தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 20, 2013

சூரிய புத்திரி--தொடர்கிறாள்



சூரிய புத்திரி என்ற தலைப்பில் ஒரு கதையின் முதல் பகுதி 22-12-2012 அன்று வெளியிட் டேன்.

காரணமே இன்றி அடுத்த பகுதி தாமதமாகி விட்டது.

இன்று அதன் தொடர்ச்சி..........

ரோகிணிக்கு சூரியன் மேல் ஒரு பிரேமை.சினிமா பைத்தியம்,கிரிக்கெட் பைத்தியம்  போல் என் தங்கை சூரியப் பைத்தியம்.மணிக்கணக்கில் மொட்டை மாடியில் நின்றபடி சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.வடம் உலர்த்துகிறேன்,மிளகாய் உலர்த்துகிறேன் என்று மாடியே றினால், அவ்வளவுதான்,வெயிலோடு ஐக்கியமாகி விடுவாள்.கால் பதிக்க முடியாத கொதிக்கும்  தரையில், ஆனந்தமாக நின்று கொண்டிருப்பாள்.நாங்கள் கையைப்பிடித்து இழுத்தால்தான் அரை மனதோடு படியிறங்குவாள்.

“இருடா...இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டு வரேனே.வெயில்லே நிக்கறது எவ்ளோ சுகம்?”

“உடம்பெல்லாம் வேர்வை வழியறது..எறங்கி வாடி கீழே..”

“வேர்வை என்ன தெரியுமோ...சூரியன் தெளிக்கற பன்னீர்டா”

“பித்துக்குளி மாதிரி உளறாதே.சன் ஸ்ட்ரோக் வந்துடும்”

“அதெல்லாம் புரளி.சூரியன் யாரையும் அழிக்கணும்னு நினைக்கவே மாட்டான் இந்த உலகம்  இயங்கறத்துக்கு ஆதார சக்தியே அவன்தான்.சூரியன்தான் ஆதி..அவன்தான் மூலம் ..தெரியுமாடா...”என்று பிதற்றுவாள்

“உனக்குப் பைத்தியம்தாண்டி பிடிச்சிருக்கு...வா..கீழே போகலாம்..காலெல்லாம் கொதிக்கிறது"

“எனக்கு சுடவேயில்லியேடா.அதுக்குத்தான் சூரியனை நேசிக்கக் கத்துக்கோன்னேன். .அவனைப் பாத்துண்டேயிருந்தா உடம்புல ஒரு புது சக்தி பிறக்கும்...”

“உன்னோட பேசிப்பேசி இருக்கற சக்தியும் போயிடும் போலிருக்கு...”என்று ரோகிணியைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.

இவள் இந்தத் தேதியிலிருந்துதான் இப்படி இருக்கிறாள் என்றுதீர்மானிக்க முடியவில்லை. நானும் அம்மாவும் கடந்த நான்கைந்து மாதங்களாகத்தான் கண்காணிக்கத் தொடங்கினோம்
சித்திரை மாதம் அக்னி நட்சத்திரத்தில்  ஒரு நாள் காலையில் ரோகிணியைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்தோம்.கல்லூரித்தோழி  வீட்டுக்குப்போய் வருவதாகச் சொல்லி விட்டுச் சென்றவள் நெடு நேரமாகியும் திரும்பவில்லை.அவளுடைய சிநேகிதிகள் விட்டுக்குப் போய் விசாரித்தோம். எங்கேயும் இல்லை.போலீஸில் சொல்லலாமா என்று ஆலோசித்தோம்இதற்கு முன்னால் இப்படி எங்குமே சென்றதில்லை.ஒரே கலவரமாக இருந்தது.எந்த முடிவுக்கும் வர முடியாமல் மதியம் வரை காலம் தாழ்த்தினோம்!

பன்னிரண்டரை மணிக்கு போன் அடித்தது .ஓடிப்போய் எடுத்தேன்.யாரோ அறிமுகமில்லாத நபர் பேசினார்

“ரோகினி வூடாபா?”குரலிலேயே சாராய நெடி வீசியது!

”ஆமா..நீங்க யாரு..எங்கேருந்து பேசறீங்க..”என்றேன் படபடப்புடன்.

“நான் டில்லி பாபு பேசறேம்பா.பீச்சுலே ஒரு பொண்ணு காலலேந்து பட்துக்கினு கீதுபா”

“பீச்சா..என்ன சொல்றீங்க..ஒண்ணும் புரியலையே..”எனக்கு இதயத்துடிப்பு அதிகமாகி விட்டது.அம்மா என்னருகில் வந்து பயத்துடன் விழித்தாள்.

”மெரினா பீச்சுலே ஒலப்பாலிங்க செலைக்குப் பின்னால ஒரு பெண்ணு மல்லாக்கா கெடக்குதப்பா...பேரு கேட்டா ரோகிணின்னு சொல்லுதப்பா...”

“தண்ணியில மூழ்கிட்டாளா என்றேன்,அதிர்ச்சியுடன் ஏதோ கற்பனையில்

“அதெல்லாம் ஒண்னுமில்ல.மணல்ல பட்துக்குனு கண்கொட்டாம சூர்யனைபாத்துக்கினுக் கீது.எந்திரின்ன எந்திரிக்க மாட்டேங்குது.யார் சொல் பேச்சையும் கேட்க மாட்டேங்குது.”

“இந்த போன் நம்பர் எப்படிக் கெடச்சது”

” அதும் பையில இந்த நம்பர் எய்தின காயிதம் இருந்துதா..அதான் போன் பண்ணேன்.
பப்ளிக் பூத்துலேந்து பேசுறேன்.நீ யாருபா பேசறது...”

“நான் அவளோட அண்ணன்தான் பேசறேன்.நீ...நீங்க அவளை எப்பப் பாத்தீங்க?”

“காலைலே பத்து மணிலேந்து அது இங்கதாம்பா கீது...ஒட்னே வந்து இட்டுக்கினு போப்பா...”

“இதோ வந்துட்டேன்..’

அம்மாவை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் கடற்கரைக்கு விரைந்தேன்.

(தொடரும்)




செவ்வாய், மார்ச் 19, 2013

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்!



பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்!

என்ன,தலைப்பு இப்படி இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

படித்துப் பாருங்கள்,புரியும்!

பிருந்தாவன்!மதுராவுக்கு அருகில் இருக்கும் ஊர்.

ஆனால் அங்கு அந்த ஊரின் பெயர்..விருந்தாபன்!’ப’ வும் ’வ’வும் மாறி விட்டன.

ஆண்டு 1993.

அந்த ஊரில் இருக்கும் எங்கள் வங்கிக்கிளை ஆய்வு நிமித்தம் நான் அங்கு செல்ல நேர்ந்தது.

ஆனால் தங்கிய இடம் மதுரா.

தினம் காலை மதுராவிலிருந்து ஃபட் ஃபட் இல் போய் மாலை மதுராவில்  என்   அறைக்குத் திரும்புவேன்.

அந்தக் கிளை மேலாளர் அங்கேயே தங்காமல் தினம் தில்லியிலிருந்து ஆக்ரா எக்ஸ்பிரஸ்ஸில் வந்து போய்க் கொண்டிருந்தார்.

எனவே பல நாட்கள் தாமதமாக வருவார்.மாலை சிறிது முன்பாகவே புறப்பட்டு விடுவார்!

ஆய்வு தொடங்கிய நாள் முதல் என்ன நடக்கிறது, ஆய்வாளர்கள் என்ன குறைகள் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எந்த வித அக்கறையும் இல்லாமல் வருவதும் போவதுமாய் இருந்தார்.

ஆய்வாளர்களுக்குத் தேவையான ஆவணங்கள்,பதிவேடுகள்,பேரேடுகள் கொடுப்பதற்கு எந்த வித ஏற்பாடும் செய்யவில்லை.

நாங்களே அதிகாரிகளை அணுகி தினமும் வேண்டிய ஆவணங்களை பெற்று ஆய்வைநடத்தி வந்தோம்.

என் வழக்கப்படி நான் தினமும் கிளை திறக்கும் முன்பே அங்கு சென்று விடுவேன்;ஆனால் எனக்கு வேண்டிய ஆவணங்கள் கிடைப்பது எப்போதுமே தாமதப்படும்.

ஒரு நாள் ரயிலும் தாமதம்,எனக்கு ஆய்வுக்கு வேண்டியவைகள் கிடைப்பதிலும் தாமதம். லேட்டாக வந்த மேலாளர் நேராகத் தன் அறைக்குச் சென்று அமர்ந்து விட்டார்.நீண்ட நேரத் தாமத்துக்குப் பின் ஒரு கடை நிளை ஊழியர் வந்து என்ன புத்தகங்கள் வேண்டும் எனக் கேட்டார்.

அதுதான் ஒட்டகத்தின் முதுகில் போட்ட கடைசித் துரும்பாகியது!

என் அலுவலக வாழ்க்கையிலேயே முதல் முறையாக நான் அளவற்ற கோபம் கொண்டேன்.

மேலாளர் அறைக்குச் சென்றேன்

“என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.தாமதமாக வருகிறீர்கள் விரைவில் சென்று விடுகிறீர்கள்.  எப்படியோ போங்கள்?ஆனால் வங்கியில் ஆய்வு நடக்கிறதே ?அதாவது தெரியுமா?எங்களுக்கு ஆய்வு முடிப்பதற்குக் காலக் கெடு இருக்கிறது.உங்களைப் போன்ற ஒத்துழையாத மேலாளரை நான் பார்த்ததில்லை.இதை பற்றி தலைமை அலுவலகத்துக்கு நான் ஒரு சிறப்பு அறிக்கை அனுப்பப் போகிறேன்.”

இரைந்து விட்டு வெளியே வந்து விட்டேன்.கிளை முழுவதும் அதை எதிர்பார்க்காததால் ஆடிப்போய் விட்டது.

இந்த நிகழ்வுகளால் நான் நொந்து போனேன்..பிருந்தாவனத்தில் நான் நொந்த குமாரனா னேன்!  (தலைப்பு வந்து விட்டதா?!)

அன்று மாலை மேலாளர் என்னை உள்ளூர்க் கோவில்களுக்கு அழைத்துச் செல்வதாய் முதல் நாளே  முடிவு செய்திருந்தோம்!

அதன் படி அன்றுமாலை மேலாளர் என்னைக் கோவில்களுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் என் கோபமும் மன அழுத்தமும் குறையவேயில்லை.கோவிலுக்குச் சென்றால் நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையால் சென்றேன். அந்த ஊரில் பல கோவில்கள்.ஆனால் கோவில் அல்லாத ஒரு இடமும் உள்ளது.

அந்த ஊரில் ஒரு சிறிய நந்தவனம் உள்ளது.குட்டையான மரங்கள் நிறைந்தது.உள்ளே சிம்மாசனம் போன்ற ஒரு கட்டிடம் வேறு.நந்தவனத்துக்குள் ஸ்வாமி ஹரிதாஸின் சமாதியும் இருந்ததாக நினைவு.

அங்கு நுழைந்தவுடன் என் மனம் அமைதியில் மூழ்கியது.என்னவென்று விவரிக்க இயலாத ஒரு பரவசம்.உலகத்து உயிர்களையெல்லாம் நேசிக்கும் ஒரு மனநிலை;விவரிக்க இயலாத ஒரு சாந்தி!

மேலாளர் அந்த இடத்தைப் பற்றி அப்போது சொன்னார்.இப்போதும் இரவுகளில் கிருஷ்ணர் அங்கு வந்து கோபிகையர்களுடன் ஆடிப்பாடுகிறாராம்.அந்த நந்தவனத்தைச் சுற்றி மதிற் சுவர்.மாலை ஆறுமணிக்குக் கதவைப் பூட்டி விடுவார்கள்.பின் உள்ளே யாரும் செல்ல முடியாது. அதையும் மீறி உள்ளே பதுங்கியிருந்த ஓரிருவருக்குப் பைத்தியம் பிடித்து  விட்டதாம் . இத்தனையும் சொன்ன மேலாளர் என்னைக் கேட்டார்”இங்கு வந்தது முதல் உங்கள் முகத்தில் ஒரு சாந்தம் தெரிகிறது; மிகவும் அமைதியாகி விட்டீர்கள்;என்ன நடந்தது?”

நான் சொன்னேன்”எனக்கே தெரியவில்லை.ஒரு விவரிக்க முடியாத மகிழ்ச்சி;அமைதி இவற்றால் மனம் நிரம்பியிருக்கிறது!”

ஆம்!கிருஷ்ண விழிப்புணர்வு நிலை என்பது அதுதான்! நான் கிருஷ்ணர் என்ற ஆனந்த அனுபவத்தின்  உடமையானேன்!நொந்தகுமாரனான நான்  ஆனந்த குமாரனானேன்  !

(அதை விளக்க முடியாது ;அது ஒரு அனுபவம்;அவரவர் ஆன்மீக  அளவைப் பொறுத்து மாறலாம்.)

ஹரே கிருஷ்ணா!

டிஸ்கி:தலைப்பு ஒரு பிரபல பதிவரின் வலைப்பூவின் பெயர்;நான் சொல்ல வந்த செய்திக்குப் பொருத்தமாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன்,நன்றியுடன்!

ஞாயிறு, மார்ச் 17, 2013

ஹாலிடே!ஜாலிடே!!



திருமணம் செய்து கொள்வது என்பது ஒரு உணவகத்துக்கு நண்பர்களுடன் செல்வதைப் போன்றது.உங்களுக்கு வேண்டியதை முதலில் கேட்டுப் பெறுகிறீர்கள்;பின் மற்றவர் சாப்பிடுவதைப் பார்த்ததும் நாமும் இதையே கேட்டிருக்கலாமே என்று தோன்றும்!
....................................................
ஒருவன்:நீண்டநாள் வாழ ஏதாவது வழி இருக்கிறதா?
மருத்துவர்:மணம் செய்து கொள்!
ஒரு:அது உதவுமா?
மரு:இல்லை.நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற எண்ணமே பின் வராது!
.........................................
திருமணத்துக்கு முன் மணமக்கள் ஏன் கைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள்?
அதுஒரு நடைமுறைதான்;சண்டைக்கு முன் இரு குத்துச் சண்டை வீர்ர்கள் கைகுலுக்குவதைப் போல!
………………………….

ஒரு பெண் நீங்கள் அழுது கொண்டே இவ்வுலகில் வரக் காரணமாகிறாள்.இன்னோர் பெண்ணோ நீங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து அழக் காரணமாகிறாள்!
……………………………
காதல் திருமணம் சிறந்ததா ஏற்பாடு செய்த திருமணம் சிறந்ததா என விவாதிக்கிறார்கள். தற்கொலை சிறந்ததா,கொலை சிறந்ததா என்பது போல் இருக்கிறது!
………………………………………………..
(இவையனைத்தும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டவையே! இவற்றில் எனக்கு உடன் பாடில்லை என்பதை எல்லாப் பெண் பதிவர் சகோதரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்! )

:):):):):):):):):):):):):):)

சனி, மார்ச் 16, 2013

சிரித்து வாழ வேண்டும்!



மகிழ்ச்சி என்பது பட்டாம்பூச்சி மாதிரி
துரத்தத் துரத்த விலகிப் பறக்கும்
கவனத்தை வேறு புறம் திருப்பினால்
தானே வந்து தோளில் அமரும்!

மகிழ்ந்திருக்க இடம் இதுதான்
மகிழ்ந்திருக்க நேரம் இப்போதுதான்!

இயலும்போதெல்லாம் சிரியுங்கள்
மாற்ற முடியாததை மாற்ற எண்ணி
மகிழ்ச்சியைத் தொலைக்காதீர்.

வாழும் நாள் சிறிது
வாழும் வரை மகிழ்ச்சியாய் இருங்கள்!

மகிழ்ச்சி ஒரு தொற்று நோய்;
உங்கள் மகிழ்ச்சி
சுற்றியுள்ளோரையும் மகிழ்ச்சியாக்கும்!

வயதானதால் நீங்கள் சிரிக்க மறக்கவில்லை;
சிரிக்க மறந்ததால் வயதானவராகி விட்டீர்கள்!

மற்றவர்க்காகத் துடிக்கும் இதயமே
மகிழ்ச்சி நிறைந்த இதயம்!

ஒரு நாள் எல்லாமே தெளிவாகும்
இன்று குழப்பங்களைக் கண்டு சிரியுங்கள்
கண்ணீரின் ஊடாகவும் சிரியுங்கள்
நினைவு கொள்ளுங்கள்
காரணம் இன்றிக் காரியம் நடப்பதில்லை!