தொடரும் தோழர்கள்

புதன், ஜனவரி 28, 2009

அன்புள்ள அப்பா!

(நேற்று என் உறவினர் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார்-திண்டிவனத்தில் ஒரு பள்ளியில் நடந்த ஒரு சிறுகதை,கடிதம் எழுதும் போட்டியில் பரிசு பெற்ற ஒரு கதையை இணைத்திருந்தார்.சுஜாதா பாணியில் எழுதப்பட்ட அக் கதையின் தமிழாக்கம் கீழே;படியுங்கள்,ரசியுங்கள்)

அன்புள்ள அப்பா, 27-01-1965

நீங்கள்,அம்மா,ராஜி,சீனு எல்லாரும் சௌக்கியமென்று நம்புகிறேன்.இங்கே,நியூயார்க்கில்,குளிர் நடுக்குகிறது;ஆனால் அவர் சொல்கிறார்,நான் கடுங்குளிரிலிருந்து தப்பி விட்டேன் என்று.

கொட்டுகின்ற பனியை பார்க்காமல் போய் விட்டேனே என்று வருந்துகிறேன்.அதே சமயம் திருச்சியை விட்டு வந்ததும் வருத்தமாகத்தான் இருக்கிறது.திருச்சி மற்றும் அதனுடன் இணைந்த மற்றவை-நீங்கள்,அம்மா,ராஜி, சீனு,பக்கத்தாத்து ரமா,உச்சிப்பிள்ளையார் கோயில், விகடன், ஃபில்டர் காஃபி,ஹோலி க்ராஸ் கல்லூரி,ஃபிசிக்ஸ் துறை, அனைத்துக்கும் மேலாய் சக்தி-இந்த நினைவாகவே இருக்கிறேன்.

இக்கடிதத்தில் சக்தி பற்றி எழுதியது உங்களுக்குப் பிடிக்காதுதான்.கவலைப் படாதீர்கள் அப்பா.நீங்கள் என் நன்மைக்காகவே என்னை விசுவுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தீர்கள் என்பது எனக்குத்தெரியும்.நான் சக்தி பற்றி உங்களிடம் சொன்ன அன்று,நீங்கள் கோபத்தில் கத்தியதும்,அம்மா தன் கண்ணீரை மடிசார் தலைப்பினால் மௌனமாகத் துடைத்துக் கொண்டதும் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.அதன் பின் பொறுமையாக நான் ஏன் சக்தியை மணக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விவரித்தீர்கள்.20 என்பது வாழ்க்கை பற்றித் தீர்மானிக்க மிகவும் சிறிய வயது என்பதையும் ,குடும்பத்துக்கும், ராஜிக்கும் இதனால் பாதிப்பு எற்படுவதையும், அக்ரஹாரத்தில் நமக்கு ஏற்படும் தலைகுனிவையும்,ஒரு மாமிசம் சாப்பிடும் ஆண், வெங்காயம் கூடச் சாப்பிடாத ஒரு பெண்ணுக்கு சரியான துணையாக முடியாது என்பதையும் இன்னும் எத்தனையோ காரணங்களயும் எடுத்துரைத்தீர்கள்.சக்தி ஒரு சமணமுனிவராக மாறினாலும் கூட உங்களால் வேறு பல காரணங்கள் சொல்லியிருக்க முடியும்.ஆனால் இதற்கு எதிராக,விசு,பூணல் அணிந்தவர், நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை,அமெரிக்காவில் கம்ப்யூடர் துறையில் உயர்ந்த வேலையில் இருப்பவர்,இப்படி எத்தனையோ காரணங்கள் உங்களுக்கு இருந்தன ,விசுவைத் தேர்ந்தெடுப்பதற்கு..அப்பா,நான் குறை கூறவில்லை,விசுவும் ரொம்ப நல்லவர்தான்.

அம்மாவிடம் சொல்லுங்கள்,அம்மா சொன்னபடி நான் கொழுக்கட்டை செய்யவில்லையென்று,ஏனென்றால் இங்கே தேங்காய் விலை அதிகம்,அவருக்கு கொழுக்கட்டை பிடிக்காதாம்.

ஆனால் சங்கராந்தி அன்று,அவர் விருப்பப்படி வெளியில் போய் சாப்பிட்டோம்.ஒரு கடல் உணவு விடுதிக்குச் சென்றோம்.சாட்டர்ஜி குடும்பத்தையும் அவர் அழைத்திருந்தார்.அவர்கள் பேசிய அமெரிக்க ஆங்கிலம் எனக்குச் சரியாகப் புரியவில்லை.மெனு கார்டில் தலையைப் புதைத்துக் கொண்டேன்.மற்றவர்கள் என்னவெல்லாமோ ஆர்டர் செய்தனர்.நான் ஒரு சாண்ட்விச்சும் ஜூசும் கொண்டு வரச் சொன்னேன்.அன்றுதான் அப்பா நான் தெரிந்து கொண்டேன்,அவருக்கு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும், மீனும் மிகவும் பிடிக்கும் என்று.

உங்களுக்குத் தெரியுமா அப்பா,எனக்காக சக்தி அசைவம் சாப்பிடுவதையே விட்டு விட்டாரென்று.அதுவும் நான் எதுவும் சொல்லாமல், அவராகவே.ஆனால் சக்தி நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை இல்லையே,அவரால் சுப்பிரமணிய ஐயரின் பெண்ணான கல்யாணியை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும்?

அவ்வப்போது,எங்கள் நலம் பற்றி எழுதுகிறேன். என்னால் சீனுவின் பூணலுக்கு வர முடியாது என நினைக்கிறேன். எனக்குப் பட்டுப் புடவை வாங்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லுங்கள்.இங்கே அதையெல்லாம் கட்டிக் கொள்ள முடியாது.கோமாளித்தனமாக இருக்கும்.

இப்படிக்கு,

உங்கள் அன்புள்ள

கல்யாணி


(இன்னும் வரும்)

6 கருத்துகள்:

  1. 20 என்பது வாழ்க்கை பற்றித் தீர்மானிக்க மிகவும் சிறிய வயது என்பதையும் ,குடும்பத்துக்கும், ராஜிக்கும் இதனால் பாதிப்பு எற்படுவதையும்,

    பதிலளிநீக்கு
  2. இப்படி எத்தனையோ பேர் வெளி நாடுகளில் இருக்கிறார்கள் ! இன்றைய பெற்றோர்கள் பலர், ஊர் பெருமைக்காக தன் மகனை பெரிய இடத்திலோ, தன் மகளை வெளி நாட்டிலோ அவர்கள் விரும்பாதவர்களுகு திருமணம் செய்து கொடுத்து விட்டு தன் பிள்ளை களை பிரிந்து அவர்களும் வருத்தபடுகிறார்கள்,விரும்பாத வாழ்க்கை துணையால் அவர்களிம் பிள்ளைகளும் வருத்தபடுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  3. @truth alone triumphs-
    வருகைக்கு நன்றி. சொல்ல வந்த கருத்தை முழுமையாகச்சொல்லவில்லையே!

    @mvalarpirai-
    விரும்பியது கிடைக்காதபோது, கிடைத்ததை விரும்பவேண்டியதுதான். வாழ்க்கையே சமரசங்கள் நிறைந்ததுதானே . நன்றி .

    @இனியவள் புனிதா-

    நன்றி

    பதிலளிநீக்கு