ராஜி பள்ளிக்கூடத்தில் பாடிய பாட்டு பற்றி சொல்லும்போதே அவளது வேறு ஒரு பாட்டு அனுபவம் பற்றியும் சொல்லியாக வேண்டும்.அந்தக்காலத்திலெல்லாம்,திருமணத்தன்றே சாந்தி முகூர்த்தமெல்லாம் கிடையாது.முக்கியமான காரணம் மணமாகும் போது பெரும்பாலும் பெண் வயதுக்கு வந்திருக்க மாட்டாள்.ராஜியைப் பொருத்தவரை,திருமணத்துக்கு முன்பே வயசுக்கு வந்து விட்டாலும்,அவளது சாந்திகல்யாணம் நான்கு மாதம கழித்துத்தான் நடந்தது.ஏப்ரலில் கல்யாணம்;ஆகஸ்டில் சாந்திகல்யாணம்..வயதென்னவோ அந்த ஜூலையில்தான் பதினான்கு முடிந்திருந்தது.எனவே அவள் ஒரு சிறுமிதானே?
நவராத்திரி சமயத்தில் யார் வீட்டிலெல்லாம் கொலு வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் அண்டை அயலில் உள்ள வீட்டுக்காரர்களை கொலுவுக்கு அழைப்பது வழக்கம்.இப்போதும் அந்த வழக்கம் இருக்கிறது என்றாலும்,ஏதாவதொரு குறிப்பிட்ட ஒரு நாளில்தான் அழைக்கிறார்கள்.அன்று தினமும் அழைப்பார்கள்.தினமும் ஏதாவது தின்பண்டமும் உண்டு.விஷயத்துக்கு வருவோம்.
ராஜியின் கணவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர்.
திருவல்லிக் கேணியில் அவரை அறியாதவர்கள் கிடையாது.
(அவர் பிரமாதமாகக் கொலு வைப்பார்.அதைப்பற்றிப் பின்னால் பார்ப்போம்.).எனவே ராஜியையும் பலர் கொலுவுக்கு அழைத்திருந்தனர்.ராஜியும் சாக்குப்போக்கு எதுவும் சொல்லாமல் போய் வந்தாள்.அப்படி அழைத்திருந்த வீடுகளில் ஒன்று ஒரு சங்கீத வித்வானுடையது.அங்கு ராஜி போயிருந்த போது அந்த வித்வானும் வீட்டில் இருந்தார்.அந்த வீட்டு மாமி அவரிடம்”ப்ரொஃபசர்.நாராயணனோட ஆத்துக்காரி” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.நவராத்திரியின் போது வீட்டுக்கு வரும் பெண்களைப் பாடச் சொல்வது வழக்கம்.அதுவும் ராஜி ப்ரொஃபசர் நாரயணின் பார்யா.எனவே அவர் அவளை ‘ஒரு பாட்டுப் பாடும்மா’ என்றுகேட்டார்.
முன்பே சொன்னது போல் யாராவது பாடச்சொன்னால் ராஜி தயக்கம் ஏதுமின்றி உடனே பாடி விடுவாள்.அவர் சொன்னவுடன் ஒரு பாட்டுப் பாடி விட்டாள்.
அதைப்பற்றி இப்போது நினைத்தாலும்,ராஜி பெருமை கொள்கிறாள்;வெட்கமும் அடைகிறாள்.
அவ்வளவு பெரிய வித்வான் தன்னைப் பாடச்சொல்லித் தான் பாடியதில் பெருமை,
சங்கீதத்தை முறையாகப் பயிலாத தான் அவர் முன் பாடினோமே என்ற வெட்கம்.
அந்த வித்வான் ஜி.என்.பி. என்று அழைக்கப்படும் திரு.ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்கள்!
மறக்க முடியாத நினைவுதானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக