தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 28, 2013

பேய் வீடு!

புரோக்கர் காட்டிய அந்த வீடு எனக்குப் பிடித்திருந்தது.

சிறிய வராண்டா,வரவேற்பறை,ஒரு படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை என்று கச்சிதமான வீடு.

பத்து நாள் தேடலுக்குப் பின் இப்போதுதான் வீடு கிடைத்திருக்கிறது.

அலுவலக நண்பர்கள் கூடக் கேட்டார்கள், தனி ஆளுக்கு ஒரு வீடு எதற்காக, லாட்ஜில் ஒரு அறை போதுமே என்று.

ஆனால் எனக்கு லாட்ஜ் வாழ்க்கையும்,ஓட்டல் சாப்பாடும் பிடிப்பதில்லை.

தனியாக நிம்மதியாய் நானே சமைத்துச் சாப்பிடுவதே என் விருப்பம் .

வீடு முழுவதும் சுற்றிப்பார்த்தேன்.படுக்கையறை நிலைப்படியின் மேல் ஒரு தகடு அடிக்கப் பட்டிருந்தது.வீட்டிலிருந்து வெளியே வரும்போது பார்த்தேன்,வாசல் நிலைமேலும் ஒரு தகடு.

புரோக்கரைக் கேட்டேன்.வீட்டுச் சொந்தக்காரர் யாரோ சாமியாரின் பக்தராம்; அவர் கொடுத்த தகடை நன்மைக்காக அடித்திருக்கிறார் என்று சொன்னார்.

புரோக்கருடன் சென்று வீட்டுச் சொந்தக்காரரைப் பார்த்து முன் பணம் கொடுத்து வீட்டை முடித்தேன்.வாடகை கம்மிதான்.

அலுவலகத்தில் வீட்டைப் பற்றிச் சொன்னதும் நண்பர்கள் ”அய்யய்யோ,அந்த வீடா” என்றனர்.அந்த வீட்டில் பேய் இருக்கிறதாம்.அங்கு வசித்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்;அவள் அங்கு பேயாகச் சுற்றுகிறாளாம்” என்றனர்.

நான் சொன்னேன் ‘என்னை எந்தப் பேயும் ஒன்றும் செய்ய முடியாது,நான் ஆஞ்சநேய பக்தன்”

மறு நாள் வீட்டில் குடி புகுந்தேன்.

சாமான்களை எடுத்து வைத்துகொண்டிருந்தபோது வாசலிலிருந்து சார் என்ற குரல் கேட்டது. போய்ப் பார்த்தேன். ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

”வாங்க,யார் நீங்க?” நான்.

அவர் சொன்னார்”நான் எதிர் வீட்டில் இருக்கிறேன்.இந்த வீட்டைப் பற்றித் தெரிந்துதான் குடி வந்தீர்களா?”

“ஆமாம் .ஏதோ பேய் இருப்பதாகச் சொன்னார்கள்,அதைத்தானே சொல்கிறீர்கள்?”

”ஆமாம்.அதனால்தான் யாரும் இங்கு குடி வரவில்லை.அதிலும் நீங்கள் தனியாக வேறு இருக்கிறீர்கள்.”

”அதனால்?”

”சார்! இந்த வீட்டில் ஒரு இளம் தம்பதி இருந்தனர்.பொருத்தமான ஜோடி.ஒரு நாள் இரவுப் பணிக்காகச் சென்ற அவன் வீடு திரும்பும்போது அவள் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போயிருந்தாள். ”நான் இனி வாழ விரும்பவில்லை” என ஒரு சிறு சீட்டு மட்டும் எழுதி வைத்திருந்தாள்.போஸ்ட்மார்ட்டத்தில் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருக்கிறாள் என்பது தெரிய வந்தது.போலீஸ் எவ்வளவு முயன்றும் காரணம் யாரென்று தெரியவில்லை. அதன் பின் அவன் ஊரை விட்டுப் போய்விட்டான்.இந்த வீடும் பேய் வீடு ஆகி விட்டது". அவர் சொன்னார்.

நான் கேட்டேன் “பேயை யாராவது பார்த்திருக்கிறார்களா ?”

“இல்லை. ஆனால் இரவுகளில் சிலநாள் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டதாகச் சொல்லியி ருக்கிறார்கள்’”அவர்.

நான் சிரித்தேன்.’நன்றி சார்.நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்!”

அவர் சென்ற பின்,வாசல் நிலையில் அடிக்கப்படிருந்த தகடைப் பிய்த்து எறிந்தேன்.

இரவு வந்து கொண்டிருந்தது!

இரவு உணவை முடித்து விட்டுச் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் 10 மணிக்குப் படுத்தேன்.இரவு விளக்கு இல்லாமல் நான் தூங்குவதில்லை. படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் உறங்கி விட்டேன்.

திடீரென்று விழிப்பு வந்தது.கண்விழித்தேன்.இருட்டாக இருந்தது.புழுக்கமாக இருந்தது. மின்சாரம் இல்லை என்பதை உணர்ந்தேன்.கைபேசியின் விளக்கு ஒளியில் மணி பார்த்தேன். 12.05.எழுந்து வெளியே போகலாமா என்று யோசித்தேன். அப்போதுதான் ’கம்’ மென்று மல்லிகைப் பூ மணம் என் நாசியைத் தாக்கிற்று. கிறங்க வைக்கும் மணம்.எங்கிருந்து வருகிறது என யோசித்தேன்.அதே நேரம் ஒரு பெண்ணின் அழு குரல் கேட்டது.பெரிய அழுகை இல்லை.சிறு விசும்பல்கள்.அதில் அதீத சோகம் இருந்தது.ஹால் பக்கமிருந்துதான் சத்தம் வந்துகொண்டிருந்தது. பேய்தானா? லேசாக பயம் வந்தது.ஹனுமான் சாலீஸா வைச் சொல்ல ஆரம்பித்தேன். சொல்லியவாறே படுத்தேன். தூங்கி விட்டேன்.

கண்விழிக்கும் போது காலை மணி 5.30.நான் வழக்கமாகக் கண்விழிக்கும் நேரமே. ஹாலுக்கு வந்தேன்.சுற்றிப் பார்த்தேன் எந்த மாற்றமும்,தடயமும் தெரியவில்லை. அதெல்லாம் கனவா?உண்மை நிகழ்வா எனப் புரியாத ஒரு குழப்பம்.

என் வேலைகளை முடித்துச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் புறப்பட்டேன்.சிலர் கேட்டார்கள் முதல் நாள் அனுபவம் எப்படி என்று.எனக்கு எதுவும் தெரியவில்ல என்று சொல்லி விட்டேன். அலுவலக வேலைகள் முடிய இரவு ஏழு மணி ஆகிவிட்டது. வீடு திரும்புமுன்,சில பொருட்கள் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் சென்றேன்.அங்குதான் அவனைப் பார்த்தேன்.என் நண்பன் குமரன்.நீண்ட நாட்களுக்குப் பின் இப்போதுதான் பார்த்தேன்.

அவனைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.ஒரு மருந்துக் கம்பெனியில் ஃபீல்ட் மேனேஜர். ஜாலி யானவன்.ப்ளே பாய்.எந்தப் பெண்ணா யிருந்தாலும் வசியம் செய்து விடுவான்.காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது.காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விடுவான்.

அங்கு சந்தித்து சிறிது நேரம் பேசிய பின் அவன் சொன்னான்.”வா,நமது இந்தச் சந்திப்பைக் கொண்டாடலாம்.”அவன் அகராதியில் கொண்டாட்டம் என்றால் ஒன்றுதான்—பாருக்குப்போவது.

போனோம்.அவன் விஸ்கியும்,நான் வழக்கம்போல் பியரும்.சுருதி ஏறினால் பேச்சு எப்போதுமே அதிகமாகுமே.அவனது புதிய நண்பிகள் பற்றியெல்லாம் சொன்னான்.

நான் குடியிருக்கும் வீடு பற்றியும் முதல் நாள் அனுபவம் பற்றியும் சொன்னேன்.

”வாவ்!சுவாரஸ்யம்! பெண்பேய்! மல்லிகைப்பூ!மோகினிப் பிசாசு என்றால் அழகாக இருக்குமே!நானா இருந்தா நேற்றே அந்தப் பேயை……… என்று சொல்லிச் சிரித்தான்.போதை ஏறியிருந்தது.

”போதும்,போகலாம்” என்று சொல்லி முடித்துக் கொண்டு எழுந்தேன்.அவனால் சரியாக நிற்க முடியாமல் தள்ளாடினான்.இந்த நிலையில் அவனை எப்படி விட்டு விட்டுப் போவது. ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.மணி 10 ஆகி விட்டது.ஹாலில் ஒரு படுக்கை போட்டு அவனைப் படுக்க வைத்துவிட்டு நான் அறையில் படுத்தேன்.

திடீரென்று விழிப்பு வந்தது -நேற்று போலவே.மணி பார்த்தேன்.12.15.மல்லிகைப்பூ மணம்!ஆனால் அழு குரல் கேட்கவில்லை.மாறாக வளையல் ஒலி.பெரு மூச்சுகள். முனகல்கள்.எழுந்து சென்று பார்க்க எண்ணினேன்.என்னால் படுக்கையிலிருந்து எழ முடியவில்லை.அப்படியே மயக்கம் போன்ற உறக்கம்.

காலை எழுந்து வந்து பார்த்தேன்.குமரனைக் காணவில்லை.வாசல் கதவு சும்மா சாத்தி இருந்தது.என்ன ஆனான்?மனது உறுத்தியது.அவன் தங்கியிருப்பதாகச் சொன்ன ஓட்டலுக்குச் சென்றேன்.ரிசப்ஷனில் கேட்டேன்.

”அவர் நேற்று இரவே காலி பண்ணிட்டுப் போயிட்டாரே. இரவு ஒரு மணி இருக்கும். வேகமாக வந்தார்.காலி செய்து போய்விட்டார்.”

பின் சிரித்துக் கொண்டே சொன்னான்.”அவர் வரும்போது அப்படி ஒரு மல்லிகை மணம்!அவர் அறைக்குச் சென்ற பின்னும் அந்தமணம் இங்கே இருந்தது.அவர் காலி செய்து போனபின் அந்த மணம் இல்லை! அந்த இரவில் என்ன செண்ட் போட்டாரோ?”

நாள் முழுவதும் அதே சிந்தனையிலேயே இருந்தேன்.


அன்று இரவு மல்லிகை மணமில்லை,அழுகையில்லை!

(இது ஒரு மீள் பதிவு!இப்போது ஆவி பற்றி எல்லோரும் எழுதுகிறார்களாமே!அதனால் இந்த மீள் பதிவு;முன்பு படிக்காதவர்கள் படிக்கட்டுமே!  படித்தவர்கள்  கண்டிப்பாகக் கருத்துச் சொல்லுங்கள்!இல்லையென்றால்...........இரவு பேய் மிரட்டும்!)

40 கருத்துகள்:

  1. உங்கள் பதிவைப் படிக்கும் போது அந்நாளைய ” பேய்க் கதை மன்னன் ” நாஞ்சில் பி.டி.சாமி ஞாபகம் வந்தார். உங்களை மட்டும் அந்த பேய் ஏன் விட்டு விட்டது என்று தெரியவில்லை?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா..
    அருமையாக எழுதியுள்ளிர்கள்... வாழ்த்துக்கள்.. ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. //இல்லையென்றால்...........இரவு பேய் மிரட்டும்!)// ஆஹா பயமுறுத்தறீங்களே! :)

    முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படித்தேன்... ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  4. குமார்தான் அந்த பெண்ணை பாலியியல் பலாத்காரம் செய்திருக்கவேண்டும் என்பது புரிகிறது. ஆனால் அவர் ஏன் ஓடவேண்டும். உண்மையில் பேய் இருந்திருந்தால் ‘அது’ அவரை பழி வாங்கியிருக்குமே!

    எனவே பேய் என்பது உருவகப்படுத்தப் பட்ட ஒன்று. நாம் ஒன்றை நினைத்து அது ஆழ் மனதில் பதிந்துவிட்டால் அதுதான் பின்னால் நமக்கு முன் வருவது போன்ற பிரமை ஏற்படும். அது மனப் ‘பிராந்தி’தான். வேறொன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லமல் விட்ட ஒன்றைச் சொல்லி விட்டீர்கள்!
      நன்றி

      நீக்கு
  5. பேயையும் "வசியம்" செய்து கூடிச் சென்று விட்டாரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேயையும் "வசியம்" செய்து ’கூடிச்’ சென்று விட்டாரே...! // ! !
      நன்றி டிடி

      நீக்கு
  6. pithan சார் ! நீங்கள் அந்த வீட்டில் தாராளமாக எந்த தயக்குமும் இல்லாமல் தங்கலாம்.

    நான் உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்.

    இப்படிக்கு,

    பேய்.

    பதிலளிநீக்கு
  7. வாவ்.. இப்போது தான் படித்தேன். கற்பனையைத் தட்டி விட்ட கதை. பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  8. உங்களிடம் எல்லாம் "பேய்"(?!)வாலாட்ட முடியுமா,ஐயா?

    பதிலளிநீக்கு
  9. கற்பனைப் பேய் , பிடித்து ஆட்டுகிறது!

    பதிலளிநீக்கு
  10. அந்த மோகினிப் பேயைப் பார்க்கணும் போல இருக்கு ,அடுத்த தடவை வரும் போது எனக்கு கால் பண்ணுங்க ...கால் இருக்கான்னு பார்க்கணும் !
    த .ம +1

    பதிலளிநீக்கு
  11. கதையை சீக்கிரமாய் முடித்து விடீர்கள் இன்னும் எழுதி இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  12. கதையை சீக்கிரமாய் முடித்து விடீர்கள் இன்னும் எழுதி இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  13. ஆஹா உங்களுக்கும் பேய் அனுபவம் இருக்கா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வயதில் பேயைப்பார்த்துக் காய்ச்சலே வந்திருக்கிறது!
      நன்றி

      நீக்கு
  14. சுவாரஸ்யமாய் சென்றது! சட்டென்று முடித்துவிட்டீர்களே! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. அந்தப் பெண்ணின் மரணத்துக்கே இவன்தான் காரணமாக இருந்திருப்பான் என்று அல்லவா நினைத்தேன்!

    பதிலளிநீக்கு
  16. நல்ல கதை.
    பயந்துகொண்டே படித்தேன்.

    பதிலளிநீக்கு
  17. அருமை அருமை வாழ்த்துக்கள்.. ஐயா.

    பதிலளிநீக்கு
  18. இப்போதுதான படிக்கிறேன்
    கதை சொல்லிப்போனவிதமும்
    முடித்தவிதமும் அற்புதம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு