சிங்காரச் சென்னை தன் பழைய
அடையாளங்களில் பலவற்றை இழந்து நிற்கிறது.அப்படி
மறைந்துபோன பல அழகிய,இடங்களில் ஒன்று
அந்தக்காலச் சிறிய சாந்தோம் கடற்கரை.
என் நண்பர்களுடன்,கல்லூரி
விடுதியிலிருந்து கச்சேரி சாலை வழி நடந்தே சென்று,
சாந்தோமில் அமர்ந்து,அரட்டையடித்து,சுற்றும்
முற்றும் பார்த்து,கிளிஞ்சல் பொறுக்கி,
திரும்ப எறிந்து ,ரெகுலர்
காதலர்களைப் பார்த்துக் கமெண்ட் அடித்து மகிழ்ந்த காலம்
ஒன்றிருந்தது.அன்று
பார்த்த ஒரு காதலன் இன்று என்ன எழுதுவான்?அதுதான்
இக்கவிதை!...........
”எங்கே போனாய் என் இனிய சாந்தோம்
கடற்கரையே?
சிங்கார மாலைகளில் மங்கையவள் அருகிருக்க
பொங்கும் கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஆசி தர
எங்களைச் சுற்றி என்னென்ன நடந்தாலும்
கொஞ்சமும் கவலையின்றி விழியொடு விழி பார்த்து
நெஞ்சங்கள் கலந்து மகிழ்ந்ததற்கு நீ சாட்சி.
அதற்கு மட்டுமல்ல,அன்றொரு நாள்
அழுதபடி வந்து அவள் பிரிகின்ற சேதி சொல்லி
ஆறாத சோகத்தில் என்னை ஆழ்த்தியதற்கும் நீ சாட்சி!
ஆனால் இன்றோ!
அழகான கடற்கரை நீ இல்லாமல் போனதற்கு
பழைய நினைவுகள் சுமக்கும் நானும் ஒரு சாட்சி!”
..................................................................................