தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஏப்ரல் 14, 2009

ஒரு வரலாறு

(எனது 5-3-09 தேதியிட இடுகையின் தொடர்ச்சி)
(இது ஒரு உண்மை சரிதம்.ஆயினும்,சில முக்கியமான மனிதர்களின் பெயரும்,சில இடங்களின் பெயரும் மாற்றப்பட்டிருக்கின்றன.)

அத்தியாயம்-1
-------------
பயணம் ஆரம்பம் என்று சொன்னேனல்லவா.ஒரு பயணத்திலேயே தொடங்குகிறேன் இந்த வரலாற்றை.

அந்தத் தொடர் வண்டி புகையைக் கக்கிக்கொண்டு மதராஸ் எழும்பூர் நிலையத்தை விட்டுப் புறப்பட்டது.ஆம்.அப்போது மதராஸ்தான்.அப்போது புகை விட்டுக்கொண்டுதான் ரயில் செல்லும்.டீசல் எஞ்சின் எல்லாம் கிடையாது.சன்னல் பக்கம் அமர்ந்திருந்தால் கண்களில் கரி விழுவது நிச்சயம்.பயணம் முடிந்து இறங்கும்போது சட்டை கருப்பாக இருப்பது உறுதி. ஆனால் இப்போது போல் கூட்டமெல்லாம் கிடையாது.இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு செய்தாலும் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் நிலை கிடையாது.ஆம்;அது 1950 ஆம் ஆண்டு,ஜூன் மாதம்.இப்போது எல்லோரும் எங்காவது போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்.அநேகர் தேவையே இல்லாது பயணித்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் பல நேரம் எழுகிறது. இன்றைய மக்கள்தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் அல்லவா?சரி விஷயத்துக்கு வருகிறேன்.

அந்த ரயிலில் பயணம் தொடங்கிய பலரில்,ஒரு குடும்பம். சமீபத்தில் அக்குடும்பத்தலைவர் இறந்து விட்டிருந்தார். கணவனை இழந்த,31 வயதே நிறைந்த,32 நடக்கும் பெண்;அவளது குழந்தைகள்-முதல் பையன்,ராமசாமி(வயது 16),அடுத்த பெண்,ரமணி(13),அடுத்தபெண்,ரமா(11),அடுத்தபெண்,மகா(7),
கடைக்குட்டி சுந்தர்(5).அந்தக் கடைசிப் பையனைத்தவிர,மற்ற அனைவரும் அந்த இழப்பின் தாக்கத்தில் இருந்தனர். அப்பயணத்தை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியவன் அந்த சிறுவன் ஒருவன்தான்.மற்ற அனவருக்கும் அந்தப்பயணம் ஒரு தெளிவில்லாத எதிர்காலத்தின் தொடக்கமாகவே தோன்றியது.ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள்.

அந்தத்தாய்;இந்த ஐந்து குழந்தைகளையும் எப்படி வளர்த்துப் பெரியவர்களாகி,அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகிறோம் என்பதே புரியாத தாய்.அவர்களை பார்க்கும்போதெல்லாம் அடி வயிற்றில் பந்து சுருளும் தாய்.பயம். எதிர்காலம் பற்றிய பயம்.முழுக்க முழுக்க வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்,கணவன் ,மாமியார்,குழந்தைகளைத் தவிர வேறெதையும் கருத்தில் கொள்ளாது இத்தனை ஆண்டுகளைக் கழித்து விட்ட தாய்.இப்படி,நிர்க்கதியாக விட்டு விட்டுப் போய் விட்டாரே என்று எண்ணும்போதே,அழுது அழுது வறண்ட கண்களில் மீண்டும் கண்ணீர் சுரக்கிறது.மற்றவர் பார்க்காவண்ணம் கண்களைத்துடைத்துக் கொள்கிறாள்.அப்படியே கண்களை மூடியபடி இருக்கையில் சாய்கிறாள்.அவள் மனம் மெட்ராசுக்கு அவள் வந்த காரணத்தை,அந்த ஆரம்ப நாட்களைப் பற்றி நினைக்கிறது.

6 கருத்துகள்:

  1. நன்றாக வந்திருக்கிறது, ரொம்ப சின்னதா இருக்கோன்னு தோனுது ( அல்லது இன்னும் நிறய வேண்டும் - நன்றாக இருக்கிறதன்னு எடுத்துக்கலாம்

    பதிலளிநீக்கு
  2. நன்றி சுந்தரராமன் அவர்களே,
    உங்களது முந்தைய பின்னூட்டத்துக்குப் பின்,உடனடியாக எழுதி வலையேற்ற வேண்டும் என்று அவசரமாக எழுதினேன்.அடுத்த அத்தியாயத்தைச் சிறிது பெரியதாகவே எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. உணமைக்கதையின் ஆரம்பமே படிப்போரின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. அந்த காலத்தில் விகடனில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கதை தொடராக வரும்போது தொடரை படித்துவிட்டு அடுத்த இதழ் எப்போது வரும் என காத்திருப்பார்களாம். அதுபோல் நானும் தங்களின் அடுத்த பதிவை எதிர்நோக்கியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி நடனசபாபதி அவர்களே,

    உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது.அந்த வேகத்திலேயே அடுத்த பகுதியை எழுதிவிட்டேன்.
    மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. அன்பின் பித்த்ன - அருமையாகச் செல்கிறாது கதை. ஆமா ஆறு குழந்தைகள் இல்லையா - ஐந்து தானே இப்பதிவில் வருகிறது ..... சரி - கடைக்குட்டியைத் தவைர மதராஸ் எழும்பூரில் புறப்பட்ட அவ்வண்டியின் பயணத்தை மற்ற எவரும் ரசிக்க வில்லை. அவ்வண்டி புறப்பட்ட அன்று நான் பிறக்கவே இல்லை.

    அந்தத் தாயின் மனநிலை நன்கு விவரிக்கப் பட்டிருக்கிறது. கதை சொவதில் திறமை பளிச்சிடுகிறது.

    வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. cheena (சீனா) கூறியது...

    //அன்பின் பித்த்ன - அருமையாகச் செல்கிறாது கதை. ஆமா ஆறு குழந்தைகள் இல்லையா - ஐந்து தானே இப்பதிவில் வருகிறது ..... சரி - கடைக்குட்டியைத் தவைர மதராஸ் எழும்பூரில் புறப்பட்ட அவ்வண்டியின் பயணத்தை மற்ற எவரும் ரசிக்க வில்லை. அவ்வண்டி புறப்பட்ட அன்று நான் பிறக்கவே இல்லை.

    அந்தத் தாயின் மனநிலை நன்கு விவரிக்கப் பட்டிருக்கிறது. கதை சொவதில் திறமை பளிச்சிடுகிறது.

    வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//
    பிறந்தது ஆறு.ஆனால் பிழைத்தது ஐந்துதான்.
    நன்றி.

    பதிலளிநீக்கு