தொடரும் தோழர்கள்

புதன், ஜனவரி 28, 2009

அன்புள்ள அப்பா-கடிதம்-2

அன்புள்ள அப்பா, 20-10-1968

நாங்கள் சௌக்கியம்
கௌதம் பேச ஆரம்பித்துவிட்டான்.அவன் ’தோசை’ என்று சொல்வதுபோல் எனக்குக் கேட்டது.ஆனால்,விசு அது வெறும் உளறல்தான் என்கிறார்.

உங்கள் முந்திய கடிதத்திலிருந்து பக்கத்தாத்து ராஜிக்குக் கல்யாணம் நடந்து ஜாம்ஷெட்பூரில் இருக்கிறாள் என அறிந்து கொண்டேன்.சந்தோஷம்.சாரதா மாமியிடம் கேட்டு அவள் விலாசத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.அவளுடன் தொடர்பு கொள்கிறேன்.

ராஜி கணவருடன் மெட்ராசில் சந்தோஷமாக இருப்பாள் என நம்புகிறேன்.சென்ற மாதம் அவளுடன் ஃபோனில் பேச ரொம்ப சந்தோஷமாக இருந்தது.சீனுவைப் பரிட்சைக்கு நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள்.சக்திக்குக் கல்யாணம் ஆகி விட்டதாக ராஜி சொன்னாள். அவனுக்கு என் வாழ்த்துக்களை மானசீகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனென்றால் ராஜி என் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டாள்.என் காரணமாக நீங்கள் உங்கள் நீண்ட நாள் நண்பரான,சங்கரவேலுடன்(சக்தியின் அப்பா) உங்கள் நட்பைத்துண்டித்து விட்டீர்கள் என்று எனக்குத்தெரியும்.சக்தி அவன் அம்மா விருப்பப்படி மாமா மகளை கல்யாணம் செய்துகொண்டதாக அறிகிறேன்.


ஆவணி அவிட்டம் வழக்கம் போல் சிறப்பாக நடந்ததா? விசுவின் அம்மா ஒரு கட்டுப் பூணல் கொடுத்திருந்தார்கள், ஆவணி அவிட்டத்துக்காக.ஆனால் அன்று அவர் பாஸ்டனில் இருந்தார்.இங்கே இருந்திருந்தாலும் பூணலை உபயோகித்திருக்க மாட்டார்.சென்ற மூன்று வருடங்களில் அவர் பூணல் அணிந்து நான் பார்த்ததே இல்லை.கௌதம் இப்போது அந்த நூல் சுருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.அது வெறும் நூல்தான்,வேறென்ன சொல்ல.அதன் முக்கியத்துவம் அவனுக்கு என்றாவது தெரியுமா என்பது சந்தேகமே.விசு அவன் ஆங்கிலத்தை மட்டுமே கேட்கும்படி செய்து வருகிறார்.அதுவே அவனுக்கு நல்லது செய்யும் என்கிறார்.ஆனல் நான் தனியாக இருக்கும்போது பொன்னியின் செல்வனையும்,பாரதியார் கவிதைகளையும் படித்துக் காட்டுகிறேன்.அந்த கவிதைப் புத்தகம்,சக்தி எனக்கு பரிசளித்தது.அவன் கையெழுத்து அதன் முதல் பக்கத்தில் இருக்கிறது.அப்புத்தகத்தைப் பார்த்த விசு ஒரு முறை சக்தி பற்றி என்னிடம் கேட்டார்.பயப்படாதீர்கள்,அப்பா.விசு ரொம்ப நல்லவர்.அதை சாதாரணமாக எடுத்துகொண்டார்.பின் அவர் அவரது அமெரிக்க நண்பி பற்றிக்கூறினார்.அவருடன் பணி புரிந்த அவளுடன் மூன்று மாதம் சேர்ந்து வாழ்ந்தது பற்றியும் சொன்னார்.அவள் ஒரு நாள் வந்திருந்தாள்.நல்லவள்தான்.


அம்மாவை ஒரு வருஷத்துக்குப் போதுமான சாம்பார் பொடி அனுப்பச் சொல்லுங்கள்.என் ஃபிரண்ட் சுதா அடுத்த வாரம் மெட்ராஸ் வருகிறாள்,சீனுவை சென்னைக்கு அனுப்பி அவளிடம் பொடியைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி

(இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக