தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 04, 2010

பருப்புத் தின்னிப் பாப்பானை அடிங்கடா

ஆறாம்படிவம் படித்து விட்டு,அந்தக் கிராமப்புற கல்லூரியில் புகு முக வகுப்பில் சேர்ந்த நான்,அதே கல்லூரியில் கணிதப் பட்டப் படிப்பில் சேர்ந்த பின் கல்லூரியில் ஓரளவு மாணவர்கள் நடுவில் நன்கு அறியப்பட்டவனாக மாறியிருந்தேன்.அதற்குக்காரணம்,நான் படிப்பில் முதன்மையாக இருந்தது மட்டுமல்ல-. விளையாட்டுக்களிலும் நான் காட்டிய ஆர்வம்;நன்கு படிக்கும் மாணவனான நான் கல்லூரியில் நடந்த வேலை நிறுத்தத்திலும் முக்கிய பங்கேற்று ,கண்டன ஊர்வலத்தில் முன்னின்று முழக்கங்கள் எழுப்பியது;ஜூனியர் மாணவர்களிடம் கூட நான் மிக நட்புடன் பழகிய விதம் ஆகிய இவை போன்ற நிகழ்வுகளே.
அக்கல்லூரியில் கிரிக்கட் ஆட்டத்தை அறிமுகப்படுத்தியவனே நான்தான்.நானும் ’ஆலையில்லா ஊருக்கு இலுப்பபூ சக்கரை’தான்.ஆனால் ஹாக்கி ஓரளவுக்கு நன்றாகவே ஆடுவேன்.இரண்டாம் படிவம் முதல் ஐந்தாம் படிவம் வரை(ஏழு முதல் பத்து வரை),ஹாக்கியில் பெயர் பெற்ற கோவில்பட்டியில் படித்தேன்.அது எனக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு வருவோம்.கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும்,பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.அதற்காக நான்கைந்து குழுக்கள் அமைக்கப்படும்.அந்த ஆண்டு ஒரு குழுவின் தலைவனாக நான் நியமிக்கப்பட்டேன்.(எனது ஆரஞ்சுக் குழுதான் அந்த ஆண்டு சாம்பியன் குழுவாக வந்தது.)

போட்டிகளில் ஹாக்கியில் என் தலைமையில் என் குழு ஆடியது எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினோம்.மிகவும் கடுமையான போட்டி.ஆட்டத்தில் என் இடம்,வலது கடைசி(right-out,right extreme).நான் பாஸ் செய்த பந்தை வாங்கி,என் அணி ஆட்டக்காரர் ஒரு கோல் போட்டார். எதிர் அணியினரும் ஒரு கோல் போட்டனர்..ஆட்டும் மேலும் கடுமையானது.நான் என் முழுத்திறமையையும் காட்டி ஆடினேன்.நானே பந்தை எடுத்துச் சென்று ஒரு கோல் போட்டேன்.எதிர் அணியினரால் எங்கள் பாதுகாப்பை மீறி கோல் போட முடியவில்லை.ஆட்டத்தில் சிறிது வன்முறை தலையெடுத்தது.அப்போது ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் நடுவிலிருந்து ஒரு உரத்த குரல் எழுந்தது”பருப்புத்தின்னிப் பாப்பானை அடிங்கடா”.சிறிது நேரத்தில் எதிர் அணி ஆட்டக்காரர் ஒருவர் என்னுடன் மோதும் போது,மட்டையால் என் காலில் அடித்தார். அதைப் பொருட்படுத்தாமல் நான் தொடர்ந்து வேகமாக ஆடினேன். வெளியிலிருந்து என் வகுப்புத்தோழனின் குரல் வந்தது. ”சந்துரு,உன் காலைப் பார்” குனிந்து பார்த்தேன்.குருதி வழிந்து கொண்டிருந்தது.ஆட்டம் முடிய சில மணித்துளிகளே மீதம் இருந்ததால்,கைக்குட்டையால் ஒரு கட்டுப் போட்டு விட்டுத் தொடர்ந்து ஆடினேன்.இறுதியில் எங்கள் அணி வென்றது.

ஆட்டத்தின் நடுவில் என்னை அடிக்கச் சொல்லிக் குரல் கொடுத்த மாணவரை நான் நன்கு அறிவேன்.எனக்கு ஜூனியர்.என்னிடம் பலமுறை உரையாடி யிருக்கிறார்.மிகுந்த மரியாதையுடன் பழகுவார்.அவரிடமிருந்து ஏன் அப்படி ஒரு வன்ம வெளிப்பாடு? அவர் வேறு அணியைச் சேர்ந்தவர் என்பதாலா?ஆழ் மனத்தில் எப்போதும் அத்தகைய உணர்வு இருந்ததா?இதுகாறும் அவர் பாராட்டிய நட்பெல்லாம் வேடமா?அவரை எந்த விதத்திலும் நான் காயப்படுத்தாதபோது என் மேல் ஏன் அந்த வெறுப்பு?ஒரு ’பார்ப்பான்’ வெற்றி பெறுவதைப் பொறுக்க முடியவில்லையா?விளையாட்டுப் போட்டியில் ’சாதி’ எங்கு வந்தது?இன்று வரை விடை தெரியாத கேள்விகள்.

இந்த நிலை இன்றும் எல்லா நிலைகளிலும் தொடர்கிறது.நம்முடன் இருக்கும்போது தெரியாத ஒருவரின் சாதி,அவர் நம்மை விட்டு விலகி எதிர்அணிக்குச் சென்றால்,சட்டைக்குள் நெளியும் அவர் பூணூலின் மூலமாகத்தெரிந்து விடுகிறது. வலைப்பதிவுலகிலும் இந்நிலை தொடர்கிறது. இரண்டு பதிவர்களிடையே பிரச்சினை மூளும்போது,வேறு சில பதிவர்கள் சாதி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர்.’அவன் பார்ப்பான்’ அவன் ’வன்னியன்’ என்றெல்லாம் எழுதப்படுகிறது.பிரச்சினைய முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதில்,ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.

கருத்தை,கருத்தால் எதிர் கொள்வதை விடுத்துத் தனி மனித்தாக்குதல்கள் தொடங்கி விடுகின்றன.

இந்த நிலை மாற வேண்டும்.நாமெல்லாம் ஒரே சாதி- பதிவர் சாதி.

எதிர்க்க வேண்டும் என்றால் ஒருவரால் சொல்லப்பட்ட கருத்தைக் கடுமையாக எதிர்த்து வாதம் செய்வோம்.சாதியை நடுவில் இழுக்க வேண்டாம்.

இதுவே இந்தப் “பருப்புத்தின்னிப் பாப்பானின்” வேண்டுகோள்.

(என் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டின் என் சாதி பற்றிப் பேசாமல்,எதிர் வாதத்தை முன் வைக்க வேண்டுகிறேன். நான் என்றுமே என் சாதி குறித்துப் பெருமையோ. சிலரின் காழ்ப்புணர்ச்சி கண்டு சிறுமையோ கொண்டதில்லை.)

15 கருத்துகள்:

  1. // //நான் என்றுமே என் சாதி குறித்துப் பெருமையோ. சிலரின் காழ்ப்புணர்ச்சி கண்டு சிறுமையோ கொண்டதில்லை// //

    அட்டடா, அங்கதான் நிக்கிறீங்க.

    இதுல தனியா "சாதி குறித்துப் பெருமை"பட என்ன இருக்குன்னுதான் புரியலை!

    பதிலளிநீக்கு
  2. அன்பு அருள்,
    யாருக்குமே சாதி குறித்துப் பெருமைப் பட எதுவுமில்லை என்பதுதான் என் கருத்து.
    வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. வித்யாசமான ஆசாமியா இருக்கிங்க.. எல்லாரும் உங்களை போல இருந்துட்டா பிரச்சினையே இல்லை

    பதிலளிநீக்கு
  4. விடுங்கப்பு எல்லாம் ஒரு வயதெரிச்ச்சல்தான்.. தூங்குறவங்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது, இது போன்ற எதிர்ப்புகளால்தான் Delhi, Bombay,calcutta என்று தமிழ்நாட்டு பிராமிணர் நன்றாக settle ஆகிவிட்டனர்.

    பதிலளிநீக்கு
  5. why dinamalar,thuklak,hindu are all against tamil community?

    பதிலளிநீக்கு
  6. அன்பு LK,
    நன்றி.
    அன்பு சித்தூர் எஸ்.முருகேசன்,
    நன்றி
    அன்பு கோகுல்,
    நன்றி
    அன்பு ttpian,
    உங்கள் குற்றச்சாட்டு உண்மையென்றால்,கேள்வி அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
    ஆமாம்,அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?

    பதிலளிநீக்கு
  7. பருப்புத் தின்னி என்று சொன்னது வேதனையாக இருக்கிறது.

    இப்போது பாப்பனர்களும் ஆடு, கோழி எல்லாம் சாப்பிடுகின்றனர் என்று நீங்கள் ஒரு பதிவில் சொல்ல வேண்டும்.

    அப்போது அம்பிகளை வதைப்பது குறையும். செய்வீர்களா...

    - ஜெகதீஸ்வரன்.

    http://sagotharan.wordpress.com/

    பதிலளிநீக்கு
  8. @ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    @ ஜெகதீஸ்வரன்,
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.(வேதனைப் படுகிறீர்களா, கிண்டல் செய்கிறிர்களா?!!)

    பதிலளிநீக்கு
  9. அன்பு நண்பரே! பருப்பிலே புரதச்சத்து இருப்பது இருப்பதால் அதை சாப்பிடுவது ஒன்றும் குற்றமோ, இழிவோ அல்ல!

    "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்."

    "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்."

    என்ற அய்யன் வள்ளுவனின் குறள்களைப்படித்திருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்கமாட்டார்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு நடனசபாபதி,
    மிக அருமையான குறள் மேற்கோள்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ’ப.தி.பா’., ’ஐயப் பய’ போன்ற பல சொற்களையும், வேதனைகளையும் கடந்து இன்று வாழ்க்கையில் இங்கே நிற்கிறீர்கள் என்றால்,சில சமயங்களில் வாழ்க்கையில் ஜெயிக்க அலட்சியமும் அவசியமாகிறது என்பதை நிரூபித்தாலும் இன்னமும் ஜாதிக் கட்சிகளும் (பதவிக்கு வருவதற்காக மட்டுமே) அவற்றை ஆதரிக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஆளும்/எதிர்க் கட்சிகளும் கூட நிதர்சனந்தானே!

    பதிலளிநீக்கு
  12. @RSK
    உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.கட்டுண்டோம், பொறுத்திருப்போம்,காலம் மாறும்!

    நன்றி

    பதிலளிநீக்கு