சென்னையின் பொத்திக் காக்கும் கலாசாரத்தில்
பேருந்தில் தெரியாத ஒரு பெண்ணின் அருகில் ஆண் அமர முடியாதுஅவ்வாறு அமர்பவர் ஒரு முதியவராகவே
இருப்பினும் அப் பெண் முகத்தைச் சுளித்துக் கொள்வாள்.
ஆனால் நேற்று ஒரு வித்தியாசமான அனுபவம்.
பேருந்தில் செல்லும்போது என் அருகில் அமர்ந் திருந்தவர் இறங்கி விட இருக்கை
காலி.
அப்போது ஒரு பெண் அருகில் வந்து இங்கு அமரலாமா என என் அனுமதி
கேட்டாள்.
எனக்குப் புரியவில்லை,ஏன் அந்தக்
கேள்வி என.ஒரு பெண்ணின் அருகில் அமர ஆண் அனுமதி கேட்டால் அது
இங்கு நியாயம்.ஆனால் ஓர் ஆணின் அருகில் அமர ஒரு பெண் அனுமதி கேட்பது
எனக்குப் புதுமையாகப் பட்டது.
என்னைப் பார்த்தால் பெண்களை வெறுப்பவன்
போல் தோன்றியதா?அல்லது பெண்களுக்
காக ஒதுக்கப்பட்டாத இருக்கை என்பதால்
கேட்டாளா?
ஒரு வேளை அக்கேள்வியின் விளைவாக என் முகத்தில் தோன்றும் மாறுதல்களைப்
பார்த்து விட்டு அமரலாம் என்று கேட்டாளா?தெரியவில்லை.
ஒரு கேள்வியையே என் பதிலாக்கினேன்…”ஏன் கூடாது?”
அவள் சிரித்தவாறு அமர்ந்து கொண்டாள்.
22 ஆண்டுகளுக்கு முன்…
அப்போது நான் அரியானாவில் வங்கி ஆய்வுப்
பணியில் இருந்தேன்.
ஃபரிதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சுற்றியுள்ள
ஊர்களில் உள்ள கிளைகளுக்கு ஆய்வுக்குச் சென்று
வர வேண்டும்.
பேருந்தில்தான் செல்ல வேண்டும்.
அவ்வாறு செல்கையில் ஒரு பெண்,ஐ.டி.ஐயில் படிப்பவள் எனத் தெரிந்தது,அருகில் இருந்த இருக்கை காலியானது.
சென்னைக்குப் பழகிப்போனநான்
,அருகில் நின்றிருந்தபோதும் அதில் அமரவில்லை.
அப்போது அப்பெண் என்னைப் பார்த்துச் சொன்னாள்,”சீக்கிரம் உட்காருங்கள்”
நான் உடனே அமர்ந்து கொண்டு அவளை ஒரு கேள்விக்குறியுடன்
பார்த்தேன்.
அவள் சொன்னாள்”நீங்கள் உட்காரவில்லையெனில் அதோ நிற்கிறான் பாருங்கள் (ஒரு இளைஞனைக்காட்டி) அவன் அமர்ந்து விடுவான்.அவன் சரியில்லை.எனவேதான் உங்களை சீக்கிரமாக அமரச் சொன்னேன்.”
எந்த ஊராயிருந்தாலும், சில்மிஷம் சில ஆண்கள்
இருக்கத்தான் செய்வார்கள்.அவர்களை எப்படிக் கையாள்வது என்பதற்கான ஒரு பாடம் அந்தப்
பெண்ணின் செய்கை.ஒரு வேளை அவன் அவள் அருகில் அமர நேர்ந்திருந்தாலும்,அவனது
விஷமத்தைக் காட்ட அவள் வாய்ப்புக் கொடுத்திருக்க மாட்டாள்.தலைவனைப் பிரிந்து
வாழும் தலைவியை வேறொருவன் உற்று நோக்கவே அதன் காரணமாகத் தலைவன் திரும்பி வரும்
வரைத் தன் முகத்தைக் குரங்கு முகமாக்கிகொண்டு வாழும் காலமல்ல இது.
வள்ளுவர் அழகாகச்
சொல்கிறார்....
“சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும்
மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை”(57)
இன்றைய பெண்கள் பாரதியின் புதுமைப்
பெண்கள்.
தற்காத்துக் கொள்ளத் தெரிந்தவர்கள்.
பெண்மையைப் போற்றுவோம்!மதிப்போம்!