தமிழ் இந்துவில் என் வலைப்பூ பற்றிய அறிமுகத்தில் ’இவர் பதிவர்களில் கபாலி ’என்று குறிப்பிட்டிருந்தனர்.
அது கபாலி பற்றிய என் நினைவுகளைக் கிளறி விட்டது.
அந்தக் காலத்தில் நான் அறிந்த கபாலிகள்……..
மந்தைவெளியில்
இருந்த ஒரு திரையரங்கம் கபாலி.மயிலை காமதேனுவில் கூட நான் படம் பார்த்திருக்கிறேன்;ஆனால்
கபாலி நான் சென்று படமே பார்த்ததில்லை என்ற பெருமை பெற்றது.
இன்று
காமதேனுவும் இல்லை;கபாலியும் இல்லை
அடுத்த
கபாலி,அப்போதே மயிலையில் பிரபலமாக இருந்த அரசியல் பிரமுகர்; டிகே கபாலி.திமுக சார்பில் 1977 இலும் அதிமுக
சார்பில் 1980 இலும் மயிலைத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர்.
ஆனால்
அன்று இன்றும் என்றும் என் உள்ளத்தில் உறையும் நண்பர் வேறோர் மயிலை கபாலி
அவர்
பற்றி நான் முன்பு எழுதிய ஒரு பதிவு இதோ …
//கபாலியை நான் முதல் முதல் சந்தித்தது 1964 ஆம்
ஆண்டில்தான்.
முதல் பார்வையிலேயே அவர் என்னை அவர்பால்
ஈர்த்து விட்டார்.
அவர் மனைவி கற்பகமும் அவருக்கேறவர்தான்.
சாந்தமான புன்னகை தவழும் முகம்;அருள் பொழியும் கண்கள்.
வாழ்வில் முதல் முறையாக வீட்டை விட்டுத்
தனியாக விடுதியில் தங்கிப் படிக்கும் எனக்கு உற்ற துணைவர்களாக,நல்ல நண்பர்களாக அமைந்தனர் அந்தத் தம்பதி.
என் இரண்டாண்டு கால விடுதி வாழ்க்கையில்
வாரம் ஒரு முறையாவது அவர்களைச் சந்திக்காமல் இருந்ததில்லை.
முந்தைய சந்திப்புக்குப் பின் இடைப்பட்ட
காலத்தில் எனக்கு நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றையும் அவர்களுடன் பகிர்ந்து
கொள்வேன்.
அவர்கள் மாறாத புன்னகையுடன் கேட்டுக்
கொண்டிருப்பர்.
என் பிரச்சினைகளை அவர்கள் முன்
கொட்டுவேன்.
அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே
மனம் அமைதி பெறும்;பிரச்சினை
தீர்க்க வழி கிடைக்கும்.
அவர்கள் வாய்திறந்து பேச வேண்டியதே
இல்லை.
அவர்கள் முன் பல இனிய நிகழ்வுகள்;அந்நிகழ்வுகளின் அழிக்க முடியாத நினைவுகள்
இன்று வரை.
சில நேரங்களில் என மன அலைபேசியில் கபாலி
அழைப்பார். விரைவேன்; பார்ப்பேன்
;மகிழ்வேன்.
அதைத் தொடர்ந்து ஏதாகிலும் பிரச்சினை
வரும்;ஆனால் வந்த வேகத்தில்
மறையும்!
காலவேகத்தில் முதுமையின் கோடுகள் என்
உடலில் விழுந்து விட்டன;
ஆனால் கபாலியும் கற்பகமும் இன்னும் அதே
இளமையுடன் இருக்கின்றனர்; என்றும்
இருப்பர்!
சென்னையிலேயே இருந்தும் கூட அடிக்கடி
அவர்களைச் சென்று பார்க்க முடிவதில்லை,
ஆனால் என் மனத்தில் அவர்கள்
இருக்கிறார்கள்,என்னை
வழி நடத்துகி றார்கள்.
நண்பனாய்,வழிகாட்டியாய்,நல்லாசிரியனாய்…அனைத்துக்கும் மேல் என் தெய்வமாய் இருக்கிறார்கள்.
கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்வரா போற்றி!//
கபாலீஸ்வரரைப் போற்றிப் பாபனாசம் சிவன்
பாடிய மோகன ராகக் கீர்த்தனை ”கபாலி” எனக்கு மிகவும் பிடிக்கும்
தற்போது
லேடஸ்ட் கபாலிதான் எல்லார் எதிர்பார்ப்புமாக இருக்கிறது. சூப்பர்ஸ்டாரின் கபாலி
படம்தான் அது