தொடரும் தோழர்கள்

சனி, மே 30, 2015

வயசுக்கு வந்தா....?!



”குமுதா!.இன்னைக்குத்தேதி ஒண்ணு.16ஆம்தேதி திங்கட்கிழமை சுமன் பிறந்தநாள் .அந்த விழாவை  அன்னைக்கு வச்சுக்கலாம்.”

”ஏங்க? நீங்க ரொம்பப் பிடிவாதமா நடத்தியே தீருவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கறீங்க. யோசிச்சுச் செய்யுங்க.”

”இதோ பாரு.நான் முன்னாலயே சொல்லிட்டேன்.நல்லா யோசிச்சுத்தான் முடிவு பண்ணி யிருக்கேன்.நம்ம வீட்டில ரொம்ப நாளா எதுவும் விழாவே நடக்கலே.இது ஒரு வாய்ப்பு. ரொம்பச் சிறப்பா நடத்தப் போறேன்.சும்மா எதையாவது சொல்லிட்டிருக்காம,சந்தோசமா ஏற்பாடுகளைக் கவனி”

“அதோ சுமன் வந்துட்டாங்க”

”டேய் சுமன் உன் பிறந்த நாள் அன்னிக்கு விழாவை வச்சிருக்கேன்.இன்னைக்கே அழைப்பிதழ் அச்சடிக்கணும்.நீ ஒன்னோட நண்பர்களையெல்லாம் கண்டிப்பா கூப்பிடு. ரொம்பச் சிறப்பா நடத்திடலாம். வா,சையத் பாக்கருக்குப் போய் உனக்கு நல்ல சூட் தைக்கக் குடுத்துடலாம். அப்படியே ராஜசேகரைப் பார்த்துச் சாப்பாட்டுக்கும் சொல்லிடலாம்.இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டதே இல்லன்னு எல்லாரும் சொல்லணும். நம்ம அய்யாசாமி கிட்ட மத்த ஏற்பாடுகளையெல்லாம் செய்யச் சொல்லிடலாம்”” 

சூடு பிடிக்கிறது 

சூட் தைக்கக் கொடுத்தாகி விட்டது.

அழைப்பிதழ் வந்ததும் சுமார் 250 பேருக்கு-,நண்பர்கள்,உறவினர்கள் –அழைப்பிதழ் வைக்கப்பட்டது.

டின்னர் மெனு தீர்மானிக்கப் பட்டது.

அனைத்தும்  வேகமாக நடந்தேறியது.

அந்த நாளும் வந்தது.

மாலை மணி 5.

அந்த அரங்கில் அனைவரும் குழுமியிருந்தனர்.

சுமனின்  அப்பா கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு “என்ன இன்னும் மாணிக்கத்தைக் காணோமே” என்று சொல்லி முடிக்கவும் யாரோ மாணிக்கம் வந்தாச்சு என்றனர்.

மாணிக்கம் என்ற அந்த நபர் உள்ளே வந்தார். 

“ வா மாணிக்கம்,டேய் சுமன் அந்த பலகையில உட்கார்.மாணிக்கம் புதுசா பிளேடு எடுத்து அவனோட அந்த இளம் தாடி மீசையை வழிச்சிடு!”

நடந்தது. 

”சுமன்.போய் குளிச்சிட்டு புது சூட்டைப் போட்டுக்கிட்டு வா”

மாணிக்கத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.

சுமன் வந்ததும் மாலை அணிவிக்கப்பட்டது.

 சுமன் கேக் வெட்டினான்

பாட்டு நடனம் என்று ஒரே கொண்டாட்டம்.

“டின்னர் தயார்.போய்ச் சாப்பிடுங்க.”

கொத்துக் கொத்தாகக் கூட்டம் சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி நகர்கிறது.

விழா இனிதே நிறைவேறுகிறது

ஆம் இது சுமன் என்ற பையன் வயதுக்கு வந்த விழா.!
*******************************************************************
செய்தி:-:தாணே-இது போன்ற முன்பு நடந்திராத விழா ஒன்று,ஒரு பையன் வயதுக்கு  வந்ததற்காகஅவனது 17 ஆவது பிறந்ததினத்தில் அவனுக்கு முதல் முகச் சவரம் செய்து  விருந்துடன் கொண்டாடப்பட்டது-
--இந்தியாவின் நேரங்கள்-30-05-2015



வெள்ளி, மே 29, 2015

மனிதனும் உணவும்!i



”எல்லாரும் சாப்பிட்டாச்சா?”

இல்லை இல்லை எனக் கோரஸ் குரல்கள்

”சாப்பிட்டு வந்தவர்கள் கையைத் தூக்குங்க”

எந்தக் கையும் உயரவில்லை
“பலே!இப்படித்தான் இருக்க வேண்டும்.ஆன்மீகச் சொற்பொழிவைக்கேட்க வரும்போது வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு வந்தால் தூக்கம்தான் வரும்.வள்ளுவர் சொன்னாரல்லவா. செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று.அதுபோல நீங்கள் 
எல்லாரும் செவிக்குவு வேண்டும் என்பதால் சாப்பாட்டைத் தள்ளிப் போட்டு விட்டீர்கள்!”

அப்படி நினைக்க எனக்கு ஆசைதான்;னால் நீங்கள் சாப்பிடாமல் வந்த காரணம் சொற் பொழிவுக்குப் பின் மண்டபத்தில் இனிப்புடன் சாப்பாடு உண்டு  என்பது உங்களுக்குத் தெரியும்(சிரிப்பு).எனவே அதற்காக இவனோட பேச்சைக் கொஞ்ச நேரம் சகித்துக் கொள்ளலாம் என்பாது உங்கள் எண்ணம்!(கூட்டத்தில் சிரிப்பு)

சாப்பிடாதவர்கள் இரண்டு விதம்.சாப்பிடுவதற்கு இருந்தும் சாப்பாடு இறங்காதவர்கள். அதனால் சாப்பிடாதவர்கள்.பசியிருந்தும் சாப்பிட ஏதும் இல்லாதவர்கள்.அதனால் சாப்பிடாதவர்கள்

எனவேதான் சாத்திரங்கள் சொல்லுகின்றன”தர்மம் செய்”என்று.தாங்களிலே சிறந்தது அன்னதானம்

உங்களுக்கெல்லாம் ஒருவேண்டுகோள்.வேண்டிய அளவு கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். உணவை  இலையில்  மிச்சம் வைத்து வீணாக்காதீர்கள். தைத்திரிய உபநிடதம் சொல்கி
றது”அன்னம் ந பரிசக்ஷீத”ஏனேனில் எல்லா உயிர்களுக்கும் உணவு முக்கியம்.எல்லோரும் உவால் ஆனவர்கள்.

தர்மம் எப்படிச் செய்வது.அந்த அளவு எனக்கு வசதி இல்லையே என்று சொல்லலாம்.

திருமூலர் சொல்கிறார்
“யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
 யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே”

ஆம்!நமது சாப்பாட்டைப் பகிர்ந்துண்டால் போதும்.அதுவே அறம்.

இந்த அடிப்படையில் தான் காஞ்சி மகாப் பெரியவர்கள் பிடி அரிசித்திட்டம் கொண்டு வந்தார்கள்.
உணவு என்பது முக்கியமானது

இன்று தண்ணீரையும் காசு கொடுத்து வாங்குகிறோம்.பத்து ரூபாய்க்கு ஒரு பாட்டில் தண்ணீர் கிடைத்தால் அம்மா தயவென்று மகிழ்கிறோம்!(சிரிப்பு)

நாளை அன்னதானத்தின் சிறப்பைப் பற்றி எடுத்துரைப்பேன்.சமையல்கூடத்திலிருந்து வரும் வாசனையை அனைவரும் நுகரத்தொடங்கி விட்டீர்கள்.எனவே சாப்பிடச் செல்ல,உங்களைச் சாப்பிடச்சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.நாளை பார்ப்போம்.

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)


வியாழன், மே 28, 2015

லாட்ஜில் ஒரு ரெய்டு!



”டக் டக் டக்”

கதவு தட்டப்பட்டது

மீண்டும்..மீண்டும்..

நாராயணனுக்கு விழிப்பு வந்து விட்டது.

கடிகாரத்தைப் பார்த்தான்.

மணி 12.10

இந்த நேரத்தில் யார்?

அந்த லாட்ஜில் வழக்கமாக நடக்கும் அந்த செயல்களை அறிந்திருந்தாலும்,பார்த்திருந்தாலும் இன்று வரை அதனால் அவர்களுக்குப் பாதிப்பு இல்லை.

இப்போது ஏதாவது?

கதவு மீண்டும்...

அறைத் தோழனும் எழுந்து விட்டான்.

நாணா கதவைத் திறந்தான்

உள்ளே நுழைந்தவர் ஒரு போலிஸ் அதிகாரி.

”நீங்கள்தான் சந்திரசேகரனா?”கேட்டார்

“இல்லை.நான் நாராயணன்.”

” அவர்தானா” என்றார் தோழனைக்காட்டி

”அவர் வெங்கட்ராமன்,சந்திரசேகரன் ஊருக்குப் போயிருக்கிறார்”

அந்த அதிகாரி அறிமுகம் செய்து கொண்டார்”நான் வேணுகோபால்,ஐ.பி.எஸ்.உதவிக் கண் காணிப்பாளர்.சந்திரசேகரன் அவர் நண்பரிடம் சொன்ன தகவலின் அடிப்படையில்தான் இன்று ரெய்டு வந்தோம்.மிக மோசமான லாட்ஜ் ஆக இருக்கிறதே,இங்கு ஏன் வசிக்கிறீர்கள்?விரைவில் எங்காவது மாறிப் போய்விடுங்கள்.சந்திரசேகரன் வந்தும் சொல்லுங்கள்”

அவர் போய் விட்டார்.நண்பர்கள் இருவரும் பயத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.
என்ன பண்னித் தொலைத்திருக்கிறான் இந்தச் சந்துரு.?பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கூடாதோ?வேண்டாத வம்பு.

ஒரு ஃப்ளாஷ் பேக்.....

சில நாட்களுக்கு முன்.

சந்திரசேகரனின் வகுப்புத்தோழனான குமார் ஐபிஎஸ்,அந்த ஊரில் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சியில் இருந்தவன்,அவனைப் பார்க்க வந்தான்.அப்போது சந்திரசேகரன் அவனிடம் அந்த லாட்ஜில் தடையின்றி நடக்கும் தொழில் பற்றிக் கூறி விட்டான்

அவன்  உதவிக்கண்காணிப்பாளரிடம் சொல்ல அதன் விளைவே இந்த ரெய்டு.

இப்போது,அறைக்குள்ளிருந்தவாறு பார்த்தார்கள் நண்பர்கள்.

சில பெண்களையும் ஆண்களையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

கதவைச் சாத்திக் கொண்டு படுத்த இருவருக்கும் உறக்கமே வரவில்லை.

மறுநாள் காலை.காலை 5 மணியளவில் ஊரிலிருந்து திரும்பி லாட்ஜை அடைந்தான் சந்திரசேகரன்.

அவனைப் பார்த்ததும் வரவேற்பு மேசையில் இருந்த மேலாளர் சொன்னார்”சார். உங்களுக் கெல்லாம்  இந்த லாட்ஜ் சரிப்படாது.சீக்கிரம் காலி பண்ணிடுங்க”அவர் சொற்களில் ஒரு மரியாதை,பயம்,வெறுப்பு எல்லாம் கலந்திருப்பதாகத் தோன்றியது

“என்ன சார் திடீர்னு?”

”போயிடுங்க.ரெண்டு பேருக்கும் பிரச்சினையில்லை.உங்க அறைத்தோழர்கள் கிட்ட சொல்லணும்னு இருந்தேன்.நீங்க வந்துட்டீங்க. அவங்க கிட்ட சொல்லுங்க.”

அதற்கு மேல் பேச அவர் விருப்படவில்லை என்பது தெரிந்தது.

அறையை அடைந்தான் சேகர்.கதவைத் தட்டினான்.

திறந்த நண்பர்கள் நடந்ததையெல்லாம் கூறினார்கள்.

அன்று மாலை ஊரெங்கும் சுற்றி ஒரு வீட்டு மாடியில் இருந்த ,வாடகை அதிகமான ,அறையை முடிவு செய்தனர்.

இரு நாட்களில் அங்கு மாறினர்.

அதன் பின் சுவாரஸ்யமான காட்சிகள் காணக்கிடைக்கவில்லை!

(நிகழ்வுகள் அனைத்தும் உண்மை.காவல்துறை அதிகார்களின் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.பயிற்சியில் இருந்த அதிகாரி,நேர்மையின் இலக்கணமானவர், பிற்காலத்தில் மிக உயர்ந்த பதவியை அடைந்தார்)

புதன், மே 27, 2015

கனவுகள்+கற்பனைகள்=?



நேற்று ஒரு பேய்க்கனவு பற்றிப் பகிர்ந்திருந்தேன்.
அது கனவல்ல
கற்பனைதான்
.
இப்போதெல்லாம் பெரும்பாலும் எனக்குக் கனவுகளே வருவதில்லை.வந்தாலும் அர்த்தமற்ற, கனவுகள்தான்.அவை விழிக்கும்போது நினைவிருப்பதில்லை

முன்பெல்லாம் எனக்குச் சில கனவுகள் அடிக்கடி வரும்.

ஒரு கனவில் நான் மேலே பறந்து கொண்டிருப்பேன்.தரையிலிருந்து எளிதாக மேலே கிளம்பிப் பறக்க ஆரம்பிப்பேன்.பறந்து கொண்டே பறவைப் பார்வையாய் கீழே இருக்கும் கட்டிடங்களை,மனிதர்களையெல்லாம் பார்த்துப் பெருமிதம் அடைவேன்,என் திறமை குறித்து.மனிதர்கள் என்னக் காட்டி எதோ பேசிக்கொள்வர்.பறப்பது மிக எளிதான செயலாக இருக்கும்.இரண்டு கைகளயும் பக்கவாட்டில் நீட்டி,துடுப்பு தள்ளுவது போல் முன்னிருந்து பின்னாகத் தள்ளி,காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுவேன்.மேலே செல்ல மேலிருந்து கீழாகவும்,கீழே இறங்கக் கீழிருந்து மேலாகவும் கைகளை அசைத்துப் பறப்பேன்.விழிப்பு வந்த பின்னும் அந்தப் பறக்கும் உணர்ச்சி நீடிக்கும்.பறந்து பார்க்கலாமா என்று யோசிக்க வைக்கும்.

அந்தக்கனவு வருவது நின்று பல ஆண்டுகளாகி விட்டது.முன்பு ஏன் வந்தது?பின்னர் ஏன் வருவதில்லை?அந்த வயதிற்கே உரிய,ஆசைகள் காரணமா?வாழ்க்கையில் மேலே மேலே செல்ல வேண்டும் என்ற ஆவல் காரணமா?மற்றவர் செய்யாத எதையாவது செய்ய வேண்டும் என்ற இச்சை காரணமா?வயதான பின்,வாழ்க்கையின் எதார்த்தங்கள் புரிந்த பின், பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தரையில் காலூன்றி நின்ற பின் அக்கனவு நின்று போனதா?எனக்குத் தெரியவில்லை.

இன்னொரு கனவு-சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது வழியில் கிழே கிடக்கும் ரூபாய் நாணயத்தை குனிந்து எடுப்பேன்.அப்போது அருகில் இன்னொரு நாணயம் இருக்கும் அதை எடுக்கும் போது இன்னொன்று,இப்படி எடுக்க எடுக்க நாணயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.கனவு கலைந்து விடும்.இக்கனவும் பல ஆண்டுகளுக்கு முன் நின்று போனது.இதன் பொருள் என்ன?அந்த நாட்களில் எனக்குப் பணத்தாசை இருந்தது என்பதா?அப்படியானால்,தங்கக் காசுகள் நிறைந்த ஒரு புதையல் கிடைப்பது போல அல்லவா கனவு வந்திருக்க வேண்டும்?சில்லறைத் தனமான கனவு ஏன்?இப்படியிருக்குமோ?பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும்,அதைச் சிறிது சிறிதாகத்தான் சேர்க்க முடியும் என்ற அறிவும்தான் இக்கனவோ?இப்போது இக் கனவு வராமைக்குக் காரணம்-பணத்துக்கு நான் கொடுக்கும் மிகக் குறைந்த முக்கியத்துவம்?இந்த வயதில் எனக்கு என்ன வேண்டும்?உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இடம் இவை போதாவா?

ஆனால் வரவேண்டிய வயதில் வரவேண்டிய ஒரு கனவு எனக்கு வந்ததே இல்லை.என் வாலிபப் பருவத்தைப் பற்றித்தான் சொல்கிறேன்.என் நண்பர்கள் எல்லாம் தங்கள் கனவில் அவள் வந்தாள், இவள் வந்தாள்'என்றெல்லாம் சொல்வார்கள் .ஆனால் என் கனவில் ஒரு நாள் கூட ஒரு கமலாவோ விமலாவோ வந்ததில்லை.நானும் படுக்கப் போகும் முன், எனக்குத் தெரிந்த அழகான பெண்களைப் பற்றி நினைத்துக் கொண்டே படுப்பேன்.ஆனாலும் கனவு வந்ததில்லை.ஒரு நாள் ஒரு பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டு,இன்று அவளுடன் கனவில்பேச வேண்டும் என்று அழுத்தமாக நினைத்துக் கொண்டு படுத்தேன்.தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)

இதற்கு என்ன காரணம்?இயற்கையிலேயே எனக்குப் பெண்களுடன் பேசுவதில் இருந்த வெட்கம்,பயம்,தயக்கம் இவை காரணமோ?ஆழ்மனத்தில் இருந்த இந்த உணர்வுகள் கனவுகளையும் தடுத்திருக்குமோ?.காலம் செல்லச் செல்ல அந்தப் பயமும்,தயக்கமும் நீங்கி விட்டன.

கனவுகள்+கற்பனைகள்=பதிவுகள்

(modified repost)