தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 22, 2009

ஒரு வரலாறு

அத்தியாயம்-3--இன்றும் அன்றும்.
----------------------------
20-04-2009.
திங்கட்கிழமை.
ராஜி அந்த வார முடிவில் வரும் உள்ளூர் செய்திதாளைப் பிரித்தாள்.

இரண்டாவது பக்கத்தில் இருந்த அந்த, மறைவுச்செய்தி அவள் கண்ணில் பட்டது.

“உமா சுந்தரம்,வயது,90,ஏப்ரல் 10ஆம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.கர்னாடக இசையில் தேர்ச்சி பெற்ற அவர் இறுதி வரை குழந்தகளுக்குத் திருப்பாவை,திருவெம்பாவை மற்றும் பக்திப்பாடல்களை கற்பித்து வந்தார்.13 வயதிலேயே இசைக்காகப் பதக்கம் பெற்ற அவர் என்றுமே மேடைக் கச்சேரி செய்ய வேண்டும் என்று விரும்பியதில்லை.”அவரது குடும்பத்தினர் பற்றிய விவரமும்,தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

ராஜி அந்தப் புகைப் படத்தை உற்றுப் பார்த்தாள்.”அவளா இவள்?’மனதுக்குள் கேள்வி எழுந்தது.வயதான அப்பெண்மணியின் இடத்தில் தன் பள்ளித் தோழியை இருத்திப் பார்க்க இயலவில்லை.தான் இப்போது எப்படி இருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தாள்.தன் புகைப்படத்தைப் பார்த்தால் தன் இளமைக்காலத்தோழிகள் எவருக்கேனும் யாரென்று தெரியுமா என யோசித்தாள்.சிரிப்பு வந்தது.

மீண்டும் பத்திரிகையைப் பார்த்தாள்.ஒரு முடிவுக்கு வந்தாள்.

“ஹலோ!நமஸ்காரம்.நான் ராஜி பேசறேன்.நேத்திப் பேப்பர்லே உமா சுந்தரம் மறைவுச் செய்தி பார்த்தேன்.நான் 1931-32 ல மைலாப்பூர் நேஷனல் கர்ள்ஸ் ஹைஸ்கூல்ல படிச்சேன்.அப்போ எங்கூட உமான்னு ஒரு பொண்ணு படிச்சா.அப்பொவே ரொம்ப நன்னாப் பாடுவா.இது அந்த உமாவான்னு தெரிஞ்சுக்கலான்னுதான் ஃபோன் பண்ணினேன்.”

மறு முனையிலிருந்து பதில் வந்தது.”நான் உமாவோட தம்பி பேசறேன்.நாங்க மைலாப்பூர்லதான் இருந்தோம்.ஆனா அக்கா எந்த ஸ்கூல்ல படிச்சாங்கறது எனக்கு நினைவில்லை.எங்க அப்பா பேர் ராமாராவ்.ஏதாவது உங்களுக்கு ஞாபகம்வரதா?”

ராஜி யோசித்தாள்.அந்தப் பெண்ணின் தந்தை பெயர் நினைவில் இல்லை.”இல்லை.நினைவுக்கு வரல்லை”

ஃபோன் உரையாடல் முடிந்தது.

ராஜிக்கு அந்த நாள் நினைவுக்கு வந்தது.
அன்று.

விஞ்ஞான ஆசிரியர் அன்று பாடம் எதுவும் நடத்தப் போவதில்லை என்று அறிவித்து விட்டு,வகுப்பில் யாருக்கெல்லாம் பாடத்தெரியுமோ,அவர்களெல்லாம் பாடலாம் என ஒரு அறிவிப்பைச் செய்தார்.

உடனே ராஜியின் அருகில் இருந்தபெண்”சார்,ராஜி நன்னாப் பாடுவா” என்று சொல்ல அவரும் ராஜியைப் பாடும்படி பணித்தார்.ராஜிக்கு எப்போதுமே பலர் முன்னிலையில் பாடுவதில் சங்கோஜம் எதுவும் கிடையாது.ஊரில் இருக்கும்போது கூட,யார் வீட்டுக்காவது போகும்போது அங்குள்ளவர்கள் பாடச்சொன்னால் உடனே பாடி விடுவாள்.இத்தனைக்கும் அவள் முறையாக இசை பயின்றதில்லை.யாரோ சொல்லிக் கொடுத்த ஓரிரு பாட்டுக்கள்தான் தெரியும்.

ராஜி பாடத்தொடங்கினாள்.

பாடும்போது மற்ற மாணவிகளின் முகங்களைப் பார்த்தாள்.
கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த பெண்ணின் முகத்திலே ஒரு எரிச்சல் தெளிவாகத்தெரிந்தது.

ராஜி பாடி முடித்ததும் அந்தப் பெண்,பைரவி ராகத்தில் “தனயுனி ப்ரோவ” என்று கம்பீரமாகப் பாட ஆரம்பித்தாள்.
ராஜி பிரமித்துப் போனாள்.’என்ன பிரமாதமாகப் பாடுகிறாள் இந்தப் பெண்’ என வியந்து போனாள்.
இந்தப் பாட்டுக்கு முன் தான் பாடியதெல்லாம் ஒரு பாட்டா என நாணிப் போனாள்.
தான் பாடும்போது அந்தப் பெண் எரிச்சலடைந்ததன் காரணம் புரிந்து முகம் சிவந்து போனாள்.
ராஜியின் இந்த உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட அருகில் இருந்த தோழி சொன்னாள்”அவ,பாட்டுக் கத்துக்கறான்னா”

அந்தப் பெண்ணின் பெயர் உமா.

இன்று

அந்த உமாதானா இவள்?தன்னுடன் படித்த எத்தனை பேர் இப்போது உயிருடன் இருக்கப் போகிறார்கள்.

ராஜி ஒரு பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்

3 கருத்துகள்:

  1. நண்பருக்கு,
    சத்தமில்லாமல் ஒரு வரலாற்றை எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்-வாழ்த்துக்கள்! தங்கள் முகவுரையைப் பார்த்தவுடனேயே இதை (உடனே) தொடரவில்லையே என்று நினைத்ததுண்டு. பரவாயில்லை, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரீங்க.வாழ்க்கையை ஒட்டாத கதைகளே கிடையாது என்ற என் நம்பிக்கை மீண்டும் நிரூபணமாகிறது.

    பதிலளிநீக்கு
  2. உண்மைக்கதை உண்மையிலேயே சுவராஸ்யமாக உள்ளது. இயக்குனர் சிகரம் திரு பாலசந்தர் அவர்களின் திரைப்படத்தை பார்ப்பதுபோன்ற பிரமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. @R.S.KRISHNAMURTHY,

    //வாழ்க்கையை ஒட்டாத கதைகளே கிடையாது என்ற என் நம்பிக்கை மீண்டும் நிரூபணமாகிறது.//
    சரியாகச் சொன்னீர்கள்.நம்மைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளிலிருந்து எத்தனையோ கதைகள் கிடைக்கும் அல்லவா.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    @வே.நடனசபாபதி,
    சிகரம் பற்றிக் குறிப்பிட்டு,என்னை மேலே பறக்க விட்டிருக்கிறீர்கள்.

    வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு