தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 19, 2014

பயணங்கள் முடிவதில்லை!



இப்போதெல்லாம் எங்காவது பயணம் போக வேண்டுமென்றால் மிகவும் அலுப்பாக இருக்கிறது.ரயில்களில் முன்பதிவு,பஸ்களில் தாறுமாறான கூட்டம் என பயணத்தின் சுவாரஸ்யங்கள் பொலிவிழந்து விட்டன.ஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் பயணம் என்பது எவ்வளவு சுவாரஸ்யமாக,மகிழ்ச்சி தருவதாக இருந்தது!

கோடை விடுமுறைக்காலங்களில் வேறு ஊருக்குப் பயணம் செல்வது என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இருந்தது .என் பள்ளிப் பருவத்தில்,சாத்தூரிலும், கோவில் பட்டியிலும் இருந்தபோது விடுமுறைகளில் கட்டாயம் செல்லும் ஊர்கள் இரண்டுவத்திராயிருப்பு அல்லது உசிலம்பட்டி(பின்னர் திண்டுக்கல்).இந்த ஊர்களில் விடுமுறைகள் எப்படிக்கழிந்தன என்பதைப் பிரிதொரு பதிவில் சொல்வேன்.இப்போது பயண சுவாரஸ்யங்கள் மட்டுமே!

வத்திராயிருப்பில் என் அன்னையின் சித்திகள் இருவர்,இருவரும் மிக இளம் வயதிலேயே கைம்பெண்ணானவர்கள்,வசித்து வந்தனர்.சாத்தூரிலிருந்து அங்கு பேருந்தில்தான் செல்ல வேண்டும்.

பேருந்து புறப்படுவதற்கு  நடத்துனர் பஸ்ஸின் முன்புறம் ஒரு இரும்புக்கம்பியைக் கொண்டு அதற்கான துளையில் விட்டுச் சுற்றுவார்.அப்போதுதான் பஸ் புறப்படும்.ஊருக்குள் நுழையும்போது காவல் நிலையத்தில் நிறுத்தி உள்ளே சென்று கையெழுத்துப் போட்டு விட்டு வருவார்(ஊரை விட்டுப் போகும்போது உண்டோ என நினைவில்லை)

பஸ்ஸில் ஜன்னலோர இருக்கைக்கு எனக்கும் என் அக்காக்களுக்கும் சிறு யுத்தம் வரும்.ஆனால் எப்போதும் வெல்வது நானே---ஏனெனில் நான் அனைவர்க்கும் இளையவன்.ஓட்டுனருக்கு அருகில் ஒரு இருக்கை உண்டு .அதில் அநேகமாக யாராவது பெரிய மனிதர்கள் அமர்ந்து கொள்வார்கள்.தனியாகப் பயணம் செய்த ஓரிரு சமயங்களில் அங்கு ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்ததுண்டு!ஓட்டுனர் சாப்பிடும் கடலை வகையறாவில் எனக்கும் பங்கு உண்டு!

பஸ் பயணத்தின் ஒரு முக்கியமான சுவாரஸ்யம் இருப்புப்பாதையைக் கடக்கும் இடம்-லெவல் க்ராஸ்ஸிங்.அந்த கேட் மூடியிருக்கும்போது ரயில் அந்த இத்தைத் தாண்டிச் சென்ற பின் கேட் திறக்கும் வரை பஸ் அங்கே நிற்கும்.பஸ் நின்றவுடன் அங்கு வியாபாரம் செய்யும் பலர் வெள்ளரிப் பிஞ்சு(சாத்தூர் வெள்ளரி பிஞ்சு மிகப்பிரசித்தம்),கொய்யா, திராட்சை,முறுக்கு போன்ற பொருள்களை பஸ் அருகே வந்து விற்க ஆரம்பித்து விடுவார்கள்.பயணிகளில் சிலர் வாங்கிச் சுவைக்கவும் செய்வர்.பல பயணிகள் கீழே இறங்கி நிற்பர்.சொல்லி வைத்தாற்போல் பலருக்கு ஒரே நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் எனத் தோன்றி சிறிது தூரம் சென்று பொட்டல் வெளியில் நீர் பாய்ச்சி வருவார்,சிலர் தாமதமாகச் சென்று ,ரயிலின் சப்தம் கேட்டு அவரமாக ஓடி வருவர். ஆனால் வண்டி புறப்படுமுன், த்துனர் பயணிகள் எண்ணிக்கையைச் சரி பார்க்காமல் ரைட் சொல்லவே மாட்டார்.இந்த மாதிரி நேரத்து நிகழ்வுகளைமெட்ராஸ் டு பாண்டிச்சேரிஎன்ற படத்தில் மிக நகைச்சுவையாக் காட்டியிருந்தனர்.நாகேஷும்,கருணாநிதியும் கலக்கியிருந்தனர்.

பஸ் ஓரிடத்திலிருந்து புறப்பட்டுச் செல்கையில் நடத்துனர் டிக்கட் விவரங்களைப் படிக்க ஓட்டுனர் எழுதிக் கொள்வார்.சில நேரங்களில் யாராவது பயணிகள் நடு வழியில் இறங்க விரும்பினால் அவர்களை இறக்கிய பின்” அண்ணே,கிருஷ்ணன் கோவில் இ வி(EV) ஒண்ணு எளுதிக்குங்க” என்பார்அதாவது “எறக்கம் வழியிலே” என்று பொருள்!

சிறுவனாயிருக்கும்போது பயணத்தில் வண்டியின் வெளிக்காட்சிகளை பார்ப்பது சுவாரஸ்யமென்றால்,இளைஞனான பின் உட்காட்சிகளே சுவாரஸ்யம் நிறைந்தவையாக மாறி விடுகின்றன!

(இன்னும் வரும்)

18 கருத்துகள்:


  1. பயணங்கள் பற்றிய தொடர் சுவாரஸ்யமாக இருக்கிறது. அப்போதெல்லாம் பேருந்துகள் கரியை உபயோகித்து ஓட்டப்பட்டதும் சரக்குந்துவில் இருப்பதுபோல் ஓட்டுநர் அமரும் இடம் பிரிக்கப்பட்டிருந்ததும், அங்குள்ள இருக்கைகளில் மிக முக்கியமானவர்கள் என கருதப்பட்டோர் அமர வைக்கப்பட்டதும்,உள்ளே இருக்கைகள் ஒரு பக்கம் பக்கவாட்டில் நீண்டும், ஓட்டுனருக்கு பின்னால் உள்ள இருக்கைகள் எதிரும் புதிருமாய் இருந்தது நினைவுக்கு வருகிறது. தொடருங்கள் பழைய நினைவுகளில் உலா வரலாம்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பதிவை படித்த போது நினைவை மீட்டுப்பார்க்க சொல்லுகிறது... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. செல்லத் தாத்துவின் அனுபவக் குறிப்பு !அருமை !மேலும்
    சிறப்பாகத் தொடரட்டும் நகைச்சுவை உணர்வுகள் :))

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் தங்கள் பயணம்(பதிவு) தொடர்வது கண்டு மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யமான தொடர். படிக்கும் போதே மலரும் நினைவுகள். பஸ்ஸில் இரும்புக்கம்பியைக் கொண்டு துளையில் விட்டுச் சுற்றும் காலத்திற்கு அடுத்த காலத்தச் சேர்ந்தவன் நான். படிக்கும் போது லெவல் கிராஸ் அனுபவங்கள் கண்ணில் வந்து போயின. பஸ்ஸை ஓரம் கட்டிக் கொண்டு டிரைவரும் கண்டக்டரும் மாறி மாறி இன்வாய்ஸ் எழுதியது ஒரு காலம். பெரும்பாலும் அப்போது டி.வி.எஸ் பஸ்சுகள் தான். அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்..
    த.ம.5

    பதிலளிநீக்கு
  6. பயண அனுபவம் நலமுடன் செல்கிறது தொடர்கிறேன் ஐயா. தங்களுக்கு நேரமிருப்பின் எமது குடிலுக்கு வருகை தரவேண்டுகிறேன்.
    அன்புடன்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  7. நினைவுகளை மீட்டிப் பார்க்க வைக்கும் தொடர்...
    தொடருங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. உங்கள் சிறுவிரல் பிடித்து
    உங்களோடு பயணம் செய்த அனுபவம் ஐயா...

    பதிலளிநீக்கு
  9. இனிய நினைவுகள்....

    தொடர்ந்து பயணிப்போம்!

    பதிலளிநீக்கு