எனது முந்தைய மார்கழிப் பொங்கல் பதிவில்,திருப்பாவை, திருவெம்பாவை,திருவாதிரை என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.அதைப் படித்த என் வைணவ நண்பர்கள் சிலர்,திருப்பாவை,திருவெம்பாவை இரண்டு பற்றியும் எழுதியது சரி,ஆனால் திருவாதிரை பற்றி எழுதிய நீ எப்படி மிக முக்கியமான வைகுண்ட ஏகாதசி பற்றி எழுதாமல் விடலாம் என்று என்னுடன் சண்டைக்கு வந்தனர்.எனவே இப்பதிவில் வைகுண்ட ஏகாதசி பற்றி எழுதுகிறேன்.ஏகாதசி என்பது அமாவாசை/பௌர்ணமிக்குப் பின் வரும் 11வது நாள்.(எல்லோருக்கும் தெரிந்த செய்தியைப் பெரிசா எழுத வந்துட்டியா?)மார்கழி மாதத்தில்,வளர் பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவது,வைகுண்ட பலன் தரும் என்பார்கள்(விரதம் என்றால் என்ன?-பட்டினிதான்.! மற்ற சில நியமங்களும் உண்டு.)ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும்.அக்காலத்தில் பெரியவர்கள் சொல்வார்கள்”தினம் இரண்டு;வாரம் இரண்டு;மாதம் இரண்டு;வருஷம் இரண்டு என்று.மாதம் இரண்டு என்றால்,இரண்டு ஏகாதசிகளிலும் உண்ணா நோன்பை மேற்கொள்வது. (மற்றவை என்ன என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாதது;எனவே தெரியாவிடில் நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)ஏகாதசிக்கு மறுநாள்,துவாதசியன்று காலை சீக்கிரமே உணவு அருந்த வேண்டும்.(பின்னே ஒரு நாள் பட்டினி என்றால் சும்மாவா?)இதைப் பாரணை என்பார்கள்.பட்டினியை விட்டாலும் பாரணையை விடக் கூடாது என்பர்.இதை நான் தவறாமல் கடைப் பிடிக்கிறேன்.பட்டினியை விட்டு விடுகிறேன்;பாரணையை விடுவதில்லை!பாதிப் புண்ணியம் உண்டோ|? துவாதசி அன்று உணவில் அகத்திக் கீரையும்,நெல்லிக்காயும்,,சுண்டைக்காயும் இருக்க வேண்டும்.!இதற்கு விஞான ரீதியான காரணம் இருக்க வேண்டும்.
இப்போது வைகுண்ட ஏகாதசிக்கு வருவோம்.ஆண்டு முழுவதும் விரதம் இருக்க முடியா விட்டாலும்,வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் அது மூன்று கோடி ஏகாதசி விரதத்துக்கு சமம் என்று சொல்கிறார்கள்.அதனால் இது முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப் படுகிறது.
இத்தினம் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் மிக விசேஷமாக் கொண்டாடப் படுகிறது.இந்நாளில் மிக முக்கியமான நிகழ்ச்சி சொர்க்க வாசல் திறப்புதான்.அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப் பட்டவுடன்,அவ்வழியாகச் செல்வதற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பர்.மது கைடவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி,அன்று அவ்வாசல் வழியாக வருபவர்களுக்கு, அவர்கள் எப்படிப்பட்ட பாவம் செய்தவர்களாயினும் முக்தி அளிப்பதாக பகவான் வாக்களித்தார்.எனவேதான் இச்சொர்க்கவாசல் திறப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நான் திருவாதிரை அன்றும் கோவிலுக்குப் போகவில்லை;வைகுண்ட ஏகாதசி அன்றும் கோவிலுக்குப் போகவில்லை.கூட்டமில்லாத சாதாரண நாட்களில்தான் நான் பெரும்பாலும் கோவிலுக்குச் சென்று அமைதியாக வழி பட்டு விட்டு வருவேன்.இப்போது சில ஆண்டுகளாக மகா சிவராத்திரியன்று மருந்தீச்வரர் கோவில் போகிறேன்.அங்கு எங்கள் வேதக்குழு ருத்ரம்,சமகம் ஜபித்தபின்,சிறப்பு வழிபாட்டுக்கு அனுமதிக்கப் படுவோம்..எனவேதான் செல்கிறேன்.
கைலாயநாதன்,வைகுண்டநாதன் இருவர் அருளாலும் எல்லாரும் எல்லா நலமும் பெற்று வாழப் பிரார்த்திக்கிறேன்
எனக்கு எல்லாமே bounce ஆகிவிட்டது என்றாலும் அரிய செய்தி என்று புரிகிறது.
பதிலளிநீக்கு?;-)வருகைக்கு நன்றி இனியவன்.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு சார்.
பதிலளிநீக்குஅந்த 2 கணக்கு இது தானா?
தினம் 2 - குளியல்
வாரம் 2 - உறவு
மாதம் 2 - விரதம்
வருடம் 2 - மருந்து (பேதிக்கு???)
எனக்கு சரியா என்று தெரியவில்லை. வாரமும் ,மாதமும் மாறி இருக்கிறதோ என்று சந்தேகம். நிவர்த்தி செய்யுங்களேன்.
//பட்டினியை விட்டாலும் பாரணையை விடக் கூடாது என்பர்.இதை நான் தவறாமல் கடைப் பிடிக்கிறேன்.பட்டினியை விட்டு விடுகிறேன்;பாரணையை விடுவதில்லை!பாதிப் புண்ணியம் உண்டோ|?//
பதிலளிநீக்குநிச்சயம் உண்டு!!
வைகுண்ட ஏகாதசியைப்பற்றி வெகு சுவாரஸ்மாய் பதிவிட்டிருக்கின்றீர்கள்.
சிவகுமாரன்,
பதிலளிநீக்குகணக்குச் சரியே!சிலர் தினம் இரண்டு என்பதை கழிவை வெளியேற்றுதல் என்பர்.இவை ஆரோக்கியமாக வாழ வழி என்றனர் முன்னோர்.மற்றபடி சில விஷயங்கள் அவரவர் வயதையும், வலிமையையும் பொறுத்தது!
வருகைக்கு நன்றி.
வே.நடனசபாபதி கூறியது
பதிலளிநீக்கு// நிச்சயம் உண்டு!!//
அப்படியானால் பாதிப் புண்ணியம் உங்களுக்குக் கொடுத்து விடுகிறேன்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.