தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 22, 2008

எங்கிருந்தாலும் வாழ்க

பெண்ணே!(கண்ணே என்றழைக்க மனம் விழைந்தாலும்,நாகரிகம் தடுக்கிறது);நீ எங்கே இருக்கிறாய்?இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் என் நெஞ்சில் நிற்கும் நீயும்,உன் நினைவுகளும் அவை தரும் சுகமும்,அதோடு கூடிய வலியும் மறையவேயில்லை.

அந்த நாள்,உனக்கு நினைவிருக்கிறதா ?நாம் சந்தித்த நாள்.என்னைப் போல் நீயும் அந்த நாளை நினைத்துப் பார்ப்பதுண்டா.(மறந்தாலன்றோ நினைப்பதற்கு)

திருச்சி இரயில் நிலைய்த்தில் திருவனந்தபுரம்-சென்னை பகல் நேர விரைவு வண்டியில், சென்னை செல்வதற்காக நான் ஏறிய போது நினைக்கவேயில்லை,என் உள்ளத்தைத் தொலைக்கப்போகிறேன் என்று.

இரயிலில் ஒரே கூட்டம்.நான் ஏறிய பெட்டியிலும் கூட்டம்.உட்கார இடம் இல்லை.என் பார்வையை மெதுவாக பெட்டி முழுவதும் செலுத்தினேன்.சுழன்று வந்த என் பார்வை உன்னிடத்தில் வந்ததும் நிலை குத்தி நின்றது.அந்தக் கூட்டத்தில் நீ “பளிச்” என்று தனித்துத் தெரிந்தாய்-எனக்கு.

சராசரி உயரம்,ஆண்களைச்சுண்டி இழுக்கும் கவர்ச்சி ஏதுமில்லாத தோற்றம் பகட்டில்லாத புடவை,குறைவான அணிகலன்கள் ,மாநிறம்.ஆனால் என்னை ஈர்த்தது எது தெரியுமா?உன் முகம்.சாந்தம் தவழும் அந்தத் தெய்வீக அழகு.மற்ற நாகரிக மங்கையர் போலன்றி மூக்கின் இரு புறமும் நீ அணிந்திருந்த மூக்குத்திகள் .லட்சுமி கரமான தோற்றம்.எனக்கு ரவி வர்மாவின் லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது.அந்த வினாடியிலேயே நான் வீழ்ந்து விட்டேன்.

நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் நீயும் என்னைப் பார்த்தாய்.நம் கண்கள் கலந்த அந்த நொடியில் என் நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின் அதிர்ச்சி ஏற்பட்டது.விவரிக்க இயலாத ஒரு உணர்வு.நெஞ்சு ‘பட,பட’ என வேகமாக அடிக்கத்துவங்கிய்து.உன் கண்கள் என்னும் கடலில் முழ்கி மூச்சுத் திணற ஆரம்பித்தேன்.பலவந்தமாக என் கண்களை உன் மீதிருந்து பிடுங்கி வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தேன்.யோசித்தேன்” என்ன ஆயிற்று எனக்கு?இது வரை எந்தப்பெண்ணும் பாதிக்காத அளவு இந்தப்பெண் ஏன் என்னைப் பாதிக்கிறாள்”.

மீண்டும் என் பார்வை பெட்டியைச் சுற்றி வந்தது.எங்கும் இருக்கை இல்லாத நிலையில் சாமான்கள் வைக்கும் மேல் பலகை மேல் உட்கார முடிவு செய்தேன்.ஒரு துள்ளலில் மேலே ஏறி அமர்ந்தேன்.இளமையின் வேகம்.நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்ற எண்ணம் தந்த எழுச்சி.மேலேறி அமர்ந்த பின் உன்னைப் பார்த்தேன்.நீ அவசரமாக உன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாய்.நான் தெரிந்துகொண்டேன்-நீயும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய் என்று.புரிந்துகொண்டேன்-உனக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை.

மேலேறி அமர்ந்த பின் கையில் வைத்திருந்த’இந்து’ பத்திரிகையைப் பிரித்தேன்.படிப்பது போன்ற பாவனையில் அடிக்கடி உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன். உன் பார்வையும் அவ்வப்போது என் மீது விழுந்தது.நான் உன்னைப்பார்க்கும் போதெல்லாம். அவசரமாக உன் பார்வையைத் திருப்பிக் கொண்டாய் .(”யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்”). சிறிது நேரம் சென்று உன்னுடன் வந்த சிறுமியிடம் நீ சொன்னாய் ” இன்னைக்கு பேப்பரே பார்க்கவில்லை”.

நான் என் கையில் இருந்த பத்திரிக்கையை மடித்து அதன் மேல் பகுதியில் என் பெயரை எழுதி அந்தச்சிறுமியிடம் கொடுத்தேன்”படிச்சிட்டுக் கொடுக்கலாம்” என்றவாறே .நீ அதை வாங்கிப் பிரிக்காமலே மேலே எழுதியிருந்த என் பெயரைப் படித்தாய் .உன் செவ்வாய் அசைவையே நான் கவனித்தேன் “ராதாகிருஷ்ணன்,M.A.”கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டி விட்டு அந்த சிறுமியிடம் நீ என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னாய் “மெட்ராசில் பெரியம்மா இப்ப சொல்லிட்டிருப்பா-’ராதா ரயில்ல வந்திட்டிருப்பா’ என்று”.உன் பெயரை மிக நாகரிகமாக எனக்குத் தெரிவித்து விட்டாய். என்னில் பாதி நீ என்பதைத் தெரிந்து கொண்டேன்.இது நம் இருவர் வாழ்வின் முக்கியமான நாள் என உணர்ந்தேன்.நம் பார்வைகள் மீண்டும் கலந்தன, பிரிந்தன,மீண்டும் கலந்தன.இன்பமான ஒரு விளையாட்டு.

ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்ற போது பசியால் அழுத ஒரு குழந்தைக்குப் பால் வாங்கித் தர நான் சென்று திரும்புவதற்குள் வண்டி புறப்பட்டு விட ,நான் ஓடி வந்து ஏறும்போது சன்னல் வழியே தெரிந்த உன் முகத்தில் எத்தனை கவலை;உள்ளே வந்த என்னைப் பார்த்தபின் எத்தனை நிம்மதி;என்ன கனிவு; என்ன பாராட்டு .இது போதுமே ஒருவாலிபனுக்கு ,சாதனைகள் படைக்க.

சென்னை நெருங்கிக்கொண்டிருந்தது.நாம் பிரிய வேண்டிய நேரமும்தான்.இருவருமே அமைதி இழந்திருந்தோம்.பார்வைகள் பிரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம் .

சென்னை வந்து விட்டது.எல்லோரும் பரபரப்பாக இறங்க ஆரம்பித்தனர்.அந்த நெரிசலில் இற்ங்கும் வழியில் அருகருகே நின்ற நம் கைகள் கலந்தன.மெல்லக்கேட்டேன்”மெட்ராஸில் எங்க?” நீ மெல்லிய குரலில் உன் பெரியப்பா பற்றிய விவரங்களைக் கூறும்போது பிளாட்பாரத்திலிருந்து எப்படியோ உன்னைப் பார்த்து விட்ட உன் உறவினர் உன்னைப் பெயர் சொல்லி அழைக்க நம் பேச்சு நின்றது.இறங்கிய பின் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு நீ சென்று விட்டாய்,என்மனதையும் எடுத்துக்கொண்டு.

நீ சொன்ன தகவலில் சைதாப்பேட்டை என்பது தவிர ஏதும் காதில் விழாத நான் மறு நாள் சைதாப்பேட்டை முழுவதும் தேடி அலைந்து சோர்ந்து போனேன்.உன்னைப் பார்க்க முடியாமலே ஊர் திரும்பினேன்.பல நாட்கள் பைத்தியம் பிடித்தது போல் இருந்தேன்.காலம் என்னும் மருத்துவன் என்னைச் சரியாக்கினான்.ஆனால் உள்ளே அந்த சோகம் புதைந்துதான் கிடக்கிறது,இன்று வரை.

நீ எங்காவது கணவன்,பிள்ளைகள்,பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பாய்.நீ இருக்கும் இடத்தைச் சிறப்படையச் செய்து கொண்டிருப்பாய் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு கவிஞன் பாடினான்”சந்தனக் காடுகள் பற்றி எரிகையில் சந்தனமே மணக்கும்;என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில் ‘சக்கு’ என்றே ஒலிக்கும்”என்று.அது போல என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்தான் என் நெஞ்சோடு சேர்ந்து உன் நினைவும் வேகும்.

பின்னூட்டங்கள்

1) ராதா said;

அன்புள்ள ராதாகிருஷ்ணன்,தற்செயலாக உங்கள் பதிவைப்படித்தேன்.என்னைப் போலவே நீங்களும் அந்த நாளை இன்னும் மறக்காதிருக்கிறீர்கள் என்றறியும் போது உள்ளம் நிறைந்து போனது.நமது சந்திப்பு பற்றி என் கல்லூரித்தோழிகளிடம் சொன்னபோது அவர்கள் இதெல்லாம் உங்களுக்கு பொழுது போக்குக்காக செய்திருப்பீர்கள் என்றுசொல்ல நான் அவர்களிடம் சண்டையிட்டேன்.எனக்குத் தெரியும் ஏதோ வலுவான காரணங்களால்தான் நீங்கள் என்னைத் தேடி வரவில்லையென்று.இப்போது ஆண்டுகள் பல கடந்து விட்டன.நானும் ஒரு பொறுப்பான குடும்பத்தலைவியாய்,அன்பான கணவன்,ஆதரவான குழந்தைகள்,என்று மகிழ்ச்சியாய் வாழ்கிறேன்.நீங்களும் அதே போல் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பது நிச்சயம்.அடுத்த இடுகையில் உங்கள் மகிழ்ச்சியான குடும்பம் பற்றி எழுதுங்களேன்.

உங்கள் அன்புள்ள

ராதா விச்வனாதன்

2) கடவுள் said:

இந்தப் பின்னூட்டம் ராதாகிருஷ்ணன்,ராதா இவர்களுக்குத் தெரியாது.மற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் .

ராதா பொய் சொல்கிறாள்.அவள் மகிழ்ச்சியாக இல்லை.அன்பில்லாத முரட்டுக் கணவன்,அடங்காத பிள்ளைகள்.அவள் வாழ்க்கையே நரகம்தான். ராதாகிருஷ்ணன் எழுதுவான்,தன் சந்தோஷமான வாழ்க்கை பற்றி. அதுவும் பொய்தான்.அவன் வாழ்க்கையும் சோகமயமானதுதான்.இருவரும் அடுத்தவர் மகிழ்வுக்காகப் பொய் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருந்திருக்கும்.ஆனால் நான் அப்படி(விதி) எழுதவில்லையே.

[(பி.கு) மேலே கண்ட பின்னூட்டங்கள் இடுகையின் பகுதியே தவிர உண்மையான பின்னூட்டங்கள் அல்ல.கடவுள் என்பது உண்மையான கடவுளையே குறிக்கும். let there not be any confusion.

(பழைய வீட்டிலிருந்து)

14 Comments »

14 Responses to “எங்கிருந்தாலும் வாழ்க”

  1. உண்மை on 07 Sep 2007 at 12:46 pm #

    நன்றாக இருக்கிரது. ஆணால் எல்லா பின்னுட்டங்களையும் நீங்களே பொட்ட மாதிரி தொன்ருகிறது. பறக்கட்டும் கற்பனை (ஜொள்ளு !!) சிறகு…

  2. கடல்கணேசன் on 07 Sep 2007 at 1:36 pm #

    ரசிக்க வைத்த கற்பனை(அல்லது நினைவு -எதுவாக இருந்தாலும்).
    நன்றாக எழுதுகிறீர்கள். இன்னும் நிறைய பகிர்ந்து கொள்வீர்கள் தானே!
    நம்பிக்கையுடன்,
    -கடல்கணேசன்

  3. pithan on 08 Sep 2007 at 2:57 am #

    @உண்மை //ஆணால் எல்லா பின்னுட்டங்களையும் நீங்களே பொட்ட மாதிரி தொன்ருகிறது.//
    உண்மைதான்.அவை உண்மையான பின்னூட்டங்கள் அல்ல.இடுகையை எதிர்பாராத விதமாக முடிப்பதற்காக நான் கையாண்ட உத்தி.முதல் பின்னூட்டம் ராதாவுடையதும் இரண்டாவது பின்னூட்டம் உண்மையான கடவுள் எழுதுவதாகவும் அமைத்திருந்தேன்.என் நோக்கத்தை சரியான முறையில் தெளிவு படுத்தத் தவறி விட்டேனோ?
    மிக்க நன்றி

  4. pithan on 08 Sep 2007 at 3:05 am #

    கடல் கணேசன் அவர்களே,நன்றி
    நினைவு+கற்பனை அது.(நினைவு என்னுடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லையே)
    // இன்னும் நிறைய பகிர்ந்து கொள்வீர்கள் தானே!//
    நிச்சயமாக.பொழுது போக வேண்டாமா?

  5. சின்ன கண்ணண் on 09 Sep 2007 at 8:45 am #

    மிக நல்ல நினைவு (அல்லது கற்பனை)!

    தங்கள் எண்ணங்களில் ஊடூறும் சோகங்களும் வேட்கைகளும் தங்கள் எழுத்துக்களில் துல்லியமாக வெளி வருகின்றன! அதிலும் அந்த பின்னுட்டங்கள் .. சபாஷ்! படித்ததும் ஒரு முறை என் கண்கள் கலங்கி விட்டன!

    வாழ்க்கையில் சில சமயங்கள் சில திருப்பு முனைகள் அமைகின்றன! மனம் பின்பு இளமையை அசை போடும் போது அந்நினைவுகள் முன்னே வருவதும் ஒரு இனிமையான அனுபவமே!

    பித்தன் அவர்களே! இதை வளர்த்து ஒரு சுஜாதாவின் கதை போல் எழுதியும் விடலாமே! இருவரும் மீண்டும் சந்தித்து……

    தங்கள் மன ஓட்டத்தையும் அதனால் வரும் இனிமையையும் எஙகளுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி!

    - சின்ன கண்ணன்

  6. pithan on 09 Sep 2007 at 9:38 am #

    சின்ன கண்ணன் அவர்களே,
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.நினைவும் கற்பனையும் கலந்ததுதானே வாழ்க்கை.
    //பித்தன் அவர்களே! இதை வளர்த்து ஒரு சுஜாதாவின் கதை போல் எழுதியும் விடலாமே! இருவரும் மீண்டும் சந்தித்து……//-வேண்டாமே சின்னக்கண்ணன்.இறுதியில் உள்ள அந்த சோகம் கெட்டுவிடும் அல்லவா.

  7. ஆனந்தி on 09 Sep 2007 at 6:21 pm #

    எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வி தான் என் மனதிலும் எழுந்தது.இது நிகழ்வா கற்பனையா? நான் என்றோ படித்த, என் மனதில் ஆழ பதிந்த எழுத்தாளர் சாவியின் வாழ்க்கை நிகழ்வுத் தொடரான “ஆப்பிள் பசி” என் நினைவுக்கு வந்தது.அதில் அவர் ஒரு நரி குறவப் பெண்ணிடம் மனதை பறி கொடுத்து தன் கையில் பச்சை குத்திக் கொள்ளும் அளவுக்கு போனதை அழகுற சொல்லி இருப்பார். அது போல் என் மனதில்
    பதியப்போகும் மற்றோரு நிகழ்வு என்று தான் நான் இதை எடுத்து கொண்டேன். இருக்கும் பட்சத்தில், கடவுளே உனக்கு ஒரு விண்ணப்பம்.
    அவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேரும்படி நீ விதியை எழுதவில்லை! ஆனால், கற்பனையாக ராதா எழுதியுள்ள பின்னூட்டத்தை நிஜமாக்கி, அவர்களை இணைக்கலாமே?

    இன்னும் இது போல் நிறைய எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

  8. pithan on 10 Sep 2007 at 2:07 am #

    நன்றி ஆனந்தி
    இந்த இடுகை உங்களை மிகவும் பாதித்திருப்பதை அறிந்து இதை எழுதியவன் என்ற முறையில் மகிழ்கிறேன்.
    //அவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேரும்படி நீ விதியை எழுதவில்லை! ஆனால், கற்பனையாக ராதா எழுதியுள்ள பின்னூட்டத்தை நிஜமாக்கி, அவர்களை இணைக்கலாமே?//
    வேண்டாம்.சில நிஜங்கள் கற்பனைக்கு மாறாக அமைந்து ஏமாற்றமளிக்ககூடும்.லா.ச.ரா அவர்களின் ஒரு கதையில் தன் முன்னாள் காதலியைத் தேடிப்போகும் ஒருவன் அவளை நேரில் பார்த்ததும் அடையும் ஏமாற்றத்தை அற்புதமாகச் சொல்லியிருப்பார்.அந்த நிலை இவர்களுக்கு வர வேண்டாம்.
    //இன்னும் இது போல் நிறைய எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.//

    நம்பலாம்.

  9. சீனா on 19 Sep 2007 at 11:32 am #

    “இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் என் நெஞ்சில் நிற்கும் நீயும்,உன் நினைவுகளும் அவை தரும் சுகமும்,அதோடு கூடிய வலியும் மறையவேயில்லை ”

    கதை அழகாக பழைய இனிய நினைவுகளை அசை போட்டு ரசித்து எழுதப்பட்டிருக்கிறது.
    ஏறத்தாழ ஒரு நாற்பதாண்டு காலமாக இனியவளைத் தேடி அலைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதன் வலி வலிமையானதா ??

    அப்படி என்றால் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை பொய்யானதா ?? சூழ்னிலையின் காரணமாக மணம் புரிந்து பேரக்குழந்தைகள் வரை வந்தது பொய்யானதா ?? கடவுளின் விளையாட்டைப் புரிந்து கொள்ள முடியாத பித்தர்கள் நாம்.

  10. pithan on 19 Sep 2007 at 11:54 pm #

    சீனா அவர்களுக்கு,
    நாம் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் விதியின் கைப்பாவைகள்தாம்.சில நினைவுகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்தாலும் வாழும் வாழ்க்கை பொய்யல்ல.நாம் சமரசம் செய்யக் கற்றுக் கொண்டு விடுகிறோம்.திரைப் படங்களில் சொல்வது போல் “விரும்பியது கிடைக்கா விட்டால்,கிடைத்ததை விரும்ப வேண்டும்”.அதுவே வாழ்க்கை நியதி.
    நன்றி

  11. Pattabhiraman on 13 Dec 2007 at 1:16 am #

    Good effort. Almost all youth would have gone through this stage - juvenile infatuation. What makes this different from other similar ‘love at first sight’ anecdotes is the way you have presented it - with the ‘unsent’ letters from not only the characters, but also from God.

    Good, keep it up.

    P.S: I don’t know how to access tamil fonts on this, hence written in English

  12. pithan on 13 Dec 2007 at 10:37 am #

    அன்பு நண்பர் பட்டாபி அவர்களே,
    உங்கள் பின்னூட்டம் கண்டு ஆச்சரியம் கலந்த ஒரு மகிழ்வடைந்தேன்.உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.தமிழ் மென் பொருள் பற்றி உங்களுக்குத் தனியே ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

  13. ரமேஷ் on 15 Sep 2008 at 11:55 am #

    நன்றாக ஏழுதியுள்ளீர்கள்.

    இரயில் பயணங்களில் நண்பர்கள் கிடைப்பது அறிது.

    வேடிக்கை பார்க்கும் மனம், சேரும் இடம் சிக்கிரம் என்று படபடக்கும்.

    அதிலும் காதல் வருவது?

  14. pithan on 15 Sep 2008 at 12:51 pm #

    @ரமேஷ்

    இரயில் பயணங்களே இனிமையானவைதாம்.ஆனால் ஓரிரு பயணங்கள்தான் இது போல் மறக்கமுடியாதவையாக அமைந்து விடுகின்றன.நெஞ்சில் பதிந்த நிகழ்சிகளைப் பற்றி எழுதும்போது வார்த்தைகள் பீறிட்டுக் கிளம்புவது இயற்கைதானே.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


1 கருத்து:

  1. ellorukkum edo oru vagayil vazhalkayil izhappugal irukkathan seigiradu, aduvum kadal endru varum podu. adai ninaithu parkayil oru perumoochu varume thavira verondrum seiya mudiyadu....

    பதிலளிநீக்கு