தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 18, 2008

ஜெயகாந்தனும்,தி.மு.க.வும்

அறுபதுகளின் தொடக்கத்தில்,நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது,ஆனந்தவிகடனில் வாரம் ஒரு முத்திரைக் கதை வரத்தொடங்கியது.அதிகமான முத்திரைக் கதைகள் எழுதி என்னை வெகுவாகக் கவர்ந்தவர் ஜெயகாந்தன்.யுகசந்தி,கிழக்கும் மேற்கும்,போன்ற பல அற்புதமான கதைகளை எழுதினார்.ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டாக இருந்த அவர் பின் காங்கிரஸ்காரராக மாறினார்.பீரங்கிப் பேச்சாளர் என்று அழைக்கப் படும் அளவுக்கு பொறிபறக்கப் பேசுவார்.பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் நாளிதழான "ஜெயபேரிகை"என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்தார்.
அன்னாட்களில் தி.மு.க.வை மிகக் கடுமையாக விமரிசித்து வந்தார்.அவர் கம்யூனில் இருந்து பொதுவுடமை பற்றி நன்கு அறிந்திருந்தார்.ஒரு முறை அவர் எழுதினார்-அதன் சாரம்சமாவது.--உலகில் இரண்டு வர்க்கங்கள் உள்ளன-முதலாளி வர்க்கம்(பூர்ஷ்வா),தொழிலாளி வர்க்கம்(ப்ராலிடேரியெட்).இதைத் தவிர இரண்டிலும் உள்ள தீமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு புதிய வர்க்கம் உருவாகிறது-லும்பன் ப்ராலிடேரியெட் என்று;தமிழில் இதைப் பொறுக்கி வர்க்கம் என்று அழைக்கலாம். தி.மு.க.வின் பின்னணி இதுதான்-----இது ஜெயகாந்தன் எழுதியது.

ஒரு முறை,தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது,கட்சித் தகறாரில் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.காலை இழந்தார்.அது பற்றி ஜெயபேரிகையில் எழுதிய ஜெயகாந்தன் தி.மு.க.ஆட்சியாளர்கள் பற்றி இவ்வாறு எழுதினார்---
“நாப்பறை கொட்டி நாடாள வந்தபின் பேய்ப்பறை தட்டிப் பிணம் தின்னும் கழுகுக்கூட்டமே,கழக அரசே”----இது ஜெயகாந்தன் எழுதியது.
இவ்வாறு தி.மு.க.வைக் கடுமையாக விமரிசித்து வந்தவர் ஜெயகாந்தன்.
இப்போது??
காலத்தின் கட்டாயம்.

திங்கள், டிசம்பர் 15, 2008

கொல்றாங்க,கொல்றாங்க

சில போட்டித் தேர்வுகளில் முன்பெல்லாம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று,சில பிரபலங்கள் பேசிய பிரபலமான வார்த்தைகளைக் கொடுத்து யார்,எப்போது பேசியது எனக் கேட்பது.அப்படிப்பட்ட சில வாக்கியங்கள் கீழே---
1.ஹே,ராம்
2.எலி,எலி,லெம்மா சபக்தானி
3.யுரேகா,யுரேகா
4.ஓ,நோ
5.பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் ஆப் அமெரிக்கா
6.கொல்றாங்க,கொல்றாங்க!
எல்லாம் தெரியும்தானே!

வெள்ளி, டிசம்பர் 12, 2008

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்

இது நேற்றே எழுதியிருக்க வேண்டிய பதிவு.ஒரு நாள் தாமதமாகி விட்டது.கீழே உள்ள பாரதியின் பாடலைப் பாருங்கள்---

"முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்- ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்;
இன்னாளிலே பொய்மைப் பார்ப்பார்-இவர்
ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார்."

எனக்கு எழுந்த கேள்விகள்-
1)ஐயரெல்லாம் வேதம் ஓதினால் மட்டும் மாதம் மூன்று மழை பெய்யுமா?பாரதி அவ்வாறு நம்பினாரா?

2)சாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாடிய புதுமை கவிஞன்,ஒரு சாதியைக் கேவலப்படுத்துவது போல் பாடலாமா?சாதீயத்தைச் சாடுவது என்பது வேறல்லவா?

3)இது மறவன் பாட்டு என்ற தலைப்பில் வருகிறது,எனவே இது பாரதியின் கருத்தல்ல,ஒரு "மண் வெட்டிக் கூலி தின்னும்" மறவனின் கருத்து எனக் கொள்ள முடியுமா?கவிஞனின் உள்ளம்தானே வேறொருவர் மூலம் வெளிப் படுகிறது?.

4) இன்னொரு இடத்தில் பாரதி சொல்கிறார்"வேதமறிந்தவன் பார்ப்பான்,பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்".எனவே வேதம் ஒதுவதை விட்டுவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் எழுந்த வரிகளா?(ஆதி சங்கரர் தனது 'சாதனா பஞ்சகத்'தில் "தினமும் வேதத்தை ஓத வேண்டும்" என்று சொல்கிறார்.இது பற்றி என் நண்பர் மதுரை சொக்கன் அவர்களை அவரது பதிவில் எழுதுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.)

நான் பாரதியின் ரசிகன்.என் பள்ளி நாட்களிலிருந்தே பாரதியால் ஈர்க்கப் பட்டவன்.என்னிடமிருக்கும் "பாரதியார் கவிதைகள்" என்ற ஸ்ரீமகள் கம்பெனி யின் 1956 ஆம் ஆண்டுப் பதிப்பு(விலை ரூ.6/=) அட்டை கிழிந்து நைந்து போயிருக்கிறது.

பாரதியின் பிறந்த நாளையொட்டி இதை ஒரு கருத்தரங்கமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். என் பதிவுக்கு வருகை தரும் சிலர் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வெள்ளி, டிசம்பர் 05, 2008

ஜெகசிற்பியனின் மறைவுக்குப் பின்?

நேற்று அமெரிக்காவிலிருக்கும்(தற்சமயம்)என் அண்ணாவுடன் யாஹூ உரையாடலில் இருந்தபோது அவர் திடீரென்று ஒரு கேள்வி கேட்டார்.
"ஜெகசிற்பியன் அவர்கள் காலமானபின் என்ன நடந்தது என்று தெரியுமா?
"தெரியாது.என்ன நடந்தது?"-நான்.
"அவர் மனைவி பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார்-RC கிறித்தவப் பிரிவைச் சேர்ந்த இளைஞர் யாராவது அதிக செலவின்றி அவர் மகளை மணக்க முன் வருவாரா என்று"-அண்ணா
"எப்போது இது?"-நான்
"முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்"-அவர்
"இப்போது எப்படித் திடீரென்று நினைத்துக் கொண்டாய்"-நான்
"நேற்று உன் பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன்"-அவர்.
இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று எனக்குப் புரியவில்லை.அதை நான் அவரிடம் கேட்கவும் இல்லை
என் நினைவுகள் ஜெகசிற்பியனிடம் சென்றன.
அறுபதுகளின் தொடக்கத்தில்,நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது,விகடனில் சில அற்புதமான முத்திரைக் கதைகள் எழுதினார்.மறக்கமுடியாத பாத்திரங்களான ஆடிகோடா,பாடிகோடி என்ற இருவரைப் பற்றிய,'நரிக்குறத்தி' என்ற ஒரு பரிசு பெற்ற சிறுகதை.நான் மிக விரும்பிப் படித்த "ஆலவாய் அழகன்"என்ற ஒரு புதினம் இப்படி எத்தனையோ.
அவர் மறைவுக்குப் பின் இப்படி ஒரு நிலையேற்பட்டதென்றால்,இதென்ன கொடுமை?
இப்போது என் மனத்தை அரிக்கும் நினைவெல்லாம் ,"பின் என்னவாயிற்று?"
யாராவது நல்ல மனம் கொண்ட இளைஞன் அப்பெண்ணை மணந்து அவர்கள் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.
யாருக்காவது தெரியுமா?
சில மாதங்களுக்கு முன் ஜெகசிற்பியனின் படைப்புகள் பற்றி 'ஜீவி' என்பவர் ஒரு பதிவிட்டு அதில் நான் ஒரு பின்னூட்டமும் இட்டிருந்தேன்.
அவருக்குத் தெரியுமா?
யாருக்குத்தெரியும்?