முன்பெல்லாம் எனக்குச் சில கனவுகள் அடிக்கடி வரும்.
ஒரு கனவில் நான் மேலே பறந்து கொண்டிருப்பேன்.தரையிலிருந்து எளிதாக மேலே கிளம்பிப் பறக்க ஆரம்பிப்பேன்.பறந்து கொண்டே பறவைப் பார்வையாய் கீழே இருக்கும் கட்டிடங்களை,மனிதர்களையெல்லாம் பார்த்துப் பெருமிதம் அடைவேன்,என் திறமை குறித்து.மனிதர்கள் என்னக் காட்டி எதோ பேசிக்கொள்வர்.பறப்பது மிக எளிதான செயலாக இருக்கும்.இரண்டு கைகளயும் பக்கவாட்டில் நீட்டி,துடுப்பு தள்ளுவது போல் முன்னிருந்து பின்னாகத் தள்ளி,காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுவேன்.மேலே செல்ல மேலிருந்து கீழாகவும்,கீழே இறங்கக் கீழிருந்து மேலாகவும் கைகளை அசைத்துப் பறப்பேன்.விழிப்பு வந்த பின்னும் அந்தப் பறக்கும் உணர்ச்சி நீடிக்கும்.பறந்து பார்க்கலாமா என்று யோசிக்க வைக்கும்.
அந்தக்கனவு வருவது நின்று பல ஆண்டுகளாகி விட்டது.முன்பு ஏன் வந்தது?பின்னர் ஏன் வருவதில்லை?அந்த வயதிற்கே உரிய,ஆசைகள் காரணமா?வாழ்க்கையில் மேலே மேலே செல்ல வேண்டும் என்ற ஆவல் காரணமா?மற்றவர் செய்யாத எதையாவது செய்ய வேண்டும் என்ற இச்சை காரணமா?வயதான பின்,வாழ்க்கையின் எதார்த்தங்கள் புரிந்த பின், பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தரையில் காலூன்றி நின்ற பின் அக்கனவு நின்று போனதா?எனக்குத் தெரியவில்லை.
இன்னொரு கனவு-சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது வழியில் கிழே கிடக்கும் ரூபாய் நாணயத்தை குனிந்து எடுப்பேன்.அப்போது அருகில் இன்னொரு நாணயம் இருக்கும் அதை எடுக்கும் போது இன்னொன்று,இப்படி எடுக்க எடுக்க நாணயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.கனவு கலைந்து விடும்.இக்கனவும் பல ஆண்டுகளுக்கு முன் நின்று போனது.இதன் பொருள் என்ன?அந்த நாட்களில் எனக்குப் பணத்தாசை இருந்தது என்பதா?அப்படியானால்,தங்கக் காசுகள் நிறைந்த ஒரு புதையல் கிடைப்பது போல அல்லவா கனவு வந்திருக்க வேண்டும்?சில்லறைத் தனமான கனவு ஏன்?இப்படியிருக்குமோ?பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும்,அதைச் சிறிது சிறிதாகத்தான் சேர்க்க முடியும் என்ற அறிவும்தான் இக்கனவோ?இப்போது இக் கனவு வராமைக்குக் காரணம்-பணத்துக்கு நான் கொடுக்கும் மிகக் குறைந்த முக்கியத்துவம்?இந்த வயதில் எனக்கு என்ன வேண்டும்?உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இடம் இவை போதாவா?
ஆனால் வரவேண்டிய வயதில் வரவேண்டிய ஒரு கனவு எனக்கு வந்ததே இல்லை.என் வாலிபப் பருவத்தைப் பற்றித்தான் சொல்கிறேன்.என் நண்பர்கள் எல்லாம் தங்கள் கனவில்'அவள் வந்தாள், இவள் வந்தாள்'என்றெல்லாம் சொல்வார்கள் .ஆனால் என் கனவில் ஒரு நாள் கூட ஒரு மாலாவோ நீலாவோ வந்ததில்லை.நானும் படுக்கப் போகும் முன், எனக்குத் தெரிந்த அழகான பெண்களைப் பற்றி நினைத்துக் கொண்டே படுப்பேன்.ஆனாலும் கனவு வந்ததில்லை.ஒரு நாள் ஒரு பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டு,இன்று அவளுடன் கனவில்பேச வேண்டும் என்று அழுத்தமாக நினைத்துக் கொண்டு படுத்தேன்.தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)
இதற்கு என்ன காரணம்?இயற்கையிலேயே எனக்குப் பெண்களுடன் பேசுவதில் இருந்த வெட்கம்,பயம்,தயக்கம் இவை காரணமோ?ஆழ்மனத்தில் இருந்த இந்த உணர்வுகள் கனவுகளையும் தடுத்திருக்குமோ?எது எப்படியோ?இந்தத் தயக்கமே எனக்கு, அலுவகத்தில் சக பெண் ஊழியர்களிடம், 'பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்'என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.காலம் செல்லச் செல்ல அந்தப் பயமும்,தயக்கமும் நீங்கி விட்டன.
இப்போதெல்லாம் பெரும்பாலும் கனவுகளே வருவதில்லை.வந்தாலும் அர்த்தமற்ற,கனவுகள்தான்.அவை விழிக்கும்போது நினைவிருப்பதில்லை.
இன்றைய இளைஞர்களைக் கனவு காணச் சொல்கிறார் டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள்-தங்கள் எதிர்காலம் பற்றி,அத்துடன் இணைந்த நாட்டின் எதிர் காலம் பற்றி,ஒரு வளமான,வலிமையான புதிய பாரதம் பற்றி.
கனவுகள் பலிக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக