தொடரும் தோழர்கள்

புதன், மே 04, 2011

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்!

எங்கள் காலனியில்,அண்டை வீட்டில் குடியிருக்கும் நண்பர்;பெயர் முக்கியமென்றால் அவரை ராமன் என்றழைப்போம்.கணவன்,மனைவி இருவரும் வேலை பார்க்கிறார்கள். இருவருக்கும் சேர்ந்து மாத வருமானம்50000/60000 இருக்கலாம். அவர்களுக்கு இரண்டு பெண்கள்.பெரியவள் பி.காம் தேர்வு எழுதியிருக்கிறாள்;சின்னவள் +2 தேர்வு எழுதியிருக்கிறாள்.

இரண்டு நாட்களுக்கு முன் ராமன் என்னைக் காண வந்தார்.என்னிடம் சொன்னார் ”சார்,சந்திராவுக்கு(பெரியவள்) கோயம்புத்தூரில் எம்.பி.ஏ.யில் இடம்வாங்கி விட்டேன். மொத்தம் 8.5 லட்சம் ஃபீஸ்.இன்று 6 லட்சத்துக்கு டிராஃப்ட் எடுத்துக் கொண்டு கோவை போகிறோம்.நாளை பணத்தைச் செலுத்தி விட்டு,மறு நாள் காலை திரும்பி விடுவோம். உங்களைத் தவிர வேறு யாரிடமும் நான் சொல்லவில்லை .”

அவர் சென்ற பின் அம்மா கேட்டார்கள்”ராமன் என்ன சொன்னார்?”

ராமன் சொன்ன விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன்.அவர்கள் சிறிது நேரம் ஒன்று பேசவில்லை.

பின் சொன்னார்கள்”இப்படி 8.5 லட்சம் செலவழித்து வெளியூர் அனுப்பிப் படிக்க வைக்க வேண்டுமா?நாலு வருஷம் முன்னால்தான்,கஷ்டப்பட்டு இந்த ஃப்ளாட்டை வாங்கி யிருக்கிறார்கள்.இன்னும் கடனே கட்டி முடியவில்லை என்று நினைக்கிறேன்.இன்னும் நாலைந்து வருஷம் போனால் சந்திராவுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும்.அவளை விடப் படித்த மாப்பிள்ளையாக இல்லாவிட்டாலும் அவளுக்கு இணையாகப் படித்த மாப்பிள்ளை யாவது பார்க்க வேண்டும்.அவ்வளவு படித்து நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளை என்றால்,வரதட்சிணை இல்லாவிட்டாலும் கூடக் கல்யாணச்செலவே 6/7 லட்சம் ஆகி விடுமே. இப்போதெல்லாம் நல்ல மண்டபம் வேண்டுமென்றால் அதற்கே 2 லட்சம் ஆகி விடும் போலிருக்கிறதே?அப்போது பணத்துக்கு எங்கே போவது?”

நான் சொன்னேன்.”நன்றாகப் படிக்கிற பெண்.அவள் படிப்பை பி.காம் உடன் நிறுத்தச் சொல்கிறீர்களா?”

”இல்லை.சென்னையிலேயே எம்.காம் படிக்கட்டும்.கூடவே வேறு ஏதாவது படிக்கட்டும்
அதிக பட்சம் 1 அல்லது ஒன்றரை லட்சம் ஆகலாமா? மீதிப் பணம் அவள் கல்யாணத் துக்குப் பயன் படுமே? மாப்பிள்ளை தேடுவதும் அவ்வளவு சிரமமாக இருக்காது. அதோடு இன்னொரு பெண் வேறு இருக்கிறாளே?”அம்மா சொன்னார்கள்.

’’அப்படியென்றால் பெண்கள் இது போன்ற பெரிய படிப்புப் படிக்கக் கூடாது என்கிறீர்களா?”நான்


”நான் அப்படிச் சொல்லவில்லை.அவர்கள் நம்மைப் போல் மிடில் க்ளாஸ்.இருவரும் கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் தேடிச் சேமிக்கிறார்கள்.மிகவும் சிக்கனமாக இருக்கிறார்கள். சேமிப்பெல்லாம் இப்படிப் போய்விட்டால் நாளைக்குக் கல்யாணத்துக்கு என்ன செய்வார்கள்?அவர்களே வசதி அதிகமானவர்களாக இருந்தால் கவலையில்லை அந்தப் பெண்ணுக்கு ஸ்காலர்ஷிப்பும் ஏதும் கிடைக்காது.இதையெல்லாம் உத்தேசித்து தான் சொல்கிறேன்.”அம்மா

“ அவள் படித்து வேலை பார்த்துப் பணம் சேர்க்க மாட்டாளா?”நான்.

“நடக்கலாம்.நடக்காமலும் போகலாம்.அதை நம்பி பெற்றோர் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.”

ஒரு தாயின் அனுபவ பூர்வமான வார்த்தைகள்.

என் அம்மா பிற்போக்கானவர்களல்ல.முற்போக்கான சிந்தனைகள் உள்ளவர்கள் தான்.பெண்கள் படிக்க வேண்டாம் என்று நினைப்பவர் அல்ல.
பலர் அவர்களை ’மாடர்ன் மாமி’ என்று அழைப்பார்கள் அவர்களின் இந்த வார்த்தைகளில்,பொருளாதாரமும் கலந்து இருக்கிறது.வாழ்க்கையின் யதார்த்தம் கலந்திருக்கிறது.

32 ஆவது வயதில் தன் கணவனை இழந்து,ஐந்து குழந்தைகளுடன் (பெரியவன் 16 வயது,கடைசி பையன் 5 வயது,நடுவில் 3 பெண்கள்)நிர்க்கதியாய் நின்ற நிலையிலும் மன உறுதியுடன் அவர்களை வளர்த்து ஆளாக்கித் தன் கடமைகளைச் செவ்வனே முடித்த தாய்க்குத்தானே புரியும் வாழ்க்கையின் யதார்த்தம்.

என்னால் அவர்களுடன் உடன் படவும் முடியவில்லை,அவர்கள் கருத்தை ஒதுக்கித்தள்ளவும் இயலவில்லை.

நான் குழப்பத்தில் இருக்கிறேன்!

32 கருத்துகள்:

  1. என்ன செய்வது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை!!!!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா4 மே, 2011 அன்று AM 8:13

    எனக்குத்தெரிந்த பெண்மணி ஒருவர் 35 வயது தாண்டிதான் திருமணம் செய்து கொண்டார். காரணம், பெண் பார்க்க வந்த ஆண்களை விட அதிகப்படிப்பு மற்றும் மிகப்பெரிய சம்பளம் இவருடையது. தங்களை மதிக்கும் பெண்ணாக இருக்க மாட்டார் என்றெண்ணியே பலர் பயந்தனர்.

    பதிலளிநீக்கு
  3. என்னால் அவர்களுடன் உடன் படவும் முடியவில்லை,அவர்கள் கருத்தை ஒதுக்கித்தள்ளவும் இயலவில்லை.----
    இதை படிக்கும் எனக்கும் இதே மனநிலைதான்.. ரைட்டு..

    பதிலளிநீக்கு
  4. What your mom said is 100% correct. Nowadays people are spending money for education for too much and in return they won't get it back (in most cases). One of my friend spent 8 lacs for his BPT. He finished college 12 years back. Till date, his earning is 4000/ pm.

    பதிலளிநீக்கு
  5. அம்மா சொல்வது யதார்த்தமான உண்மை!

    பதிலளிநீக்கு
  6. அம்மா சொன்னது சரியாத்தான் இருக்கும் - அனுபவசாலி இல்லையா. எனிலும் துளசி டீச்சர் சொன்னது போல, அவர்கள் கண்ணோட்டத்தில் சரியெனப் பட்டதைச் செய்திருக்கிறார்கள். நல்லதே நடக்கும் என நம்புவோமே...

    பதிலளிநீக்கு
  7. துளசி கோபால் கூறியது...

    //என்ன செய்வது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை!!!!//
    அவரவர் பார்வை அவரவர்க்கு நியாயம்தான்!
    நன்றி துளசி கோபால் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. ! சிவகுமார் ! கூறியது...

    // எனக்குத்தெரிந்த பெண்மணி ஒருவர் 35 வயது தாண்டிதான் திருமணம் செய்து கொண்டார். காரணம், பெண் பார்க்க வந்த ஆண்களை விட அதிகப்படிப்பு மற்றும் மிகப்பெரிய சம்பளம் இவருடையது. தங்களை மதிக்கும் பெண்ணாக இருக்க மாட்டார் என்றெண்ணியே பலர் பயந்தனர்.//
    ஏன் இந்த நிலை?எங்கு மாற்றம் தேவை?
    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  9. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //என்னால் அவர்களுடன் உடன் படவும் முடியவில்லை,அவர்கள் கருத்தை ஒதுக்கித்தள்ளவும் இயலவில்லை.----
    இதை படிக்கும் எனக்கும் இதே மனநிலைதான்.. ரைட்டு..//
    நாம் எப்பவும் ஒரே கட்சிதான்,கருன்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா4 மே, 2011 அன்று AM 11:15

    என்ன சொல்வதெரு தெரியவில்லை. திருமணம் வரதட்சணை என்று விழுங்கும் செலவுகள் பெண்களின் முன்னேற்றதுக்கு தடையாக உள்ளதா?

    பதிலளிநீக்கு
  11. ராமுடு கூறியது...

    // What your mom said is 100% correct. Nowadays people are spending money for education for too much and in return they won't get it back (in most cases). One of my friend spent 8 lacs for his BPT. He finished college 12 years back. Till date, his earning is 4000/ pm.//
    very sad state of affairs.
    thanks for your comments ramudu!

    பதிலளிநீக்கு
  12. செங்கோவி கூறியது...

    //அம்மா சொல்வது யதார்த்தமான உண்மை!//
    துளசி டீச்சர் சொல்வது போல்”ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை!!!!”
    கருத்துக்கு நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  13. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //அம்மா சொன்னது சரியாத்தான் இருக்கும் - அனுபவசாலி இல்லையா. எனிலும் துளசி டீச்சர் சொன்னது போல, அவர்கள் கண்ணோட்டத்தில் சரியெனப் பட்டதைச் செய்திருக்கிறார்கள். நல்லதே நடக்கும் என நம்புவோமே...//
    நல்லதே நடக்கட்டும்!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  14. எல்லோருடைய குடும்பத்திலும் நடக்ககூடிய விஷயம்தான்..

    இதை அவர்களுடைய கண்னோட்டம் பொருத்தே பதிலுரைக்கமுடியும்...

    பெண்களுக்காக கல்வி வரவேற்கதக்கதுதான்... மற்றபடி நான் ஏதும் சொல்லவில்லை

    பதிலளிநீக்கு
  15. கந்தசாமி. சொன்னது…

    // என்ன சொல்வதெரு தெரியவில்லை. திருமணம் வரதட்சணை என்று விழுங்கும் செலவுகள் பெண்களின் முன்னேற்றதுக்கு தடையாக உள்ளதா?//
    கேள்விக்கென்ன பதில்?
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  16. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // எல்லோருடைய குடும்பத்திலும் நடக்ககூடிய விஷயம்தான்..

    இதை அவர்களுடைய கண்னோட்டம் பொருத்தே பதிலுரைக்கமுடியும்...//
    உண்மை!

    பெண்களுக்காக கல்வி வரவேற்கதக்கதுதான்... மற்றபடி நான் ஏதும் சொல்லவில்லை
    “கை கழுவியாச்சு!
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  17. 32 ஆவது வயதில் தன் கணவனை இழந்து,ஐந்து குழந்தைகளுடன் (பெரியவன் 16 வயது,கடைசி பையன் 5 வயது,நடுவில் 3 பெண்கள்)நிர்க்கதியாய் நின்ற நிலையிலும் மன உறுதியுடன் அவர்களை வளர்த்து ஆளாக்கி//

    முதலில் அம்மாவுக்கு வணக்கங்கள்.. எத்தனை போராட்டம் இருந்திருக்கும்..

    பதிலளிநீக்கு
  18. திருமணமே ஒரு ஆடம்பரம்தான்.. செலவை குறைக்கணும்..

    இரு வீட்டாரும் பகிரணும்..

    பெண்ணுக்கு என ஒரு பைசா செலவு அதிகமா இருக்க கூடாது மாப்பிள்லையை விட..

    பதிலளிநீக்கு
  19. எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

    32 ஆவது வயதில் தன் கணவனை இழந்து,ஐந்து குழந்தைகளுடன் (பெரியவன் 16 வயது,கடைசி பையன் 5 வயது,நடுவில் 3 பெண்கள்)நிர்க்கதியாய் நின்ற நிலையிலும் மன உறுதியுடன் அவர்களை வளர்த்து ஆளாக்கி//

    //முதலில் அம்மாவுக்கு வணக்கங்கள்.. எத்தனை போராட்டம் இருந்திருக்கும்..//
    போராட்டம்தான்!அந்தப் போராட் டத்தை எழுத்தில் கொணரவே “ஒரு வரலாறு’ என்ற பதிவுத் தொடர் தொடங்கினேன்.சில இடுகை களுடன் அது ஏனோ தேக்கமடைந்து விட்டது.மீண்டும் தொடர வேண்டும்; தொடர்வேன்!
    நன்றி சாந்தி!

    பதிலளிநீக்கு
  20. எண்ணங்கள் 13189034291840215795 கூறியது...

    // திருமணமே ஒரு ஆடம்பரம்தான்.. செலவை குறைக்கணும்..

    இரு வீட்டாரும் பகிரணும்..

    பெண்ணுக்கு என ஒரு பைசா செலவு அதிகமா இருக்க கூடாது மாப்பிள்லையை விட..//
    இது போல் நிறைய சிந்தனை மாற்றங்கள் வந்தால்தான்,பெண் வீட்டாருக்கான சுமை குறையும்!

    பதிலளிநீக்கு
  21. யதார்த்தமான வார்த்தைகள், அந்த தாய் சொன்னது.

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா4 மே, 2011 அன்று PM 4:46

    தாயின் அனுபவ மொழிகள் பொய்ப்பதில்லை

    பதிலளிநீக்கு
  23. தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டைப்போட்டு கடமை முடித்துவிட்டேன். உங்கள் அனுபவ பகிர்வுகள், எங்களுக்கும் வழிகாட்டுதலாய் இருந்திடும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  24. பாலா கூறியது...

    // யதார்த்தமான வார்த்தைகள், அந்த தாய் சொன்னது.//
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  25. FOOD கூறியது...

    // தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டைப்போட்டு கடமை முடித்துவிட்டேன். உங்கள் அனுபவ பகிர்வுகள், எங்களுக்கும் வழிகாட்டுதலாய் இருந்திடும்.நன்றி.//
    நன்றி சங்கரலிங்கம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  26. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //தாயின் அனுபவ மொழிகள் பொய்ப்பதில்லை//
    உண்மை!நன்றி சதீஷ்!

    பதிலளிநீக்கு
  27. டக்கால்டி கூறியது...

    //your mom's word is correct and practical Sir.//
    நன்றி டக்கால்டி!

    பதிலளிநீக்கு
  28. இந்த காலத்தில் வரதட்சிணை தராவிட்டாலும், ஒரு திருமணத்தை நடத்த பல இலட்சங்கள் தேவைப்படுகிறது.படிப்புக்கே எல்லா பணத்தையும் செலவிடும் நடுத்தர குடும்பத்தினர் திருமணம் நடத்த சிரமப்படுவது நிஜம்.

    அம்மா சொல்வது யதார்த்தத்தின் வெளிப்பாடு.

    பதிலளிநீக்கு
  29. வே.நடனசபாபதி சொன்னது…

    //இந்த காலத்தில் வரதட்சிணை தராவிட்டாலும், ஒரு திருமணத்தை நடத்த பல இலட்சங்கள் தேவைப் படுகிறது. படிப்புக்கே எல்லா பணத்தையும் செலவிடும் நடுத்தர குடும்பத்தினர் திருமணம் நடத்த சிரமப்படுவது நிஜம்.

    அம்மா சொல்வது யதார்த்தத்தின் வெளிப்பாடு.//
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  30. வளமான எதிர்காலத்தையும், ஆணில் தங்கியிராத, சொந்தக் காலில் நிற்கும் பண்பும் வேண்டும் எனில் பெண் பிள்ளைகளை அவர்கள் வழியில் பெரிய படிப்பு, படித்து முன்னேற விடுவது தவறில்லை. உங்கள் அம்மாவின் கருத்துக்கள் நியாயம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. ஒவ்வொரு பெண்ணும் ஒரு பொருளாதார மேதை என்று நம்புகிறவன் நான் . கணவன் சம்பாதிக்கும் தொகை எதுவாக இருந்தாலும் சிக்கனமாக இருந்து குடும்பத்தை நடத்தி செல்பவள் அவள் . MBA படிக்காமலே இயற்கையாகவே இத்தகைய தன்மையை பெற்றவர்கள் பெண்கள் . தங்கள் தாயின் எண்ணங்கள் அனுபவம் புகட்டிய பாடம். சிறுதும் குறை கூற முடியாது . தங்கள் நண்பரின் பொருளாதார நிலையை மனதில் கொண்டு கூறிய சொற்கள் . அதே சமயம் காலம் மாறிவிட்ட நிலையில் தங்கள் நண்பரின் செயலிலும் குறை கூற இயலவில்லை . ஆங்கிலத்தில் choosing between aTweedledee and a Tweedledum என்று கூறுவார்களே ! வாசுதேவன்

    பதிலளிநீக்கு