ப்ளஸ்ஸில் இரு நாட்களுக்கு முன் வலைப்பதிவுப் பக்கமே நான் வருவதில்லை என்று நானே வருத்தப்பட்டு எழுதியிருந்தேன்!(வேறு யார் வருத்தப்படப் போகிறார்கள்?!)
அப்போதுதான் அதற்கான சரியான தீர்வு பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதியது நினைவுக்கு வந்தது!
இதோ அந்த இடுகை!
************
//சில நாட்களாக ஒரு எண்ணம்!
பதிவு வேலையை வெளியாரிடம் ஒப்படைத்தால் என்ன?!(outsourcing)
நானும் பதிவே கதி என்று இருக்கக் கூடாது,பதிவும் நல்ல விதமாகத்தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால்,அவுட்சோர்சிங் தான் சிறந்த வழி எனத் தோன்றுகிறது!
எனவே இந்தப் பதிவின் மூலம் இதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறேன்!
விண்ணப்பிவர்களுக்கான அடிப்படைத்தகுதிகள்-
1)தமிழ் நன்கு எழுதப் படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். எழுத்துப் பிழைகள் அனுமதிக்கப் படும்!
2)நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்து அவற்றிலிருந்து பதிவுக்கான செய்தியை உள்வாங்கிக் கொள்ளும் திறன்.
3)பத்திரிகைகளில் வெளியாகும் சுவாரஸ்யமான விஷயங்களை வெட்டி ஒட்டிப் பதிவு எழுதும் திறமை!
4)மொக்கைப் பதிவாக இருந்தாலும் சுண்டியிழுப்பது போல் தலைப்பு வைக்கும் ஆற்றல்!
5)திரைப்படப் பாடல்கள் பற்றிய அறிவு,நடிகர்கள் பற்றிக் கிசு கிசுக்கள் தெரிந்துகொள்ளுதல்,திரைப்படம் பார்க்காமலே கூட விமரிசிக்கும் திறமை,இவையெல்லாம் அவசியம்!
6)பதிவுக்கு நிறையப் பின்னூட்டங்கள்,வருகைகள்,திரட்டிகளில் வாக்குகள் வரவழைப்பதற்காக,பல பதிவுகளைத் தொடர்தல்,வாக்களித்தல், பின்னூட்டமிடுதல் ஆகியவை திறம்படச் செய்தல்!முக்கியமாக டெம்ப்ளேட் பின்னுட்டங்கள் இடுதல்!
கீழ்க்கண்டவை வேலை முறைமைகள்---
1)ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்கு மட்டுமே.பணியின் தரத்தைப் பொறுத்து வேலை நீட்டிப்பது அமையும்.
2)குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு 30 பதிவுகள் எழுதப்பட வேண்டும்!
3) ஒரு பதிவுக்கான குறைந்த பட்ச வாக்குகள்,தமிழ் மணத்தில் எட்டும், இண்ட்லியில் 25உம் நிச்சயம் கிடைக்க வேண்டும்.
4)ஒரு மாதத்துக்கான சராசரி வருகைகள்(ஹிட்ஸ்),குறைந்த பட்சம் 6000 இருக்க வேண்டும்!
5)இந்த வலைப் பதிவின் தரத்தைக்(அப்படியொன்று இருக்கிறதா?!) குறைக்கும் படியான இடுகைகள் வெளி வரக் கூடாது!
6)சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
ஒப்பந்த ஊதியம்விவரங்கள்—
1)முறைமைகள் வழுவாமல் செயல் படும் பட்சத்தில், ஒவ்வொரு ஞாயிறன்றும், மயிலை, கையேந்தி பவனில்,இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப் படும்!
(யாரப்பா அங்கே முணு முணுக்கறது,ஞாயிறு கையேந்தி பவன் லீவு என்று)
2)வருகைகள் 6000த்துக்கு மேற்படும் மாதங்களில் ஊக்க போனஸாக,ஒரு ஞாயிறன்று, மயிலை சங்கீதா/சரவணபவன்/கற்பகாம்பாள் மெஸ் எங்காவது,இரவு டிஃபன் சாப்பிட்டுக் கொள்ளலாம்!
3)தமிழ் மணம் ராங்கில் 100க்குள் வந்தால்,பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும்.
விண்ணப்பம் ஏதும் அனுப்பாமலே 31-04-2011 அன்று மாலை 5.00 மணிக்கு மரினா, காந்தி சிலைக்கு அருகில் நடக்கும் நேரடி நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்! அனைவருக்கும் ஒரு பொட்டலம் சுண்டல் வழங்கப்படும்!//
******************
நல்ல ஐடியாதானே?