தொடரும் தோழர்கள்

அமானுஷ்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமானுஷ்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 11, 2016

புளிய மரத்துப் பேய்!



மாலைக்காட்சி படம் முடியும்போது இரவு மணி 9.30 ஆகி விட்டது.

“வாங்க .டிபன் சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்றனர் நண்பர்கள்
பக்கத்திலேயே ஒட்டல்.

தோசை.சப்பாத்தி ஆர்டர் செய்தோம்

சாப்பிடும்போது பேச்சு படத்தைப் பற்றி எழுந்தது.

”எட்டு கிலோமீட்டர் சைக்கிள்ள வந்து பாக்கறத்துக்கு ஒர்த்  இல்ல படம்” என்றேன்.(புரிஞ்சது அவ்வளவுதான்!)

அவ்வளவு பயமா இல்லையே என்றான் மகாராசன்

”இப்ப அப்படித்தான் இருக்கும்.இருட்டில தனியா போகும்போது பயம் தன்னால வரும்.அந்தப் பாட்டு காதில ஒலிச்சிக்கிட்டே இருக்கும்”இது சுப்பிரமணி

“எதுக்கும் கொஞ்சம் சூதானமாப் போங்க.வழில இந்த ரெட்டைப் புளிய மரம் வருதில்ல.அங்கன பேய் இருக்குன்னு பேசிக்கறாங்க.”என்றான் தலைக்கான்.

நான் சிரித்தேன்.”சும்மா பயமுறுத்தாதீங்க.நான் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்”

புறப்பட்டேன்

கம்பத்திலிருந்து உத்தமபாளையம் 8 கிலோமீட்டர்.

சைக்கிளில் வந்திருந்தேன். 

சைக்கிளில் ஏறி உற்சாகமாக மிதிக்க ஆரம்பித்தேன்.

ஊரெல்லை தாண்டி மக்கள் நடமாட்டமில்லாத சாலை ஆரம்பமாயிற்று.

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.இருட்டில் ரேடியம் 10.30 காட்டியது.

சாலை நீ...ண்டு கிடந்தது.

விசிலடித்தபடி வேகமாக மிதித்தேன்

இருட்டு என்னைக் கவ்வியது

பலமான காற்று.ஆனால் மழை வரும் அறிகுறிகள் இல்லை

காற்றில் சாலையோரப் புளியமரங்கள் தலை விரித்தாடின.

பாதி தூரம் கடந்தாயிற்று.

இங்குதானே அந்த ரெட்டைப் புளிய மரம் இருக்கும்.

நிஜமாகவே பேய் இருக்குமோ?

அடி நெஞ்சில் லேசான பயம்;விசில் பலமான பாட்டாக மாறிற்று.என்ன கத்தினாலும் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லையே!

அப்போதுதான் என் பாட்டையும் மீறி என் காதில் அந்தப் பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது....சினிமாவில் வந்த அதே பாட்டு!

அதோ அந்த ரெட்டைப் புளியமாரம்.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே மரத்தின் கீழ் ஏதோ வெள்ளையாக ஓர் உருவம் தோன்றியது.

பயத்தில் உடல் சில்லிடத் தொடங்கியது.

அந்த மரத்தைத் தாண்டிப் போக வேண்டுமே,எப்படி?

என் வாய் கந்த சஷ்டிக் கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது

கண்களை மூடிக் கொண்டு வண்டியை முழு வேகத்தில் மிதித்தேன்.

மரத்தைத் தாண்டியிருப்பேன் என்ற உணர்வு ஏற்பட்டது கண்களைத் திறந்தேன்.
தாண்டி விட்டிருந்தேன்

திரும்பிப் பார்க்கலாமா?

வேண்டாம்;பேயைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்களே

வேகமாக மிதித்தேன்.
வீட்டை அடையும் வரை அதே வேகம்!

வந்து  படுக்கையில் விழுந்தேன்.

இரண்டு நாட்கள் கல்லூரி செல்லவில்லை.

காய்ச்சல்!

என் கேள்வி ...நிஜமாகவே பேய் இருந்து அதைப் பார்த்தேனா,அல்லது பயத்தினால் ஏற்பட்ட பிரமையா?

தெரியவில்லை

அந்தப்படம்.....”பீஸ் ஸால் பாத்”

காதில் ஒலித்த பாடல்..”கஹிம் தீப் ஜலே கஹிம் தில்”

இதோ காணொளி












செவ்வாய், மே 26, 2015

பெண்ணா.பேயா?



தூக்கம் வரவில்லை.

கடிகாரத்தைப் பார்க்கிறேன்.

மணி 3.

சன்னல் வழியாக வெளியே பார்க்கிறேன்.

காலனியைச் சுற்றிய பாதையில் இரவு முழுதும் விளக்குகள் எரியும்.

இன்று என் வீட்டின் பின் இருக்கும் விளக்கு எரியவில்லை.

ஆனால் லேசான நிலவொளி இருக்கிறது.

கதவைத் திறந்து வெளியே வருகிறேன்.

முன்பெல்லாம் வேப்ப மரம்,தென்னை மரம் எனப் பல மரங்கள் இருக்கும்.

இப்போது  நாகலிங்கம் தவிர எதுவும் இல்லை.

கான்க்ரீட் தளம்தான்.

சரி,கொஞ்ச நேரம் நடக்கலாம் என எண்ணி நடக்கத் தொடங்குகிறேன்.

சிறிது தூரம் சென்றதும் பாதை இது புறமாகத் திரும்பும்.அது வரை நடந்து விட்டேன்.

மறு கோடியில் யாரோ நிற்பது போல் தெரிகிறது.

என்னை மாதிரியே தூக்கம் வராத எவரோ என எண்ணுகிறேன்.

மேலே செல்லாமல் அங்கேயே நின்று யார் என உற்றுப் பார்க்கிறேன்.

ஒரு பெண்!

திடீரென்று நாடகத்தில் அடிப்பது போல் அவள் மீது வெளிச்சம் அடிக்கிறது.

வெண்மை நிற உடை.

விரித்துப் போட்ட கூந்தல். 

கைகளில் எதையோ வைத்து உருட்டிக் கொண்டிருக்கிறாள்.

அந்த தூரத்திலும் எனக்குத் தெரிகிறது யாரோ புதியவள்.

எங்கள் காலனிப் பெண்ணல்ல.

இரவுக் காவலாளி யாரையாவது அழைத்து வந்து விட்டானோ?

இதெல்லாம் வேறு நடக்கிறதா?

அருகில் சென்று பார்க்கலாமா?

ஓரடி முன் எடுத்து வைக்கிறேன்.

ஏதோ தடுக்கிறது 

அப்போது அவளே முன்னேறி வருவதைப் பார்க்கிறேன்.

திடீரென்று  ஒரு பயம் என்னை ஆட்கொள்கிறது.

நாலடி பின் நகர்ந்து நாகலிங்க மரத்தடியை அடைகிறேன்.

காலையில் பூக்கத் தயாராக இருக்கும் ஒரு பூவைப்ப் பறிக்கிறேன்.

அவள் வந்து கொண்டிருக்கிறாள்…கைகளை விரித்த படி.ஒரு அணைப்புக்குத் தயராக.

அந்தப் பூவை அவள் மீது தூக்கி எறிகிறேன். 

பூ அவள் மீது விழுந்ததும் ஒரு விகாரமான ஓலி எழும்புகிறது அவளிடம்.

அப்படியே பற்றி எரிகிறாள்.அவ்வளவுதான் அங்கு எதுவும் மிச்சமில்லை.

ஒரு துர்நாற்றம் மட்டும் பரவுகிறது.

“ஓம் நமச்சிவாய” சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

வேர்வை வெள்ளம். 

எங்கோ ஆழ்வது போன்ற உணர்வு.

கண் விழிக்கிறேன்.

உடலெல்லாம் வேர்வை.

கனவுதானா?

மணியைப் பார்க்கிறேன் 

3 மணி.

சன்னல் வழியே வெளியே பார்க்கிறேன்.

மெல்லிய நிலவொளி தவிர வேறு வெளிச்சம் இல்லை.

என்ன பைத்தியக்காரக் கனவு!

வெளியே போகிறேன்

நடக்கத் தொடங்குகிறேன்

சிறிது தூரம் சென்றதும் பாதை இது புறமாகத் திரும்பும்.

அது வரை நடந்து விட்டேன்.

மறு கோடியில் யாரோ நிற்பது போல் தெரிகிறது!
……………............
……………...............
.....................! !






வெள்ளி, ஜனவரி 02, 2015

பிசாசு



இணையத்தில் பரவலாகப் பிசாசு பற்றிப் பேசப்பட்டு வருகிறது.
பிசாசு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம்,அபிப்பிராயம் இருக்கிறது
பிசாசு பார்த்தேன் என்று சொல்வதே ஒரு சுவாரஸ்யம்தான்.
பார்த்ததை விட அது பற்றிப் பகிர்வது இன்னும் சுவாரஸ்யம்!