தொடரும் தோழர்கள்

வியாழன், செப்டம்பர் 11, 2008

சங்கிலி

என் நண்பர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் விழித்திரையில் பிரச்சினை எற்பட்டு லேசர் சிகிச்சை செய்து கொண்டு ஒரு மாதம் படுக்கை ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.அவர் ஒரு நீரிழிவு நோயாளி.இருபது நாட்களுக்குப் பின் இன்று ரத்தத்தில் சர்க்கரை அளவை வீட்டிலேயே சோதித்துப் பார்த்தபோது 350 இருப்பதாக எனக்கு தொலைபேசி மூலம் கவலையுடன் சொன்னார்.காரணம் என்னவாக இருக்கும் என் நான் வினவ அவர் 20 நாட்களாக நடைப் பயிற்சி செய்யாததுதான் காரணமாக இருக்கும் என்றார்.மருத்துவர்கள் எல்லாம் 'வாக்' போவதை வலியுறுத்துவது எவ்வளவு சரி என்பது புரிகிறது.நானும் வழக்கமாக நடைப் பயிற்சி செய்கிறேன்.
ஒரு மனிதன் முகம் போல் மற்றவ்ர் முகம் இருப்பதில்லை.அது போலவே நடைகளும் வித்தியாசப் படுகின்றன.எத்தனை விதமான நடைகள்!குறுகலான அடிகள்,நீண்ட அடிகள்;கைகளை நன்கு வீசி,கைகளை அதிகம் வீசாமல்;நன்கு நிமிர்ந்து,சற்றே கூனியவாறு;முழங்கால்களை நன்கு மடக்கி,அதிகம் மடக்காமல்;யானை போல் ஆடி ஆடி,ஒரே சீராக என்று எத்தனை விதமான நடைகள்!நடக்கும் விதமே ஒருவரின் குணத்தை அடிப் படையாகக் கொண்டது என் நான் எண்ணுகிறேன்.

மனிதர்களின் நடை பற்றிப் பேசும் போது,நடிகர் திலகத்தின் நடை பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.பொதுவாக நடிகர்கள் ஏற்ற பாத்திரத்துக்கேற்ப ஒப்பனை,உடை,முக பாவங்களை மாற்றுவார்கள்.ஆனால் பாத்திரத்துக்கேற்ப நடையையும் மாற்றியவர் சிவாஜி.காவல் துறை அதிகாரி-நிமிர்ந்த கம்பீரமான நடை;பணக்கார,ஊதாரி இளைஞன்-சற்றே இடுப்பை வளைத்த நடை;வயதானவர்-தளர்ந்த நடை; புத்திக்கூர்மை இல்லாதவன்-தடுமாறும்,தன்னம்பிக்கையில்லா நடை.அவர் நடிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல;நடக்கவும் தெரிந்தவர்.A great actor.

ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன்(நடிகை)இருக்கிறான்(இருக்கிறாள்).வாழ்க்கையில் பல நேரங்களில் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.நமது காரியம் ஆக வேண்டும் என்பதற்காகத் தகுதியில்லாதவர்களிடத்துக் கூட நாம் காட்டும் பணிவு!ஒரு நடிப்புத்தானே?முன்பெல்லாம் இழவு வீட்டுக்குச் செல்லும் பெண்கள் சத்தம் போட்டு ஒப்பாரி வைப்பார்கள்-எந்த சோகமும் இல்லாமல்.-"சாந்திடும் நெற்றில சகதி அடிச்சாச்சே,பொட்டிடும் நெற்றிலே புழுதி அடிச்சாச்சே" என்பது போல.என் பாட்டி ஒருவர் இதில் கை தேர்ந்தவர்.ஒருமுறை ஒரு இழவு வீட்டுக்குச் செல்லும்போது என்னவெல்லாம் பாட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு போய் அங்கு போய் அனைத்தையும் மறந்து 'பக்' எனச் சிரித்துவிட்டாராம்.காமிரா முன் வந்து வசனத்தை மறந்த நடிகன் போல்.

ஒப்பாரி என்றவுடன் ஒரு நினைவு.தமிழில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்த என் சித்தி ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட தலைப்பு"தமிழர் வாழ்வில் தாலாட்டும்,ஒப்பாரியும்"!இதற்காகக் கிராமம்,கிராமமாய்ச் சென்று அங்குள்ள பெண்களை சந்தித்து,'டேப் ரிகார்டரில் 'அவர்கள் பாடும் தாலாட்டு/ஒப்பாரியைப் பதிவு செய்து தமிழர் வாழ்வோடு இணைந்த அந்தக் கலையை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சித்தி என்றால் என் தாயாரின் தங்கை.அப்பாவின் தம்பியின் மனைவியும் சித்திதான்.இன்னொரு விதமான சித்தியும் உண்டு.பொதுவாகவே இந்த சித்தி கதைகளிலும்,நாடகங்களிலும் கொடுமைக்காரியாகவே சித்திரிக்கப் படுகிறார்.ஒரு குழந்தையின் தாய் இறந்தபின் அத்தந்தை மறுமணம் செய்துகொண்டால் வரும் புதிய உறவே இந்த சித்தி.ஆனால் ஒரு தமிழ்ப் படத்தில் சித்தி மிக நல்லவராகக் காட்டப்பட்டார்.அதுதான் கே.எஸ்.ஜி.அவர்களின் 'சித்தி' திரைப்படம்.நிறைய பாராட்டு பெற்ற திரைப் படம்.தமிழ்ப் படங்கள் பற்றிய தன் கட்டுரையில்,ஜெயகாந்தன் அவர்கள் முன்பு குறிப்பிட்டார்"என்னதான் முடிவு பார்த்தபோது ஏது இவர் கூட(கே.எஸ்.ஜி) உருப்பட்டு விடுவார் போலிருக்கிறதே என்று நினைத்தேன்.ஆனால் அந்த நம்பிக்கை சித்தி வந்தபின் தகர்ந்து விட்டது"என்று.
ஜெயகாந்தன் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பீரங்கிப் பேச்சாளர் என்று அழைக்கப்பட்டார்.'ஜெய பேரிகை' என்ற பத்திரிகையின் ஆசிரியராக அவர் இருந்தபோது ஒரு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஒருவர் தாக்கப் பட்டபோது அவர் எழுதிய வரிகள்-"நாப்பறை கொட்டி நாடாள வந்தபின் பேய்ப்பறை தட்டி பிணம் தின்னும் கழுகுக் கூட்டமே"இது அன்றைய தி.மு.க.அரசு பற்றி அவர் எழுதியது.இன்று அந்த ஜெயகாந்தன் எங்கே இருக்கிறார்?! எல்லாம் காலத்தின் கட்டாயம்..

ஆம்.காலம் செல்லச் செல்ல எத்தனையோ விஷயங்கள் மாறி விடுகின்றன.வயது ஏற ஏறப் புதுப் புது நோய்கள் வந்து விடுகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை நிறைய இனிப்புகள் சாப்பிட்டு வந்தேன்.ஆனால் இப்போதோ?சர்க்கரை நோயாளியாகி விட்டேன்.இனிப்புகளை மறக்க வேண்டியதாகி விட்டது.மருத்துவர் அறிவுரைப் படி தினமும் நடைப் பயிற்சி செய்கிறேன்.அப்படிப் போகும்போது நடை பயிலும் மற்றவர்களைப் பார்க்கிறேன்.சிவாஜி-நடிப்பு-ஒப்பாரி-சித்தி-ஜெயகாந்தன்-காலம்-இனிப்பு-சர்க்கரை நோய்-நடைப் பயிற்சி-மற்றவர் நடை-சிவாஜி-நடிப்பு......................

1 கருத்து: