிழ் மொழியே!கலையுலகம் அதிர
முரசெழும் ஒலியே-(கன்னி---)
குறுமுனி அருள்தமிழ்க் குமரி என் தாயே
குறள் மறையால் உலகாள்பவள் நீயே!
கொடுமையாவும் நீங்க,சாந்த குணமும் யாவும் ஓங்க,வா,வா-(கன்னி--)
பண்ணியல் நாடகப் பரவசமருளே,
பலகலையிலுமுயர் நவரசப் பொருளே
பரத கதக்களி மணிப்புரியும் பாராளுமோர் வகை செய்யும்-

கன்னித் தமிழ் மொழியே!கன்னித் தமிழ் மொழியே!கன்னித் தமிழ் மொழியே!

திங்கள், செப்டம்பர் 15, 2008

நினைவில் நிற்கும் சில இரயில் பயணங்கள்

இரயில் பயணங்கள் எப்போதுமே சுவாரசியமானவைதாம்.நான் எனது சிறு வயதிலிருந்தே இரயில் பயணங்களை ரசித்திருக்கிறேன். எனது பயணங்களில் என்னால் மறக்க முடியாத சில பயணங்களைப் பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


எனது முதல் இரயில் பயணமே மறக்க முடியாத ஒன்றுதான். ஆனால் அது மகிழ்வானதல்ல.அப்போது எனக்கு வயது ஐந்து.எனக்கு முன் பிறந்தவர் நால்வர்.அனைவரிலும் மூத்தவர் என் அண்ணன்.அவர் வயது பதினாறு. அவருக்குப்பின், எனக்கு முன் மூன்று சகோதரிகள்.31 வயதே நிரம்பிய என் தாய்.எங்களையெல்லாம் தன் ஊருக்கு அழைத்துச்செல்லும் என் தாத்தா-என் அம்மாவின் தந்தை. சென்னையிலிருந்து பயணப்பட்ட எங்கள் குடும்பம் இதுதான்.இது நாங்கள் புலம் பெயர்ந்த பயணம்.குடும்பத் தலைவனான,45 வயதே நிறைந்த,பேராசிரியராகப் பணி புரிந்து வந்த என் தந்தை அகால மரணமடைந்தபின் நாங்கள் அனைவரும் என் தாத்தாவின் ஊரை நோக்கி மேற்கொண்ட பயணம்.மற்ற அனைவரும் சோகத்தில், அவரவர் வயதுக்கேற்ப எதிர் காலம் பற்றிய கவலையில் ஆழ்ந்திருக்க எதைப் பற்றியும் கவலைப் படாத நான்.அன்று எனக்கிருந்த கவலையெல்லாம் ஒன்றுதான்.ஊருக்குச் சென்றதும் பள்ளிக்கூடம் போக வேண்டுமோ?பயணம் முழுவதும் என் தாத்தா "ஊருக்குப் போனதும் ஒரு பய--" என்று வாக்கியத்தை முடிக்காமல் விட,"ரயிலிலிருந்து குதிச்சுடுவேன்"என்று நான் சொல்ல,இவ்வாறாக அப் பயணம் நிறைவேறியது.




அதன் பின் எத்தனையோ பயணங்கள்.ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பயணம் நான் பட்ட மேற்படிப்புப் படிக்கும் போது நடந்தது.இதற்கு ஒரு சிறு முன்னுரை தேவை.என் கல்லூரிப்படிப்பின் போது கோடைவிடுமுறையில் என் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சில நாட்கள் செல்வது வழக்கம்.அவ்வாறு செல்லும்போது ஒரு முறை,என்னைப் போலவே அடுத்தவீட்டுக்கு விடுமுறைக்கு ஒரு பெண் வந்திருந்தாள்.அன்று வெளியில் செல்லும்போது வீட்டு வாசலில் நின்றிருந்த அப் பெண்ணைப் பார்த்து என் அக்கா,"என்ன,கமலி!எப்ப வந்தே" என்று கேட்க "இன்னிக்குக் கார்த்தாலதான் அக்கா"என்று சொல்லியவாறே அந்தப் பெண் என்னைப் பார்த்தாள். பார்த்தேன் ,பார்த்தோம் ----பா-------ர்த்தோம்.ஈர்த்தோம். கலந்தோம். ஜன்ம ஜன்மமாய் வரும் தொடர்பென உணர்ந்தோம்.(அந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படும் உணர்வு!).நான் அங்கிருந்த பத்து நாட்களும் எங்கள் பார்வை விளையாட்டு தொடர்ந்தது .பார்வையால் பேசிக் கொள்வதைத் தவிர அதற்கு அடுத்த நிலைக்கு எங்கள் காதலை எடுத்துச் செல்லும் தைரியம் எங்கள் இருவருக்குமே இருக்கவில்லை.மற்றவர்களுடன் பேசும்போது எங்கள் எண்ணங்களை மறைமுகமாகப் பகிர்ந்து கொண்டோம்.குழந்தைகளைக் கொஞ்சும் சாக்கில் ஒருவரை ஒருவரையொருவர் கொஞ்சிக்கொண்டோம். நான் ஊர் திரும்புவதற்கு முன்தினம் என் பாட்டிக்காக பவழமல்லிப் பூக்கள் கொண்டு வந்த அவள் அதை என்னிடம் கொடுக்கும்போது எங்கள் கைகள் சிறிதே கலந்தன.அப்பப்பா---உடல் சிலிர்த்துப் போனோம்.மறுநாள் நான் ஊர் திரும்பிவிட்டேன்.என் உள்ளம்"கமலி,கமலி" என்று அவள் பெயரை ஜபித்துக் கொண்டே இருந்தது.அடுத்த விடுமுறைக்கு நான் அங்கு சென்றபோது அவள் அங்கு வரவில்லை.அதன் பின் அவளை நான் சந்தித்தது----ரயிலில்தான். (முன்னுரை முடிந்தது!)


பட்டப் படிப்பு முடிந்து பின் மேற்படிப்புக்காகச் சென்னைக் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன்.ஒரு முறை விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன்---ரயிலில்.என்னுடன் என் வகுப்புத்தோழன் ஒருவனும்(பின்னர் காவல் துறையில் உயர் பதவி வகித்து ஒய்வு பெற்று விட்டார்).திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் எங்கள் பெட்டியில் ஏறிய கூட்டத்தில், புதிதாக மணம் புரிந்த ஒரு தம்பதியும் இருந்தனர்.அந்தப் பெண்--கமலி!அவளை நான் பார்த்த அதே நேரத்தில் அவளும் என்னைப் பார்த்தாள்.அவள் கண்களில் ஓர் அதிர்ச்சி.கலக்கம். குழப்பம். அவர்கள் இருவரும் எனக்கு முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தனர். அங்கு அமர்ந்தபின் அவள் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.தன் கணவனுடன் தாழ்ந்த குரலில் பேச ஆரம்பித்தாள்.நான் என் நண்பனை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் சென்று அவனிடம் எங்கள் காதல் மொட்டு பற்றிக் கூறினேன். அவன் இந்த சந்திப்பு எங்களிருவருக்குமே எப்படி தர்ம சங்கடமானது என்பதை எண்ணி,வருந்தினான்.நாங்கள் திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்தோம்.எங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே பயணம் தொடர்ந்தது.




அவள் தன் கணவனிடம் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டே இருந்தாள். எதையோ திரும்பத் திரும்பச் வலியுறுத்திச் சொல்வது போல் தோன்றியது. அவன் சிறிது உரக்கவே அவ்ளிடம் சொன்னான்- எனக்குக் கேட்க வேண்டும் என்ற நோக்கத்துடன்சொல்வது போல-"தப்பா நெனச்சுக்கப் போறான்ன நான் என்ன பண்ணுவது?நானாகப் போய்ப் பேச முடியுமா?"
நான் தீர்மானித்தேன், இனியும் அவளுக்கு ஒரு தர்ம சங்கடம் வேண்டாம் என.அவனிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டுப் பேச ஆரம்பித்தேன். "நீங்கள் கோபாலனுக்கு உறவா?வழியனுப்ப அவர்கள் வீட்டார்கள் சிலர் வந்திருந்ததைப் பார்த்தேன்"(குறிப்பு-வந்தவர்களுடன் எனக்கு பழக்கமில்லை).
"ஆமாம்.நான் அவர்கள் வீட்டு மாப்பிள்ளை.அவர் பேத்திக்கும் எனக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. என் மனைவி கூட சொல்லிக் கொண்டிருந்தாள்,உங்களைப்பற்றி(கடவுளே!என்ன சொன்னாள்,என்ன சொன்னாள்-என் உள்ளத்தின் ஓலம்).விடுமுறைக்கு வந்தபோது உங்களைப் பார்த்திருப்பதாக".நான் மௌனமாகத் தலையாட்டினேன்.அவன் இருக்கும் ஊர் பற்றி,பார்க்கும் வேலை பற்றி எல்லாம் விவரித்தான்.என் படிப்பு பற்றியும் கேட்டு அறிந்து கொண்டான்.நாங்கள் பேசுவதையெல்லாம் அவள் கேட்டுக் கொண்டே மௌனமாக அமர்ந்திருந்தாள்.அவள் முகத்தில் இப்போது சிறிது அமைதி தெரிந்தது.




இரவு படுக்கும் நேரம் வந்தது.நான் நடுப் படுக்கையிலும் என் நண்பன் கீழ்ப் படுக்கையிலும் படுத்துக் கொண்டோம்.எதிர் வரிசையில் அதே போல் இரண்டு படுக்கைகள் அவர்களுக்கு.விளக்குகள் அணைக்கப்பட்டு நெடு நேரம் வரை அவர்கள் கீழ் இருக்கையில் சேர்ந்து இருந்து ரகசியமாகப் பேசிக் கொண்டும்,சிரித்துக் கொண்டும் இருந்தனர்.அந்தச் சிரிப்பும்,பேச்சும், வளைகுலுங்கும் ஒசையும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. எப்படியோ நான் ஒருவாறு தூங்கிப் போனேன்.




மறுநாள் காலை எழுந்தபின் என் நண்பன் சொன்னான்,இரவு நீண்ட நேரம் அவன் தூங்கவில்லை என்றும்,கடைசியாக அவள்தூங்குமுன், ஓய்வறையிலிருந்து திரும்பி வந்து,சிறிது தயங்கி என் படுக்கையைப் பார்த்ததாகவும்,அதன் பின் தன் மாங்கல்யத்தை எடுத்துக் கண்ணில் ஒத்திக் கொண்டு படுக்கப் போனாள் என்றும்.





சென்னை வந்ததும் நான் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு, கமலியையும் பார்த்து ஒரு புன் முறுவல் செய்து விட்டு,நெஞ்சில் சிறிய வலியுடன் இரயிலிலிருந்து இறங்கினேன்.





என் நினைவில் நிற்கும் அடுத்த பயணமும் காதல் பற்றியதுதான். என்னை மிகவும் பாதித்த பயணம்.அதைப் பற்றித் தெரிந்துகொள்ள எனது பழைய இடுகை"எங்கிருந்தாலும் வாழ்க" பார்க்கவும்.



அடுத்து நான் நினைப்பது,முற்றிலும் வித்தியாசமான ஒரு பயண அனுபவம்.அப்போது நான் டில்லியில் பணி புரிந்துவந்தேன்.ஒரு முறை விடுப்பில் சென்னை வந்து கொண்டிருந்தேன்.என்னுடன் என் அம்மாவும். எப்போதும் போல் பயணத்தில் சாப்பிடுவதற்காக வீட்டில் செய்து கொண்டு வந்த சப்பாத்தி,புளி,தயிர்சாதங்கள்.காலை உணவு,பின் மதிய உணவு சாப்பிடும் போது கவனித்தேன்.எங்கள் பெட்டியில் பயணம் செய்த ஒருவர் யாருடனும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் வந்ததை.அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.அவர் வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்காகச் செல்வதாகக் கூறினார்.நான் எங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னபோது பணிவாக மறுத்துவிட்டார்.மதிய நேரத்தில் ரயில் நாக்பூரை அடைந்தது.கீழே இறங்கி இரண்டு ஐஸ்கிரீம் வாங்கினேன்.ஒன்றை என் அம்மாவிடம் கொடுத்தேன்.இன்னொன்றைச் சாப்பிடும் முன் அந்த நபரைப் பார்த்தேன்."சாப்பிடுகிறீர்களா " என்று கேட்ட படியே அவரிடம் அதை நீட்டினேன்.அது வரை ஒன்றுமே சாப்பிடாமல் வந்த அவர் அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்-ஆர்வமாக,அவசரமாக. மீண்டும் ஒர் ஐஸ்கிரீம் வாங்குமுன் ரயில் புறப்பட்டு விட்டது.என் அம்மாவுக்குக் கூட வருத்தம்-அந்த ஐஸ்கிரீமை நான் சாப்பிடவில்லையே என்று.ஆனால்,அந்த ஐஸ்கிரீமைச் சாப்பிட்டிருந்தால்,என் வயிறு மட்டும்தான் குளிர்ந்திருக்கும்;ஆனால் இப்போது என் மனமும் குளிர்ந்து விட்டது.சென்னை வந்து சேர்ந்தபின் என்னருகில் வந்த அவர்"ஐயா,உங்கள் நலனுக்காக நான் மாதாவிடம் பிரார்த்தனை செய்வேன்"எனச் சொல்லிச் சென்றார்.இந்தப் பயணத்தை எப்படி மறக்க முடியும்?



நினைவில் நிற்கும் இன்னொரு பயணமும் இது போல, வித்தியாசமான ஒருவரைப் பற்றியது.இதுவும் விடுப்பில் சென்னை வந்து திரும்பிய ஒரு பயணம்.பூனாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்தேன்.வழக்கம் போல் கட்டுச் சாதம் வகையறாக்கள்.நாங்கள் சாப்பிடும்போது எங்களுடன் பயணம் செய்த ஒரு இளம்பெண் எதுவும் சாப்பிடாமல் வந்தாள்.நாங்கள் அளித்த உணவை மறுத்து,அன்று விரதம் என்றும் பழம் தவிர வேறெதுவும் சாப்பிட மாட்டேன் என்றும் கூறினாள்.அன்று முழுவதும் அப்பெண் சாப்பிட்டது ஒரே ஒரு ஆப்பிள் மட்டுமே.கல்லூரியில் 'மாஸ் கம்யூனிகேஷன்' பட்ட மேற்படிப்புப் படிக்கும் ஒரு பெண் ,அவ்வாறு விரதம் இருந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.ரயில் காலை 4 மணி அளவில் பூனாவை அடைந்தது.அந்த இருட்டில் அந்தப் பெண்ணைத் தனியாக அனுப்புவது சரியாகத் தோன்றவில்லை.அப்பெண் இருந்த ஹாஸ்டல் எங்கள் வீட்டைத்தாண்டிதான் இருந்தது.எங்களுடன் அப்பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றோம். எங்கள் வீட்டில் விடியும் வரை தங்கி விட்டுப் பின் செல்லலாம் என நான் சொன்னேன்.அந்தப் பெண் எங்களைக் கவலைப்பட வேண்டாமென்றும்,போய்ச் சேர்ந்தவுடன் தொலைபேசுவதாகவும் கூறினாள். சொன்னது போலவே 20 நிமிடங்களில் அவள் ஃபோன் வந்து விட்டது. என்னால் மறக்கமுடியாத பெண் .அதனால் மறக்க முடியாத பயணம்."நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை, திமிர்ந்த ஞானச்செருக்கு" மட்டுமன்றி நமது அடிப்படை கலாசாரத்தை, நம்பிக்கைகளையும் பேணிக் காக்கும் ஒரு வித்தியாசமான புதுமைப் பெண்.செய்யும் செயல் எதையும் ஈடுபாட்டுடன் செய்யும் அந்தப் பெண்ணுக்குச் சரியான பெயர்தான்.--"ச்ரத்தா".



என்ன சொல்கிறீர்கள்?மறக்க முடியுமா அப்பயணங்களை?சம்பந்தப்பட்ட அம்மனிதர்களை?

வெள்ளி, செப்டம்பர் 12, 2008

ஒரு கமாக்கதை

அவனுக்கு,அந்தக்,கடிதம்,வியப்பைத், தந்தது,ஏனென்றால்,அவன், அதை,  எதிர்,  பார்க்கவில்லை,  என்பதே, உண்மை,என்று,சொல்லும்,போது,வியப்புடன்,வருத்தமும்,வந்தது, என்பதும்,ஏமாற்றம்,அடைந்தான்என்பதும் ,உண்மையான,நேரத்தில்,ஏன்,இப்படி,நடந்தது,என்ற,                                                                                            கேள்வியும்,                                                                             மனதில்,  எழுந்து,      நிம்மதி,  இழந்து,  மீண்டும்,கையில் ,இருந்த,    தந்தியைப் பார்க்க ,தந்தி,வாசகங்கள்,பெரிய,எழுத்துக்களாக,முகத்தில்,  அறைய,மீண்டும்,மீண்டும்,படிக்க,"marriage, stopped,as,per,your,request"என்ற, வாசகம், துன்புறுத்த, எங்கு,தவறு,என்ற,கேள்விக்கு,பதில்,இன்றித்,திகைக்க,அவனுக்குத்,தெரியாது,அவன்,அனுப்பிய  ,தந்தியில், ஒரு,கமா,விளையாடி,விட்டது,என்பது,முதலில், மறுத்துப்பின்,சம்மதித்து,அவன்,அனுப்பிய,தந்தி,"girl i like, not stop marriage" என்பது, மாறி    "girl i like not,stop marriage "என்று, சென்றது,அவனுக்குத், தெரியாது.

இதுவே ஒரு கமாக்கதை.

(தலைப்பைத் தவறாகப் படித்துவிட்டு அவசரமாகப் பதிவைப் படித்த நண்பர்களே!நீங்கள் எதிர்பார்த்தது இல்லையென்றால் அதற்கு நானா பொறுப்பு?) 

வியாழன், செப்டம்பர் 11, 2008

சங்கிலி

என் நண்பர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் விழித்திரையில் பிரச்சினை எற்பட்டு லேசர் சிகிச்சை செய்து கொண்டு ஒரு மாதம் படுக்கை ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.அவர் ஒரு நீரிழிவு நோயாளி.இருபது நாட்களுக்குப் பின் இன்று ரத்தத்தில் சர்க்கரை அளவை வீட்டிலேயே சோதித்துப் பார்த்தபோது 350 இருப்பதாக எனக்கு தொலைபேசி மூலம் கவலையுடன் சொன்னார்.காரணம் என்னவாக இருக்கும் என் நான் வினவ அவர் 20 நாட்களாக நடைப் பயிற்சி செய்யாததுதான் காரணமாக இருக்கும் என்றார்.மருத்துவர்கள் எல்லாம் 'வாக்' போவதை வலியுறுத்துவது எவ்வளவு சரி என்பது புரிகிறது.நானும் வழக்கமாக நடைப் பயிற்சி செய்கிறேன்.
ஒரு மனிதன் முகம் போல் மற்றவ்ர் முகம் இருப்பதில்லை.அது போலவே நடைகளும் வித்தியாசப் படுகின்றன.எத்தனை விதமான நடைகள்!குறுகலான அடிகள்,நீண்ட அடிகள்;கைகளை நன்கு வீசி,கைகளை அதிகம் வீசாமல்;நன்கு நிமிர்ந்து,சற்றே கூனியவாறு;முழங்கால்களை நன்கு மடக்கி,அதிகம் மடக்காமல்;யானை போல் ஆடி ஆடி,ஒரே சீராக என்று எத்தனை விதமான நடைகள்!நடக்கும் விதமே ஒருவரின் குணத்தை அடிப் படையாகக் கொண்டது என் நான் எண்ணுகிறேன்.

மனிதர்களின் நடை பற்றிப் பேசும் போது,நடிகர் திலகத்தின் நடை பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.பொதுவாக நடிகர்கள் ஏற்ற பாத்திரத்துக்கேற்ப ஒப்பனை,உடை,முக பாவங்களை மாற்றுவார்கள்.ஆனால் பாத்திரத்துக்கேற்ப நடையையும் மாற்றியவர் சிவாஜி.காவல் துறை அதிகாரி-நிமிர்ந்த கம்பீரமான நடை;பணக்கார,ஊதாரி இளைஞன்-சற்றே இடுப்பை வளைத்த நடை;வயதானவர்-தளர்ந்த நடை; புத்திக்கூர்மை இல்லாதவன்-தடுமாறும்,தன்னம்பிக்கையில்லா நடை.அவர் நடிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல;நடக்கவும் தெரிந்தவர்.A great actor.

ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன்(நடிகை)இருக்கிறான்(இருக்கிறாள்).வாழ்க்கையில் பல நேரங்களில் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.நமது காரியம் ஆக வேண்டும் என்பதற்காகத் தகுதியில்லாதவர்களிடத்துக் கூட நாம் காட்டும் பணிவு!ஒரு நடிப்புத்தானே?முன்பெல்லாம் இழவு வீட்டுக்குச் செல்லும் பெண்கள் சத்தம் போட்டு ஒப்பாரி வைப்பார்கள்-எந்த சோகமும் இல்லாமல்.-"சாந்திடும் நெற்றில சகதி அடிச்சாச்சே,பொட்டிடும் நெற்றிலே புழுதி அடிச்சாச்சே" என்பது போல.என் பாட்டி ஒருவர் இதில் கை தேர்ந்தவர்.ஒருமுறை ஒரு இழவு வீட்டுக்குச் செல்லும்போது என்னவெல்லாம் பாட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு போய் அங்கு போய் அனைத்தையும் மறந்து 'பக்' எனச் சிரித்துவிட்டாராம்.காமிரா முன் வந்து வசனத்தை மறந்த நடிகன் போல்.

ஒப்பாரி என்றவுடன் ஒரு நினைவு.தமிழில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்த என் சித்தி ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட தலைப்பு"தமிழர் வாழ்வில் தாலாட்டும்,ஒப்பாரியும்"!இதற்காகக் கிராமம்,கிராமமாய்ச் சென்று அங்குள்ள பெண்களை சந்தித்து,'டேப் ரிகார்டரில் 'அவர்கள் பாடும் தாலாட்டு/ஒப்பாரியைப் பதிவு செய்து தமிழர் வாழ்வோடு இணைந்த அந்தக் கலையை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சித்தி என்றால் என் தாயாரின் தங்கை.அப்பாவின் தம்பியின் மனைவியும் சித்திதான்.இன்னொரு விதமான சித்தியும் உண்டு.பொதுவாகவே இந்த சித்தி கதைகளிலும்,நாடகங்களிலும் கொடுமைக்காரியாகவே சித்திரிக்கப் படுகிறார்.ஒரு குழந்தையின் தாய் இறந்தபின் அத்தந்தை மறுமணம் செய்துகொண்டால் வரும் புதிய உறவே இந்த சித்தி.ஆனால் ஒரு தமிழ்ப் படத்தில் சித்தி மிக நல்லவராகக் காட்டப்பட்டார்.அதுதான் கே.எஸ்.ஜி.அவர்களின் 'சித்தி' திரைப்படம்.நிறைய பாராட்டு பெற்ற திரைப் படம்.தமிழ்ப் படங்கள் பற்றிய தன் கட்டுரையில்,ஜெயகாந்தன் அவர்கள் முன்பு குறிப்பிட்டார்"என்னதான் முடிவு பார்த்தபோது ஏது இவர் கூட(கே.எஸ்.ஜி) உருப்பட்டு விடுவார் போலிருக்கிறதே என்று நினைத்தேன்.ஆனால் அந்த நம்பிக்கை சித்தி வந்தபின் தகர்ந்து விட்டது"என்று.
ஜெயகாந்தன் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பீரங்கிப் பேச்சாளர் என்று அழைக்கப்பட்டார்.'ஜெய பேரிகை' என்ற பத்திரிகையின் ஆசிரியராக அவர் இருந்தபோது ஒரு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஒருவர் தாக்கப் பட்டபோது அவர் எழுதிய வரிகள்-"நாப்பறை கொட்டி நாடாள வந்தபின் பேய்ப்பறை தட்டி பிணம் தின்னும் கழுகுக் கூட்டமே"இது அன்றைய தி.மு.க.அரசு பற்றி அவர் எழுதியது.இன்று அந்த ஜெயகாந்தன் எங்கே இருக்கிறார்?! எல்லாம் காலத்தின் கட்டாயம்..

ஆம்.காலம் செல்லச் செல்ல எத்தனையோ விஷயங்கள் மாறி விடுகின்றன.வயது ஏற ஏறப் புதுப் புது நோய்கள் வந்து விடுகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை நிறைய இனிப்புகள் சாப்பிட்டு வந்தேன்.ஆனால் இப்போதோ?சர்க்கரை நோயாளியாகி விட்டேன்.இனிப்புகளை மறக்க வேண்டியதாகி விட்டது.மருத்துவர் அறிவுரைப் படி தினமும் நடைப் பயிற்சி செய்கிறேன்.அப்படிப் போகும்போது நடை பயிலும் மற்றவர்களைப் பார்க்கிறேன்.சிவாஜி-நடிப்பு-ஒப்பாரி-சித்தி-ஜெயகாந்தன்-காலம்-இனிப்பு-சர்க்கரை நோய்-நடைப் பயிற்சி-மற்றவர் நடை-சிவாஜி-நடிப்பு......................