தொடரும் தோழர்கள்

திங்கள், ஏப்ரல் 15, 2013

ஈஸ்வர்,அல்லா,ஏசு!



ஒரு மரணம்.

ஒருவர் தன் இரு மகள்களைத் தனியே விட்டு மறைந்து விடுகிறார்.

இருவரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

உறவினர்களும் நண்பர்களும் துக்கம் விசாரித்துச் செல்கின்றனர்.

ஒரு பெரியவர்,அக்குடும்பத்துக்கு நீண்ட நாள் நண்பர் செல்லுமுன் சொல்கிறார்” எதற்கென் றாலும் என்னை அழையுங்கள்.நான் உடனே வந்து விடுகிறேன்”

இறைவனும் இதைத்தானே சொல்கிறான்!

நம் புராணக்கதைகள் இதை அழகாக விளக்கி விடுகின்றனவே!

முதலை வாயில் மாட்டிக் கொண்ட யானையின் கதறலைக் கேட்ட கடவுள்,உடன் வந்து துயர் தீர்க்கிறான்.

கௌரவர் சபையில் மானபங்கப் படுத்தப்படும் பாஞ்சாலி  கதறும்போது எங்கிருந்தோ ஆடை அனுப்பிக் காக்கிறான்!

ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகிறது.

தெருவில் ஒருவன் பாடியவாறு செல்கிறான்---

”ஓட்டைகைக்கும் அத்தினத்துக்கும் ஓராயிரம் காதம்
 ஆனாலும் நடக்குதய்யா சேலை வியாபாரம்”

மன்னன் அவனை அழைத்துப் பொருள் கேட்கிறான்.

அவன் சொல்கிறான்” துவாரகைக்கும்(ஓட்டை கை),அத்தினாபுரத்துக்கும் இடையே ஓராயிரரம் காத தூரம்;ஆனாலும் பாஞ்சாலி அழைத்ததும் கண்ணன்,அங்கிருந்து சேலை அனுப்பி விட்டான்”

இவை வெறும் கதையென்றேகொண்டாலும் உள்ளிருக்கும் தத்துவம் ஒன்றுதான்!

அழைத்தால் வருபவன் அவன்.

நாம் உணர வேண்டும்-அவன் எப்போதும் நம் அருகில்தான் உள்ளான் என்பதை.

ஊரை விட்டுச் செல்கிறோம்.

நம் கையில் கைபேசி இருக்கிறது;நாம் குடும்பத்த்யுடன் எப்போது வேண்டுமென்றாலும் பேச முடிகிறது.

குடும்பம் அருகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அது போலத்தான்,அவனும் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான்.

யானையோ பாஞ்சாலியோ வேறு யாரோ அழைத்தாலும் அவனுக்குக் கேட்கிறது.

அழைப்பில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

மாணிக்கவாசகர் சொல்வது போல் ’சிக்கெனப்’ பிடிக்க வேண்டும்.

அவன் நம்முடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையே நமக்கு ஒரு பெரும் சக்தியாக இருக்கிறது.

இது மதங்கள் கடந்த ஒரு நம்பிக்கை.

எவரேனும் என்னைப்பற்றிக்கேட்டால் சொல்லுங்கள்,நான் அருகில்தான் இருக்கிறேன். அழைத்தால் உடன் வருவேன் என்று”-------(குரான் 2:186)

if god be for us,who can be against us”-(bible romans 8:31)

இதைத்தான் தமது “Power of positive thinking” என்ற நூலில் வலியுறுத்துகிறார் டா.நார்மன் வின்சென்ட்  பீல் அவர்கள்.

என்ன பிரச்சினை வந்தாலும் இந்த வாக்கியத்தை மனதில் கொண்டு நம்பிக்கையுடன் செயல் பட்டால்,பிரச்சினையைத் தீர்க்கலாம் என்கிறார்.

ஆம்!

அவன் அருகில்தான் இருக்கிறான்.

நமக்காகத்தான் இருக்கிறான்.

கூப்பீட்டவுடன் வருபவன்தான்.

நம்பிக்கை நமக்கு வேண்டும்!

அதுவே முக்கியம்.