தொடரும் தோழர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

கொடிது,கொடிது.

சென்ற கும்பமேளாவின்போது(2000-2001) நான் அலகாபாதில் பணி புரிந்து கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகாமகம் போன்றதுதான் இக் கும்பமேளா என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.ஒரு அரசுடைமையாக்கப் பட்ட வங்கியில் முதல் மேலாளராகப் பணி புரிந்து வந்ததால் அரசு அதிகாரிகளின் துணையுடன் முக்கிய நாட்களில் திரிவேணி சங்கமத்தில் எளிதாக நீராட முடிந்தது.

இக் கும்பமேளா பற்றி எண்ணும்போதெல்லாம்,அதனுடன் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் சேர்ந்தே நினைவுக்கு வரும். முதலில் பிரமிக்க வைக்கும் அந்த மக்களின் நம்பிக்கை.மாக மாதம் என்றழைக்கப் படும் அந்த மாதம் முழுவதும் பல ஊர்களிலிருந்து கையில் மிகக் குறைந்த சமையல் சாதனங்கள், துணிமணிகளுடன் வந்து,கிடைத்த இடத்திலே தங்கி (பல நேரங்களில் வானமே கூரை)அந்த நடுக்கும் குளிரையும் பொருட் படுத்தாமல் தினமும் நதியில் நீராடி கடவுளை நினைத்தே வாழும் அம்மக்களின் நம்பிக்கை.(இரண்டு ஸ்வெட்டர் அணிந்தும் பகல் நேரத்தில் நடுங்கிக் கொண்டே வங்கியில் பணி புரிந்து வந்தவன் நான்.)

அடுத்தபடியாக மூன்று கோடி மக்கள் வந்திருந்தும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் திறமையாக அனைத்தையும் கையாண்ட நிர்வாகம்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும் தவறாமல் எங்கிருந்தெல்லாமோ வரும் சாதுக்கள்கூட்டம்.

இவை அனைத்தையும் பின் தள்ளி இன்று நினைத்தாலும் என் மனத்தைப் பிசையும், கண்களில் கண்ணீர் வரவழைக்கும்,செய்தி-அந்தத் திருவிழாவுக்குத் தங்கள் வயதான தாய்/தந்தையுடன் வந்த சிலர் அந்தக் கூட்டத்தில் அவர்களைத் தனியே தவிக்க விட்டுச் சென்று விட்ட கொடுமை!எழுத்தறிவற்ற பாமரர்களான அவர்கள் தங்களைப் பற்றி,தங்கள் ஊர் பற்றி,உறவினர் பற்றி எந்தத்தகவலும் கொடுக்க இயலாதவர்களாய் , நடுங்கிக் கொண்டு, அறியாத ஒரு ஊரில் நிர்க்கதியாக நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் உங்கள் நெஞ்சில் ரத்தக்கண்ணீர் வரவில்லையா?ஏன் இந்த நிலை?இதற்குக் காரணம் வறுமையா? பெற்றோரைக் கூட அநாதையாக விடும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானதா அவர்கள் வறுமை?என்ன செய்யப் போகிறோம் நாம்?

“ஜகத்தினை அழிக்கலாமா?!”

(பழைய வீட்டிலிருந்து)

3 கருத்துகள்:

  1. @ஜுர்கேன் க்ருகேர்,

    தங்கள் கருத்து முற்றிலும் சரி. நினைக்கவே நெஞ்சம் பதறும் இத்தகைய செயலைசெய்ய அவர்களால் எவ்வாறு இயன்றது?

    பதிலளிநீக்கு