தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 06, 2014

இலவசங்களும் நாடும்!

திருவள்ளுவர் ஒரு முறை ஒரு அரசனைக் காணச் சென்றிந்தார்.அரசன் அவரை வரவேற்று நன்கு உபசரித்தான்.அவர் தன்னைப் பற்றியும் தன் நாட்டைப் பற்றியும் உயர்வாக நினைக்க வேண்டும்,பேச வேண்டும் என்று மன்னன் எண்ணினான்.நாட்டைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.தேரில் சென்றபோது,பல இடங்களில், அன்னதானச் சத்திரம் என்றெழுதிய கட்டிடங்கள் காணப்பட்டன.மக்கள் வரிசையில் உள்ளே சென்று கொண்டும்,பலர் வெளியே வந்துகொண்டும் இருந்தனர்.


மன்னன் சொன்னான்”திருவள்ளுவரே! இவைதாம் அன்னதானச் சத்திரங்கள்.மக்களில் யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து இலவசமாக உணவருந்திச் செல்லலாம்.தினமும் ஏராளமான மக்கள் வந்து உணவருந்துகின்றனர்”.

வழியில் பல இடங்களில் ’மருத்துவ மனை’ என்றெழுதப்பட்ட கட்டிடங்கள் இருந்தன.மன்னன் சொன்னான்”இவையெல்லாம் இலவச மருத்துவ மனைகள்.மக்களுக்கு இங்கு எல்லா வித சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப் படுகின்றன!தினமும் ஏராளமான மக்கள் வந்து பயனடைகின்றனர்”

மன்னன் வள்ளுவரைத் தன் படை அணிவகுப்புக்கும்,ஆயுத சாலைக்கும் அழைத்துச் சென்றான்.அவற்றைக் காட்டிச் சொன்னான் ”பாருங்கள் என் படைகளை.கணக்கற்ற தேர்,யானை,குதிரை,காலாட்கள் நிறைந்த படைகள்.இதோ,எத்தனை விதமான நவீன ஆயுதங்கள், பாருங்கள்.”

நாட்டைச் சுற்றிப் பார்த்தபின் மன்னன் கேட்டான்”வள்ளுவரே,என் நாட்டில் பசியென்று வந்தவர் எல்லோருக்கும் இலவச உணவு அளிக்கப் படுகிறது;பிணியால் வருந்துபவர்க்கு, இலவச மருந்து,சிகிச்சை அளிக்கப் படுகிறது.பகைவர்களை நடுங்கச் செய்யும் படை இருக்கிறது.நாட்டின் சிறப்புக்கு வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்?”

வள்ளுவர் சிரித்தார்.பின் சொன்னார்,”மன்னா!உன் நாட்டில் அன்னதான சத்திரங்கள் உள்ளன.இது எதைக் காட்டுகிறது?பசித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தானே?இலவச மருத்துவ மனைகள் உள்ளன.இது எதைக் காட்டுகிறது?பிணி அதிகம் இருக்கிறது என்பதைத்தானே!ஒப்பற்ற படைகளும்,படைக் கலங்களும் உன்னிடம் உள்ளன. அப்படியென்றால்,உனக்குப் பகைவர் உள்ளனர் என்றுதானே பொருள்?இது எப்படி நல்ல நாடாகும்?

”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”


(மிக்க பசியும்,ஓயாத நோயும் அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடை பெறுவதே நாடாகும்).

இலவசங்கள் இல்லாத நாடு!

மன்னன் தலைகுனிந்தான்.
 :

16 கருத்துகள்:

  1. கதை வழியே குறளை அழகாக விளக்கியுள்ளீர்கள் அன்பரே.

    பதிலளிநீக்கு
  2. பதிவுக்கு முதல் கருத்து முனைவரிடமிருந்து!மிக்க மகிழ்ச்சி.
    நன்றி குணசீலன் ஐயா!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்!

    பதிலளிநீக்கு
  4. நல்ல விளக்கம். இன்றைய அரசியல்வாதிகளுக்குப் புரியுமா?

    பதிலளிநீக்கு
  5. நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அழகிய விளக்கம்...

    நல்லதொரு குறள்...

    பதிலளிநீக்கு
  6. குறளை கதையாக்கிய விதம் சிறப்பு! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அன்று : வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.

    இன்று : விலையில்லாப் பொருள் என்ற வார்த்தையைத் தந்தவரை வாழ்த்தி உயர்த்தும் தமிழ்நாடு.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
  8. இலவசங்கள் இல்லாத நாடு!
    குறளோடு இணைந்த காட்சி ...அருமை...

    பதிலளிநீக்கு
  9. //இலவசங்கள் இல்லாத நாடு!
    மன்னன் தலைகுனிந்தான்.//

    ஆனால் இங்கோ ?

    பதிலளிநீக்கு
  10. அருமையான விளக்கம் !மனம் கவர்ந்த பகிர்வுக்கு என் பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் ஐயா .

    பதிலளிநீக்கு
  11. அன்னைக்கே வள்ளுவர் 'போட்டு வாங்குவதில்' கெட்டிக்காரராய் இருந்து இருக்கிறாரே !
    த ம 3

    பதிலளிநீக்கு
  12. அசத்திட்டீங்க சார். இப்படி ஒரு விளக்கக் கதை படிச்சது இல்லை. நிச்சயம் ஆசிரியர்கள் இந்தக் கதையை அறிந்து கொள்ள வேண்டும். இதே போல மேலும் சில திருக்குறள் கதைகளை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. ஆகா... அழகான விளக்கம்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  14. நாங்கள் பேச நினைப்பதெல்லாம் நீங்கள் எழுதிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு