தொடரும் தோழர்கள்

மகளிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 09, 2013

நான்தான் சமையக்காரி அலமேலு!

நான்தான் அலமேலு.வெறும் அலமேலுன்னு சொல்றதை விட சமையக்காரி அலமேலுன்னு  சொன்னா எல்லாருக்கும் நன்னாத் தெரியும்.இப்பக் கூட ஆடிட்டர் ஆத்துக்கு,தல தீபாவ ளிக்கு ஸ்வீட் பண்ணத்தான் போயிண்டிருக்கேன்.    

பொறக்கும் போதே நான் சமையக்காரியாப் பொறக்கலே!காலக் கோளாறு, சமையக்காரி ஆயிட்டேன்.வயத்துப்பொழப்புக்காகக் கரண்டியைக் கையிலெ எடுத்தேன்.முதல்ல ஆத்தில இருந்தவாளுக்குச் சமைச்சுப் போட்டுண்டி ருந்தேன். அப்பறமா ஊருக்கே சமைக்க ஆரம்பிச் சுட்டேன்.


நான்  பொறந்து  வளந்த கதையெல்லாம் இப்ப வேண்டாம்.எங்க அப்பா எனக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வச்சார்.ரொம்பப் பெரிய வேலையில இல்லாட்டாலும் ஏதோ சாப்பாட்டுக்கும் கட்டிக்கத் துணிக்கும் கஷ்டப்படாத வாழ்க்கை. ஆனா திடீர்னு ஒரு நாள் அவர் என்னையும் எங்க பிள்ளை நந்துவையும் நிர்க்கதியா விட்டுட்டுக்  கண்ணை மூடிட்டார்.


நந்து அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சிண்டிருந்தான்.அவர் இருக்கும்போது சொல்வார்,”நீ ரொம்ப நன்னாச் சமைக்கறேடீன்னு. அந்தச் சமையல்தான் கைகுடுத்துது.எல்லாராத்து விசேஷத்துக்கும் சமைக்க ஆரம்பிச்சேன். எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. அலமேலுவை நம்பி ஒரு கல்யாணச் சமையலையே குடுக்கலாம்னு சொல்ல ஆரம்பிச்சா!கூடவே அப்பளாம்,  வடாம் எல்லாம் பண்ணி விக்க ஆரம்பிச்சேன்.ஒரு மாதிரி கஷ்டப்பட்டு நந்துவை பி.காம் படிக்க வச்சேன்.


அவனும் கெட்டிக்காரன்.கஷ்டம் தெரிஞ்சவன். நன்னாப் படிச்சு ஃபர்ஸ்ட் கிளாஸில பாஸ் பண்ணினான்.ஏதோ பரிட்சை எழுதி தில்லி செகரடேரியட்ல வேலையும் கெடச்சது.நான் அவன்கிட்ட சொல்லிட்டேன் நான் தில்லிக்கெல்லாம் வரமாட்டேன்னு.பாவம் கொழந்த. தனியாய தானே பொங்கிச் சாப்பிட்டிண்டு 5 வருஷம் ஓட்டினான்.எனக்கும் மாசா மாசம் பணம் அனுப்பிசிண்டிருந்தான்.

அப்பறம்தான் எழுதினான் அவன்கூட வேலை பாக்கிற மாலதியை லவ் பண்றதா. நல்ல வேளை,அவா பிராமணாதான்னும் எழுதியிருந்தான்.


எதுக்குக் கதையப் பெரிசா வளக்கணும்? கல்யாணம் பண்ணிண்டான்.

கல்யாணத்துக்கப்புறமும் நான் இங்க,அவா டில்லியிலதான். கொஞ்ச நாள் போச்சு.நந்து என்னைக் கட்டாயப் படுத்திக் கூப்பிட ஆரம்பிச்சான்,அம்மா இங்கயே வந்து இரும்மான்னு. சரி,அவன் இவ்வளவு கூப்பிட்றானே, போய்ப் பாக்கலாமேன்னு போனேன்.


போய் ரெண்டுநாள் கழிச்சு நந்து சொன்னான் அம்மா இவளுக்கு உன் சமையல் எல்லாம் நன்னாச் சொல்லிக் கொடுன்னு.நானும் அவ சமைக்கும்போது கூடவே இருந்து பாத்துச் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சேன்.ஒரு வாரம் கழிச்சுப்பாத்தா,சமையல் பூரா நாந்தான் செய்யறேன்;அவ சமையலறைப் பக்கம் வரதையே விட்டுட்டா! ரெண்டு பேரும் கார்த்தால 8 மணிக்குப் புறப்பட்டுடுவா.அதுக்குள்ள டிஃபன் பண்ணிகுடுத்துச் சமையல் பண்ணி பாக்சில போட்டு, மத்தியானம் இட்லிக்கு அரைச்சு வச்சு,ராத்திரிக்கு டிஃபன் பண்ணி வக்கணும் ,அவா ராத்திரி வந்தா டி.வி முன்னால ஒக்காந்துடுவா!


மத்தியானம் அக்கம் பக்கத்தில நம்ம பாஷைல பேசவும் ஆளில்ல. எங்கேயும் வெளிலயும் போக முடியல.ஒரே ஜெயில்தான்.


ஒரு மாசம் ஆச்சு.ஒரு நாள் அவ சொன்னா,இந்த மாசம் எண்ணெய், பருப்பெல்லாம் நிறைய ஆயிருக்கே.ஏன் இப்படி.இனிமே  கொஞ்சம் பாத்துச் செலவழியுங்கோன்னு. அவன் அதைக் கேட்டுண்டு இடிச்ச புளியாட்டம் நிக்கறான்.



இன்னொரு நாள்,கை தவறிப் பாலைக் கொட்டிட்டேன்.அதுக்குக் கன்னா பின்னான்னு ராட்சசி மாதிரி சத்தம்போட்டா.எனக்குப் பொறுப்பே இல்லையாம்.அப்பவும் அவன் மலங்க மலங்க முழிச்சிண்டு நிக்கறான்.ஒரு வார்த்தை பேசலை.


அப்பத்தான் முடிவு பண்னினேன்.ஊருக்குப் போயிட வேண்டியது தான்னு.நல்ல வேளையா  குளிர் ஆரம்பிக்கவே அதைச் சாக்கா வச்சு ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிப் புறப்பட்டுட்டேன்.


ஊருக்கு வந்து சேர்ந்ததுமே வக்கீலாத்து மாமி சொல்றா,என் வயத்தில பாலை வார்த்தேடி, பெண்ணு பிரசவத்துக்கு வரா, ஒண்டியா என்ன பண்றதுன்னு தவிச்சுண்டிருந்தேன்னு. அவ்வளோ சந்தோஷம் அவாளுக்கு!

ஆச்சு.இப்பத்தீபாவளி வந்துடுத்து ,வேலை சரியா இருக்கு,ஆனா சந்தோஷமா இருக்கு.


எங்கயோ பாஷை தெரியாத ஊர்ல,யாரிட்டயும் பேச முடியாம, வெளில வாசல்ல போக முடியாம வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடந்து  சம்பளம் இல்லாத  சமையக்காரியா
இருக்கறதை விட,மனுஷாளோட பேசிண்டு, கோவில் குளம்னு போயிண்டு, நாலு பேருக்கு ஒத்தாசையா இருந்து நாலு காசு சம்பாதிச்சுண்டு சமையக்காரியா  இருக்கறது
மேல்தானே!

என்ன சொல்றேள்?

ு ஒரு மீள் ிவ,மிர் ினத்ுக்காக!