தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஏப்ரல் 21, 2015

பெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா?



ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களின்  சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் .நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே

வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விடை சொன்னால்தான் திருமணம் எனச் சொல்லி யிருந்தாள்.கேள்விஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்”.

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை.கடைசியாக  சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்அவள் சொன்னாள்விடை சொல்கிறேன்.  அதனால்அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்”

 அவன் சொன்னான் “என்ன கேட்டாலும் தருகிறேன்”

அவள் சொன்னாள்”தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் மற்ற மன்னனிடம் சொல்லி அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது;இவனுக்கு நாடும் கிடைத்தது.

கிழவியிடம் வந்தான்  வேண்டியதைக்கேள் என்றான்.

அவள் கேட்டாள்”நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்

அவள் சொன்னாள்.”நாம் தனியாக இருக்கும் போது கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;தனியே இருக்கும்போது அழகிய பெண்ணாக இருந்தால் வெளியே செல்கையில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன்.எது உன் விருப்பம்?”

அவன் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீதான் எடுக்க வேண்டும்”

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!”

ஆம்!

பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல் படுங்கள்!

(சுகி சிவம் சொல்லக்கேட்டது)

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

வா மன்மத,வா!





அழகாய் ஆடி அசைந்து வருகிறது ரதம்
பட பட வெனப் பறக்கிறது மீன் கொடி
அழகான வாலிபன் அவன் ரதத்தினில்
கையிலோர் வில்லுமுண்டு,கரும்பாலே
வரிசையாய் வண்டுகளே நாணாக
அம்புறாத்துணியினில் ஐந்து பாணங்கள்
அத்தனையும் மலர்க்கணைகள்
தாமரை,அசோகம்,மா,முல்லை,நீலோத்பலமென
வந்து விட்டான் அவன்,இது அவன் ஆண்டு
இளைஞர்களே,இளைஞிகளே,தயாராயிருங்கள்
பாணங்கள் உங்கள் நெஞ்சைத்துளைக்கும்
ஏனெனில் இது அவன் ஆண்டு
காதலில் நீர் விழுவது திண்ணம்
விழத்தான் முடியும்,வீழ்த்துபவன் அவன்
எழ முடியுமா மீண்டும்,இறைவனுக்கே முடியவில்லை!
மன்மத வருக!மகிழ்ச்சியைத் தருக!!

அனைவருக்கும் இனிய மன்மத ஆண்டு வாழ்த்துகள்.

காமன் கணையின் தாக்கம் பற்றிய ஒரு சித்தர் பாடல் உங்களுக்காக---

மாமன் மகளோ மச்சினியோ நானறியேன்,
காமன் கணையெனக்கு, கனலாக வேகுதடி,
மாமன் மகளாகி மச்சினியும், நீயானால்
காமன் கணை மூன்றும், கண் விழிக்க வேகாவோ.

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

தூய்மை வெள்ளி



தூய்மை பாரதம்.

இதுவே இன்றைய மந்திரம்.

சுத்தம் சோறு போடும் என்பார்கள்.

சுத்தமாக இருக்கும் இடத்தில்தான் மகாலட்சுமி இருப்பாள்.

லட்சுமியே  செல்வம் தருபவள்

அவள்தான் வெள்ளிக்கிழமையின் தேவதை..

வெள்ளியன்று வாசலில் செம்மண்ணிட்டுக் கோலம் போடும் வழக்கம் உள்ளது.

பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்துப் பொலிவுடன் காட்சி தருவர்,

சுத்தம் எவ்வளவு தேவை என்பதைச் சொல்லும் ஒரு குட்ட்.....…டிக்கதை.

ஒரு புது மணத் தம்பதி புதிதாக ஒரு வீட்டுக்குக் குடி வந்தனர்.

காலை எழுந்து சன்னல் கண்ணாடி வழியே பார்த்த மனைவி கணவரை அழைத்துச் சொன்னாள்”அதோ பாருங்க!அடுத்தவீட்டுக்காரிக்குத் துவைக்கவே தெரியாது போல. காயப்போடும் துணியெல்லாம் அழுக்காவே இருக்கு.யாராவது அவளுக்குச் சொன்னால் பரவாயில்லை”

கணவன் ஒன்றும் சொல்லவில்லை.

இது சில நாட்கள் தொடர்ந்தது.

பின் ஒரு நாள் காலை மனைவி ஆச்சரியத்துடன் சொன்னாள்”இன்னிக்குத் துணியெல்லாம் பளிச்சுன்னு இருக்கு.யாராவது சொல்லியிருப்பாங்க போல”

கணவன் அமைதியாகச் சொன்னான்
.................
“இன்று காலை சீக்கிரமே நான் நம் வீட்டுச் சன்னல் கண்ணாடிகளையெல்லாம் துடைத்தேன்”

இப்படித்தான் இருக்கிறோம் நாம்.

மற்றவர்களைக் குற்றம் சொல்லும் முன் நமது பார்வையின், நமது எண்ணத்தின் தூய்மையை நாம் சோதித்துக் கொள்ள வேண்டும்.

 இதுவே இன்றைய வெள்ளிச் சிந்தனை! 

வியாழன், ஏப்ரல் 09, 2015

ஓ ‘அதற்கு ஒரு பக்குவம் தேவை’



1961-1964.

நான் பட்டப்படிப்பில் இருந்த காலம் .

எங்கள் தமிழ் விரிவுரையாளர்இவரல்லரோ எழுத்தாளர்என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் பணித்தார்.

நான் ஒரு எழுத்தாளரைப் பற்றி ,அவரது சிறுகதைகள் பற்றியெல்லாம் எழுதி அக் கட்டுரையை  !அதற்கு ஒரு பக்குவம் தேவைஎன்று முடித்திருந்தேன்.

அப்போது விகடனில் ஒவ்வொரு வாரமும் முத்திரைக் கதை ஒன்று பிரசுரமாகி வந்தது. அப்படி வந்த முத்திரைக்கதை ஒன்றின் கடைசி வரியே நான் எழுதியிருந்தது.

அக்கதையின் பெயர்யுகசந்தி

புராதன சிந்தனைகளைப் புறந்தள்ளி.ஒரு புதிய பாதையைக் காட்டும் ஒரு பாட்டியின் கதை.

அந்தக்கால கட்டத்தில் அப்படிப் புரட்சிகரமாக எவரும் சிந்தித்திருக்க முடியாது

கௌரிப்பாட்டியின் மூலமாக அவர் சிந்தித்தார்.
காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்” இதைத்தான் கௌரிப்பாட்டி சொல்கிறாள்.சொல்வது மட்டுமில்லை .செய்கிறாள்

கதை இப்படி முடியும்.
“வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால் ?......
' அதற்கு ஒரு பக்குவம் தேவை ”

பல முத்திரைக்கதைகள் அவர் எழுதினார்.நான் அவர் எழுத்தில் பைத்தியமானேன்.

அவரது “அக்னிப்பிரவேசம்” பெரிய சர்ச்சையைக் கிளப்பிய கதை

பலரது கேள்விகளுக்குப் பதிலே போல்தான் பிறந்தது “சில நேரங்களில் சில மனிதர்கள்”
கம்யூனிஸ்டாக இருந்தவர் காங்கிரஸ்காராக மாறி பீரங்கிப் பேச்சாளர் என்றழைக்கப் பட்ட காலத்தில்,ஐந்து மைல் சைக்கிளில் சென்று அவர் பேச்சைக் கேட்டேன் (உத்தமபாளயம் டு கம்பம்)  

திரைத் துறையிலும் தன் முத்திரை பதித்தவர்.

அவர் இயக்கிய “உன்னைப்போல் ஒருவன்” தேசிய விருது பெற்றது

ஜெயகாந்தன் என்ற எழுத்து இமயத்தின் மறைவு,தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்பாகும்

அவரது ஆன்மா சாந்தியடைப் பிரார்த்திக்கிறேன்.

*************************************************************
அந்தக்கால கட்டத்தில் நான் வசித்த ஊர் உத்தமபாளையம்

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்.

எந்த விழாவாக இருந்தாலும் தவறாமல் என் காதுகளில் விழுந்த ஒரு பாடல் ”இறைவனிடம் கையேந்துங்கள்,அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”

அந்த வெண்கலக்குரல் என்னை வெகுவாக கவர்ந்தது.

நான் அப்பாடலின் ரசிகனானேன்.

அக்குரல் இன்று ஓய்ந்து விட்டது

நாகூர் ஹனீபாவின் மறைவும் ஒரு பேரிழப்பே.

அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்