தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 10, 2010

சிறு பதிவர் சந்திப்பு!

( தலைப்பைப் பார்த்தவுடன் தோன்றும் ஒரு சந்தேகம்—சிறு பதிவர்களின் சந்திப்பா அல்லது பதிவர்களின் சிறு சந்திப்பா என்பதே!சுத்தமான பசுவின் பால் என்றால் பசு சுத்தமானதா அல்லது பால் சுத்தமானதா என்பது போல.இங்கு சிறு என்ற அடை மொழி எங்கு பொருந்தும் என்றால் இரண்டுக்கும்தான்.வந்த பதிவர்களும் சிறு பதிவர்களே(வயதில் அல்ல;பதிவுலக அனுபவத்தில்.சந்திப்பும் சின்னஞ்சிறிய சந்திப்பே!)

எனது பேருந்து வள்ளுவர் கோட்டத்தை அடைந்தபோது மணி சரியாக 9.13.40.போகும்போது யார் வந்திருப்பார்கள் என்று லிஸ்ட் போட வேண்டிய அவ்சியமே எனக்கில்லை.ஏனெனில் யார் வருவார்கள் என்று எனக்குத் தெரியும்!(இந்த ஆரம்பம் ஒரு பிரபல,மூத்த பதிவரின் பாணி!அவரளவுக்கு எழுத முடியா விட்டாலும் அவரின் ஆரம்பத்தையாவது காப்பி அடிப்போமே!)

வள்ளுவர்கோட்டம் நிறுத்தத்தில் யாராவது பதிவர்கள் நிற்கிறார்களா என்று பார்த்தேன்.ஒருவரும் இல்லை.அங்கிருந்து பொடி நடையாக நடந்து எம்.எல்.எம்.திருமண மண்டபத்தை அடைந்தேன்.மணி 9:30.வாசலில் என்னை வரவேற்க சக பதிவர் யாரும் நிற்கவில்ல.உள்ளே சென்றேன்.நல்ல கூட்டம்.சரசக்கும் பட்டுப் புடவைகள்.பள பளபளக்கும் தங்க நகைகள்.மணமணக்கும் மல்லிகைப் பூச்சரங்கள்.(யோவ்! அங்க ஆண்களே இல்லையா? –இருந்தார்கள்.ஆனால் இந்த மாதிரி இடங்களில் பெண்கள்தானே தனித்துத் தெரிகிறார்கள்!)-சரி புது வேட்டிகள்,சட்டைகள்!

என் பார்வை சுழன்று வந்தது.பின்னாலிருந்து என் தோளில் ஒரு கை விழுந்தது.திரும்பிப் பார்த்தேன்.சக பதிவர் வே.நடனசபாபதி (நினைத்துப்பார்க்கிறேன்).அவர் மனைவியுடன் வந்திருந்தார்.அறிமுகம் செய்து வைத்தார்.சிற்து நேரம் நானும் சபாபதியும் பேசிக் கொண்டிருந்தோம்.”நேற்று முன் தினம் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டு விட்டு ரயில் ஏறினேன்.மதுரையில் ஒரு திருமணம்.இன்று காலைதான் திரும்பினேன்.” என்றார்.

அப்போது கையில் ஒரு கோப்பை காப்பியுடன் எங்களைக் கடந்து சென்றார் பதிவர் வாசு.
”வாசு”-கூப்பிட்டேன்.காதில் விழவில்லை
”nighthawk”-(அவர் பதிவின் பெயர்)
திரும்பிப் பார்த்தார்..
அமர்ந்தார்.பேச ஆரம்பித்தோம்.
சமீபத்திய அவரவர் பதிவு பற்றிப் பேசினோம்.முதுகு சொறிந்து கொண்டோம்!
இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்தோம்
வேறு சில நண்பர்கள் வந்தார்கள்.அவர்களுக்குப் பதிவு ஆரம்பிப்பது பற்றி விளக்கினோம்.(ஆமாம்—நம்ம சந்தேகத்தையே தீர்த்துக்க முடியவில்லை.இதில் அடுத்தவர் சந்தேகத்தை தீர்க்கிறோமாம்!)

”அங்க பாருங்க’—வாசு
டி.வி.யில் தாலியைக் க்ளோசப்பில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
தாலி கட்டியாயிற்று..

”அப்புறம் என்ன?கவரைக் கொடுத்துவிட்டுச் சாப்பிடப் போக வேண்டியதுதானே?”(பசிக்க ஆரம்பித்து விட்டதே!)

எழுந்தோம்.மேடை சென்றோம்.நண்பரிடம் கவர் கொடுத்தோம்.

”சாப்பிட்டு விட்டுப் போங்க.”
(எவனாவது சாப்பிடாமப் போவானா என்ன?)

சாப்பாட்டுக் கூடம் நோக்கி விரைந்தோம்.
”யார் கேடரிங்க்?” வழக்கம் போல் என் கேள்வி.
“செல்லப்பா,சார்”
“குட் .நன்னாருக்கும்”
சாப்பிட்டோம்.பீடாவை வாயில் திணித்தோம்.தாம்பூலப் பை வாங்கிக் கொண்டோம்.
”சரி அடுத்த பதிவர் சந்திப்பு எப்போ?”
”பார்க்கலாம்!”
கல்யாணமோ,காதுகுத்தோ வராதா என்ன?!

11 கருத்துகள்:

  1. சிறு பதிவர்களின் சந்திப்பா அல்லது பதிவர்களின் சிறு சந்திப்பா என்ற ஆரம்பமே அட்டகாசம் ! ஒரு சிறு சந்திப்பையே ஒரு பதிவிற்கு வித்தாக பயன்படித்திய உத்தி சிலர்க்கு தான் வரும் ... Nighthawk.

    பதிலளிநீக்கு
  2. மொக்கை போடுவது என்று தீர்மானித்து விட்டால்,பார்ப்பவை எல்லாமே பதிவுக்கு வித்தாகும்!
    வருகைக்கும்(சந்திப்புக்கும்,பதிவுக்கும்!)
    கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஐயா பதிவர் சந்திப்பு எல்லாம் நடக்குதா. நல்லாதான் இருக்கு.எழுத்துநடை நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. வாங்க இனியவன்,
    நீங்க வந்ததில் மகிழ்ச்சி.பத்து நாட்களுக்கு மேலாக பதிவுலகத்தில் காணோமே?
    எங்காவது இரண்டு ,மூன்று பதிவர் சந்தித்தால்,அது பதிவர் சந்திப்புதானே!
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஐயா என் நண்பனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கான்பூர் போயிருந்தேன். நேற்று காலைதான் வந்தேன். வந்ததும் முதலில் உங்களுக்கு மட்டும்தான் பதில் எழுதியுள்ளேன். இனி சந்திப்பு தொடரும்.

    பதிலளிநீக்கு
  6. நான் கூட கொஞ்சம் ஏமாந்து தான் போய்ட்டேங்க. உன்மையிலேய பதிவர்களுக்காக சந்திப்பு கூட்டம் நடக்குது போல அதுவும் மனைவியோட வர்ற அளவுக்கு முன்னேறியாச்சுன்னு நெனைச்சேன்.

    பதிலளிநீக்கு
  7. @இனியவன்,
    எப்படியிருக்கிறது கான்பூர்?ஒரே ஒரு முறை வங்கி ஆய்வுக்காகப் போன நினைவு!
    அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. @சிவகுமாரன்
    திருமணத்துக்கு வந்த,பதிவில் குறிப்பிடப்பட்ட இருவரும் (முன்னாள் சக அலுவலர்கள்) பதிவர்களாக இருந்ததால்,அதையே ஒரு பதிவர் சந்திப்பு என்று மாற்றி விட்டேன்!ஆனால் பதிவுகள் பற்றிச் சிறுது நேரம் பேசியதென்னவோ உண்மைதான்!
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஐயா கான்பூர் ரொம்ப மாறிவிட்டது ஆனால் மாறவில்லை குண்டுகளும் குப்பைகளும் அது போல மக்களும்.

    பதிலளிநீக்கு
  10. சிறு(!)பதிவர் சந்திப்பு பற்றிய பதிவைப்படித்தேன்.ரசித்தேன்!. இதை படித்தவுடன் தோன்றியது 'நீங்கள் ஏன் அப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யக்கூடாது என்று? ' விரைவில் சந்திப்போம்.சிந்திப்போம்!

    பதிலளிநீக்கு
  11. வே.நடனசபாபதி கூறியது...

    //சிறு(!)பதிவர் சந்திப்பு பற்றிய பதிவைப்படித்தேன்.ரசித்தேன்!. இதை படித்தவுடன் தோன்றியது 'நீங்கள் ஏன் அப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யக்கூடாது என்று? ' விரைவில் சந்திப்போம்.சிந்திப்போம்!//
    நல்ல யோசனைதான்.ஆனால் மீண்டும் ஒரு சிறுசந்திப்புக்குத்தான் நம்மால் ஏற்பாடு செய்ய முடியும்,அடுத்த திருமணத்துக்குக் காத்திருக்காமல்!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு