தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 31, 2015

சிக்குன்னு சிக்கிக்கிச்சு சிக்கன்!



இரவு மணி ஏழு
சென்னைபித்தனைத் தொலைபேசியில் அழைத்தார் பார்த்தசாரதி
கணினி முன் இருப்பதாகச் சொன்னார் செ.பி.
அப்போது பார்த்தசாரதிக்குக் குதிரை கனைக்கும் சத்தம் போல் கேட்டது
என்ன கனைப்புச் சத்தம் கேட்கிறது, நீங்கள் குதிரைவளர்க்கிறீர்களாஅல்லது பக்கத்தில் வேறு யாராவதா?
நாய்,பூனை,ஆடுதான் ஒருவர் வளர்த்தார் அது அனைவரும் அறிந்ததுதானே!
சாப்பிட்டாகி விட்டதா
சாப்பிடும் நேரம்தான்
இட்லிதானே?!
சிரித்தார் செ பி.

பார்த்தசாரதி தூங்கும்போது பாதித் தூக்கத்தில் குதிரை கனைக்கும் சத்தம் கேட்டது. சிக்கன் பிரியாணிக் குதிரைதான்!கனைத்தது;கட்டுக்கடங்காமல் குதித்தது

நீதானா அது?ஏன் கனைக்கிறே?
மீண்டும் கனைப்பு,இம்முறை குச்சியில் கட்டிய காரட்டைப் பார்த்து.
நீ எதுவும் பேசாம அடம் பிடிச்சா,நான் தேசிங்கு ராஜனைக் கூப்பிடப்போகிறேன்
”யாரு?நம்ம வாத்தியாரையா?அவர் நிம்மதியா கடற்கரையில் உறங்கட்டும்” குதிரை பேசிற்று!

”சரி!நான் இந்தக்காரட்டை எத்தனை நாள்தான் பாத்துக்கிட்டே இருப்பேன்.தள தளன்னு ஃப்ரெஷா இருக்கு.அவுத்துக் கொடுங்க.நீங்க வேற டைரக்சன் பிழை பண்ணியிருக்கீங்க!கேரட் சிக்கனாக மாறி  குச்சியில் தொங்க”ன்னு எழுதிட்டு கேரட்டைத் தொங்க விட்டுச் சிக்கனைத் தனியாப் போட்டிருக்கீங்க!எழுத்துக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லையே” என்றது

அப்படிப் பண்ணச் செலவாகுமே;நாங்க என்ன ஷங்கரா? என்றார்

சரி நானே பண்ணிக்கிறேன்;முதல்ல கேரட்டைகுடுங்க என்று வாங்கிக் கடித்து விழுங்கியது,எப்புடி? கேரட்,குச்சி பாலிசி நொறுங்கிப்போச்சா என்று கெக்கெலித்தது.இப்ப சிக்கனை எடுத்துக் கயிற்றிலே கட்டுங்க என ஆணையிட்டது 

அபச்சாரம்!அநாச்சாரம்! சிக்கனையெல்லாம் கையாலேயே தொட மாட்டேன்!

ஓ நீங்களும் அந்த நாமகிரி டைப்பா?சிக்கன் பிரியாணின்னு அருமையா கதை மட்டும் எழுதலாமோ?எல்லாம் ஹிட்டுக்காகத்தானே?

பின்ன துட்டா கிடைக்கப் போகுது?

சரி!நீங்க கண்ணை மூடிக்குங்க.நான் பத்து எண்ணிட்டுப் பெரிசாக் கனைப்பேன்;அப்பத் திறங்க என்றது

கண் திறந்தால் எல்லாம் மாயா!

காலை எழுந்தவுடன் செ பி யிடம் சொன்னால் விழுந்து விழுந்து சிரித்தார்

பிறகு மாலை 5 மணிக்குப் போன் செய்து புதுப்பதிவு  பாருங்க,அசந்து போயிடுவீங்க என்றார்

அந்த மாயக் குதிரையின் விஷமம் திகைக்க வைத்தது!



டிஸ்கி:மேலாளர் நரசிம்மன் பேசாமல் வெங்காயத்தையே(சாம்பார்) குதிரை முன் கட்டித் தொங்க விட்டிருக்கலாம்..சிக்கனைக் கட்டி(காட்டி) எதுவும் நடக்கவில்லை

பகவானே!மீண்டும் பார்த்தசாரதி!

வெள்ளி, அக்டோபர் 30, 2015

சிக்கன் பிரியாணி-முடிவு

குறிப்பிட்ட நாள் வந்தது. 5 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டதால் 7 மணிக்கே உபேந்த்ரா கரூர் வந்தாகிவிட்டது. ஏற்றுமதி நிறுவன வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய மூன்று நபர்களை சந்தித்துவிட்டு 10 மணிக்கு கிளை விசிட்டிற்காக கரூர் கிளையில் நுழைந்தார். அந்த மேலாளர் சிறந்த நிர்வாகி. தொழிற்சங்க பிரச்சனை உள்ள அந்தக் கிளையின் பணியாளர்களை தன் வசமாக்கி உபேந்த்ராவை வசீகரித்தார்.

ஒரு காபி கூட ஆஃபர் பண்ண வில்லை. நைச்சியமாக பேசி நல்ல பேரை சம்பாதித்தார். பத்து மணிக்கு நாமக்கல் பயணம். அசோகன்திறமையாக செயல்பட்டு உணவு இடைளைக்கு நாமக்கல் என்று இலக்கை குறியிட்டு வெற்றிகரமாக அடைந்தான்.

நரசிம்மன் புத்திசாலி. நாமக்கல் நுழைவு வாயிலிலேயே மோட்டர் சைக்கிளில் விவசாய அபிவிருத்தி அதிகாரியுடன் காத்திருந்தார். அசோகன்அதை அறிவான். உபேந்த்ரா நரசிம்மனை காரில் ஏற்றிக் கொண்டார். விவசாய அதிகாரியை அந்த ஊரில் உள்ள பெரிய கோழிப் பண்ணைக்கு நரசிம்மன் அனுப்பினார்.

நரசிம்மன், 12 மணிக்கே வீடு செல்லும்  ஆஞ்சநேயர் கோயில் குருக்களை 12.45 வரை காக்க வைத்தார். குருக்கள் ஆஞ்சநேயருக்கு அணிவித்த மாலையை உபேந்த்ராவிற்கு அணிவித்து மரியாதை செய்தார். சற்றும் எதிர்பாராத வகையில் சுந்தருக்கும் ஒரு மாலையை அணிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். நரசிம்மன் தன்னுடைய மைத்துனனிடம் இரவல் வாங்கி வந்த பொலராய்ட் கேமராவில் உபேந்த்ராவை ஆஞ்சநேயருடன் சேர்த்து படம் பிடித்து வெளிவந்த வண்ணப்பதிவை அவரிடம் அளித்தார். உபேந்த்ரா பரவசம் அடைந்தார்.







சனி பகவானிடம் இருந்து தப்பிக்க பக்தர்கள் ஆஞ்சநேயரை நாடுவார்கள். அவரை விட்டு வெளியே வந்தவுடன் அசோகன்வடிவில் சனி நரசிம்மரை கெட்டியாக பிடித்துக் கொண்டது. பண்ணை விசிட்டை விவசாய அதிகாரி திறம்பட முடித்து வைத்தார். பண்ணையின் அளவு,

சுகாதாரம், உபேந்த்ராவை அதிசயிக்க வைத்தது. சரியாக 1½ மணி அன்று குரு வார மானதால் இராகு காலம் ஆரம்பித்தது. சனியுடன் ராகுவும் நரசிம்மனை ஆட்கொண்டார்.

அசோகன்மெதுவாக உபேந்த்ராவை அணுகி சார் வீட்ல தான் சாப்பாடு ஏற்பாடு செய்திருக் கிறார் என்று குழைய, உபேந்த்ரா ஒரு நல்ல சைவ உணவை எதிர்பார்த்து நரசிம்மன் வீட்டை அடைந்தார். நரசிம்மன் நாமகிரியை உபேந்த்ராவிற்கு அறிமுகப்படுத்தினார். அவள் கண்கள் சிவந்திருப்பதை உபேந்த்ரா கவனிக்கத் தவறவில்லை. சுந்தர் முன்பு ஒரு முறை நரசிம்மன் குடும்பத்தை சென்னையில் சந்தித்துள்ளான். அவனைப் பார்த்ததும் நாமகிரியின் கண்கள் ஆறாகின.

உபேந்த்ராவையும் அசோகனையும் நரசிம்மன் தனி அறைக்கு அழைத்துச் சென்றான். விவசாய அதிகாரி சிக்கன் கொண்டு வந்தவுடன் சாப்பிட ஆரம்பிக்கலாமென்று நரசிம்மன் பவ்யமாக உபேந்த்ராவிடம் வேண்டிக் கொண்டான். 


வாட் நான்சென்ஸ்! என்று உபேந்த்ரா அசோகனையும், நரசிம்மனையும் பார்த்து   கர்ஜித்தார்.

சுந்தர் அதற்குள் வேறொரு அறையில் ருசியான வெங்காய சாம்பாரை தரமான வாழைக்காய் வறுவலுடன் ருசித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது “மனைவியின் சம்மதமின்றி வீட்டில் அசைவ உணவை பரிமாறும் கணவனை விவகாரத்து செய்ய”  சட்டம் ஏதேனும் உண்டா என்று கேட்டுக் கொண்டிருந்தாள் நாமகிரி.

சிறிது நேரத்தில் நரசிம்மன் வேகமாக உள்ளே வந்து பாஸ் உன்னை அவசரமாக கூப்பிடறார் என்று சொல்ல சுந்தர் கை அலம்பிக் கொண்டு ஒடினான். பாயசம் சாப்பிடுங்க என்று டம்பளரில் கொண்டு வந்த நாமகிரியை பார்த்து “வர்றேன்” என்ற சைகை காண்பித்து விட்டு சுந்தர் மறைந்தான். உபேந்த்ரா தனியாக அறையில் உட்கார்ந்திருந்தார். யூ டூ சுந்தர் என்று சுந்தரை டிராமிட்டாக கேட்டு விட்டு சிரித்தார்.

உங்கள் சம்மதம் அவர்களுக்கு உண்டு என்று நினைத்தேன் என்றான் சுந்தர்.

நான் சுத்த சைவம் அல்ல. ஆனாலும் ஒரு பெண்ணை அழ வைத்து அவளுடைய வீட்டில் பேராசைக் கணவனை திருப்திப்படுத்த சிக்கன் சாப்பிடும் மிருகம் அல்ல என்று உபேந்த்ரா சுந்தரிடம் அமைதியாக சொன்னார்.

நம்ம மதிய உணவை சேலத்தில் சாப்பிடலாம் என்று புறப்பட்டார்

உபேந்த்ரா. நாமகிரியை பார்த்து உன் விருப்பத்திற்கு மாறாக “அசைவம் சாப்பிடும் யாரையும் விருந்தாளியாக உன் வீட்டில் அனுமதிக்காதே” என்று அறிவுறுத்தினார். நாமகிரி கையில் வைத்திருந்த பாயசத்தை உபேந்த்ராவிடம் நீட்ட அதை பருகிவிட்டு ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்தி சேலம் புறப்பட்டார் உபேந்த்ரா.

விவசாய அதிகாரி சிக்கன் பார்சலுடன் உள்ளே நுழைந்தார். உபேந்த்ரா அர்த்த புஷ்டியுடன் சுந்தரை பார்த்து சிரித்தார். சேலம் புறப்பட்ட காரில் அசோகன்இல்லை. அவருடைய லக்கேஜ் மட்டும் பயணித்தது.

நரசிம்மனை சுமந்து குச்சியில் கட்டிய சிக்கனை துரத்திய குதிரை இலக்கை நெருங்கிய போது ஒரு சிறு பள்ளத்தில் கால் இடறி தடம் புரள சிக்கன் வானுயர பறந்தது. அதை ஒரு ராக்ஷஸ கழுகு கவ்விக் கொண்டு சென்றது.

--பார்த்தசாரதி..
.......................

டிஸ்கி:
மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆசார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ  (தைத்திரீய உபநிடதம்)

விருந்தோம்பலின் பின் சுயநலம் மறைந்திருந்தால் அது பயனற்றது;(அவர்களுக்கு ஏதோ பயன் விளையுமானாலும்)
அதுமாதிரி நேரங்களில் மோப்பக்குழையும் அனிச்சமான அதிதியும் விருந்தளிப்பவரின்/ சார்ந்தவரின்  சூழ்நிலையை,மனஓட்டத்தைப் புரிந்து கொள்வது சிறப்பானது;அதுவே இங்கு நடந்தது!

டிஸ்கிக்குள் டிஸ்கி:
புராண காலத்தில் காச்யபரின் மனைவி அதிதி என்பவள்.12 ஆதித்தர்களின் தாய்; உபேந்திரனும் அதிதியின் மகன்!

இங்கோ,உபேந்திரனே அதிதி!




வியாழன், அக்டோபர் 29, 2015

சிக்கன் பிரியாணி! 1





உபேந்த்ரா வளர்ந்து வரும் வங்கியின் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட மதராஸ் மண்டலத்திற்கு பொது மேலாளராக 1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றார். அப்போது அந்த மண்டலத்தில் 75 கிளைகள் இருந்தன. இந்த வங்கி பெரிய வங்கி களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உள்ளன. அவைகளை களைந்து மாநில அளவில் குறைந்த பட்சம் 6வது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்குடன் நிறுவப்பட்ட புதிய அலுவலகம் இது. 


உபேந்த்ரா கெட்டிக்காரர் தான். ஆனால் இதற்கு முன்னால் அவர் வகித்த பதவிகள் வியாபார அபிவிருத்தியை சார்ந்தவை அல்ல. வங்கியின் கேப்பிட்டல் மற்றும் வைப்பு நிதிகளின் கணிசமான பகுதிகளை இருப்பு வங்கி (RBI) முடக்கி விடும். 80களில் இருந்த எஸ்.எல்.எர்., சி.ஆர்.ஆர், விகிதங்கள் கிட்டத்தட்ட 40  சதவிதங்களை தாண்டி விடும். சுருக்கமாக, 100 ரூபாய் வைப்பு நிதி கிடைத்தால் வங்கி 60 ரூபாய்களைத் தான் கடனாக கொடுக்க முடியும் எஞ்சிய 40 ரூபாய்களை இருப்பு வங்கி ரிஸ்கில்லாத அரசாங்க முதலீடுகளில் முடக்கி விடும். (இதில் வங்கியில் ரொக்கமாக இருக்கும் பணமும் அடக்கம்) வாடிக்கையாளரின் நலமும் இந்த முறையால் காக்கப்படும். பெரும்பாலான வங்கிகளில் இந்த நுட்பமான வேலைகளை துல்லியமாக பணியாற்ற பம்பாயில் தனி அலுவலகங்களை அமைக்கும். அத்தகைய பிரத்யேக அலுவலகத்தில் தலைமை பதவியேற்று சக்கைப்போடு போட்டவர் உபேந்த்ரா. 

மதராஸ் மண்டலம் இதற்கு முன்பு ஆந்திரா மண்டலத்தின் கண்காணிப்பின் கீழ் முடங்கி கிடந்தது. கடன் வசதிகளை அவரகளின் சம்மதத்துடன் தான் வழங்க முடியும். கிளை மேலாளருக்கு இந்த கடன் வழங்கும் அதிகாரம் கூட மண்டல மேலாளருக்கு இல்லை. இந்த மந்த நிலையை மாற்றத்தான் புதிய மண்டலங்கள் அதிக அதிகாரங்களுடன் உருவாகின. தற்பொழுது மிகப் பெரிய கடன்களுக்கு மட்டுமே ஆந்திரா அதிகாரிகளை அணுகினால் போதும். (நம் சிக்கன் பிரியாணி கதைக்கு இந்த வங்கியின் நடை முறையைப் பற்றி இவ்வளவு அறிந்து கொண்டால் போதும்).


80களில் வங்கிக் கணக்குகள் ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடியும். கணினிள் இல்லாத காலம் அது. வியாபார இலக்குகளை கிளை மேலாளர்கள் டிசம்பருக்குள் எட்ட வேண்டும். பதவி உயர்வு நல்ல போஸ்டிங் இத்யாதிகளுக்கு வியாபார அபிவிருத்தி ஒரு முக்கிய காரணி. 


நமது நாயகன் (இல்லை இல்லை உத்தம வில்லன்) நாமக்கல் கிளையின் மேலாளர் நரசிம்மன். சாத்வீகமான குடும்பத்தில் பிறந்தவர். மனைவி நாமகிரி. ஆச்சாரமிக்கவர். பூஜை

புனஸ்காரங்களைத் தவறாமல் செய்வார். நாமகிரி தூய உள்ளத்தால் அவர்கள் இல்லம் தெய்வம் வாழும் வீடாக திகழ்ந்தது.

உபேந்த்ரா பார்ப்பதற்கு S.V.ரங்காராவ் மாதிரி கௌரவமாக தோற்றம் அளிப்பார். பறந்த நெற்றி உயரமான தோற்றம் கண்ணாடி அணிந்த கண்கள். அவரது தோற்றத்தை பொலிவூட்டும். ஆனால் சில சமயங்களில் அகெளரவமாக நடந்து கொள்வார். (இந்த கதையில் அவருக்கு GuestRole தான்) தன் திறமையை மற்றவர்கள் ஆச்சர்யப்படக் கூடிய அளவில் வெளிப்படுத்தும் ஆற்றலும் திறமையும், உபேந்த்ரா பெற்றிருந்தார். 


சுந்தர் என்ற அதிகாரியை, தனக்கு முந்தைய மண்டல மேலாளரின் பரிந்துரைப் பேரில் நம்பிக்கைக்கு பாத்திரமான இடத்தில் வைத்துக் கொண்டார். வளர்ச்சியின் குறியீடுகளை கணக்கீட்டு அலசுவதில் சிறப்பான தேர்ச்சி பெற்றவர் சுந்தர். அவர் முழுத் திறமையும் காட்டி மேலாளர் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்படுத்த திறமையாக செயலாற்றினார். சுந்தரை உற்றுப்பார்த்தால் பாதாள பைரவி N.T.ராமாராவ், சாயல் தோன்றி மறையும். எடுப்பான நாசி. அகலமாக நெற்றி. கண்ணாடி போட்டால் சிவப்பு பாக்யராஜ். 


அசோகன் என்பவரை மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமித்தார். நல்ல பர்சனாலிட்டி. மடிப்பு கலையாத முழுக்கைச் சட்டையை நன்கு தைக்கப்பட்ட பேண்டில் அழகாக இன்ஸர்ட் பண்ணியிருப்பார். தோல் பெல்ட் இத்தாலியன் ஷூ வெளியில் போனால் ரே-பான் சன் கிளாஸ் ஆபீஸ் பெட்டியில் நாட்போட்ட டைதயாராக இருக்கும். வேண்டியபோது அணிவார். பெண்கள் போல் அந்நிய நாட்டு டால்கம் பௌடர் பெட்டியில் இருக்கும். சென்டின் மணம் சற்று தூக்கலாக வீசும். பேசினால் மெல்லிய பூண்டு வாசனை இழை யோடும்.  சுவிங்கம், சுபாரி மென்று சமாளிப்பார். 
முதலில் பழகுவதற்கு சுவாரஸ்மாக தோன்றினாலும் அந்த நிலை சில நாட்களிலேயே மாறிவிடும் கெட்டிக்காரனின் பொய்யும் புளுகும் எவ்வளவு  நாளைக்கு?


அந்த வருடம் எல்லோரும் திறம்பட செயல்பட்டதால் மண்டலத்தின் ஒட்டு மொத்த வியாபார இலக்குகளில் முக்கிய காரணிகள் நவம்பர் 3வது வாரத்திலேயே எட்டி யாகிவிட்டது. கணக்கர்களின் தொழிற்சங்கமும் ஆபீஸர்களின் சங்கமும் பிரச்சனைகளை கிளப்பாமல் ஒத்துழைத்தனர். அடுத்த வருடத்திய வியாபார இலக்குகளை டிசம்பர் 1 வாரத்திற்குள் நிர்ணயித்துவிட உபேந்த்ரா விரும்பினார். சுந்தர் தேனீ போல் செயல்பட ஆரம்பித்தான். டிசம்பர் 15க்குள் ஒவ்வொரு கிளை மேலாளரையும் நேரடியாக சந்தித்து, நிகழ் வருடத்திய வளர்ச்சியை பரிசீலித்து, அடுத்த வருடத்திய இலக்குகளை நிர்ணயிக்க உத்தேசம். மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இதற்கான மீட்டிங்கள் நடத்த முடிவாயிற்று. இந்த நான்கு நகரங்களை சுற்றி 52 கிளைகள் இருந்தன. 


மீதி 23 கிளைகளின் இலக்குகளை மதராசில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்வதாக உத்தேசிக்கப்பட்டது. இந்த பணிக்காக உபேந்த்ரா ,சுந்தர், அசோகன்மூவரும் உபேந்த்ரா வின் காரிலேயே பயணிப்பதாக திட்டம். முக்கியமான சில சிறுநகரங்களில் வாடிக்கை யாளர்களையும் சந்திப்பதாக உத்தேசம். கரூர் ,நாமக்கல் ,ஈரோடு ,திருப்பூர், ஆகிய கிளைகள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டன .நாமக்கல் கிளை வாடிக்கையாளர்களின் சந்திப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த நரசிம்மன் அதை தன் வளர்ச்சிக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். உபேந்த்ராவின் நம்பிக்கைக் குரியவராக ஆக வேண்டும் என்ற தணியாத தாகத்தை தீர்க்க விழைந்தார்.உடனே  எஸ்.டி.டியில் அசோகனை தொடர்பு கொண்டு திட்டம் தீட்டினார். 


ஹலோ யார்அசோகனா, நான் நரசிம்மன் பேசறேன். எப்படி இருக்கீங்க?  நீங்களும் பாஸோட நாமக்கல் வரங்கே இல்லையா”. 

 நானும் சுந்தரும் வரோம். அன்னிக்கு காத்தால திருச்சிலேந்து கரூர், அங்கே 11 மணிக்கு புறப்பட்டு 1 மணிக்குள்ள நாமக்கல்” 

சரி, சரி,

லஞ்ச நாமக்கல்ல வச்சுக்கிற மாதிரி, பிளான் 

ஜமாய்ச்சுடலாம்.

பாஸுக்கு சிக்கன்னா ரொம்ப பிடிக்கும். நாமக்கல்ல பெரிய கோழிப் பண்ணை முதலாளி களெல்லாம் நம்ம வாடிக்கையாளர்களாச்சே. 

எங்க வீட்ல தான் சாப்பாடு. சிக்கன் பிரியாணி எல்லாம் வேணாம்.

அசோகன் பதிலுக்கு ஒரு தனி ரூம்ல சிக்கன் வரவழைச்சு சர்வ் பண்ணிடப்பா. அப்ப தான் அவர் குஷியாயிடுவார்.

முடியாதுப்பா. என் ஓய்ஃப் ஒத்துக்க மாட்டா. வடை பாயாசத்தோட சைவ உணவு தான் அவ பரிமாற விரும்புவா”.

நாமக்கல் சிக்கன்னா அவருக்கு நாக்கு ஊறும்பா.

அந்த சுந்தர் வேற வரான். அவன் அசைவம் எல்லாம் ……

அவனா முக்கியம் உனக்கு என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அப்பறம் ன் இஷ்டம் என்று அசோகன்முடித்தான்.

இரவு நாமகிரியிடம் இதைப் பற்றி நரசிம்மன் பிரஸ்தாபித்த போது அவள் திரும்பி படுத்துக் கொண்டு தலையணையை நனைத்தாள். பிறகு காலை எழுந்து என்ன இரண்டு நாள் எங்க அண்ணா ஆத்துக்கு அனுப்பிடுங்கோநான் திருப்பூர்லே இருந்துட்டு வரேன். இந்த கண்றாவி எல்லாம் முடிஞ்சவுடனே உங்க வாய்க்கும்  வீட்டுக்கும் டெட்டால் போட்டு சுத்தம் பண்ணிட்டு கூப்பிடுங்க வரேன் என்றாள். நரசிம்மன் புழுவாக நெளிந்தான். அதே சமயம் பதவி உயர்வு என்ற கேரட் சிக்கனாக மாறி குச்சியில் தொங்க அதை குதிரையில் பறந்து துரத்தினார். 






----தொடரும்……..

புதன், அக்டோபர் 28, 2015

அகலிகை மீண்டும் கல்லானாள்!

நேற்றைய “மார்க்கண்டேயன் கிழவனானான்”என்ற பதிவு, புராணக்கதையில் சிறிது டிங்கரிங் செய்து எழுதியது.

இதேபோல் இராமாயண இதிகாசத்தில் சிறிது டிங்கரிங் செய்து புதுமைப்பித்தன் அவர்கள் “சாப விமோசனம்” என்ற சிறுகதை ஒன்று எழுதினார்.

அற்புதமான கதை!

அந்தக் கதையைக் கவிதை வடிவில் தந்திருந்தேன்  எனது பதிவில்,2011 இல்.

அதை மீண்டும் இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

அகலிகை ஏன் கல்லானாள்?
--------------------------------


காத்திருந்தது அந்தக் கல் காலம் காலமாய்
சாத்திரம் போற்றும் நாயகன் காலுக்காய்
வேதமறிந்த முனிவன் தன் கோபத்தில்
பேதையின் நியாயம் மறந்து சபித்தனன்
இந்திரனின் வஞ்சகத்தால் மனம் கல்லாச்சு
சொந்த மணாளனின் சாபத்தால் உடலும் கல்லாச்சு!
வந்தான் ஒரு நன்னாளில் தசரதன் மைந்தனங்கு
தந்தான் மீண்டும் உரு பேதை அகலிகைக்கு
அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் வருந்தினான்
எவளுக்குமே இக்கதி வருவது தவறென்றான்.
ஆண்டுகள் பல கடந்தன,அகலிகை காத்திருந்தாள்
மீண்டும் அப்புண்ணியனைக் கண்களால் காண்பதற்கு
இலங்கையில் போர் வென்று திரும்பும் வழியினிலே
கலங்கிப் பின் மனம் தெளிந்த சீதையுடன் அங்கு வந்தான்
நடந்த நிகழ்வுகளைத் தனித்திருந்த போது வினவ
மடந்தை சீதையும் அனைத்தும் உரைத்தனளே.
தீக்குளித்த கதை கேட்டாள் அகலிகை உடலெல்லாம்
தீயினால் சுட்டது போல் கொடுந்துன்பம் எய்தினாள்
”இராமனா சொன்னான் உன்னைத் தீக்குளிக்க
இராமலே போனதோ நியாயம் அவனிடமும்
தன் மனைவி என்றதுமே நியாயம் வேறாயிற்றோ
என்ன கொடுமையிது ”என்றே அரற்றினாள்
கண் சிவந்தாள்,உள்ளம் மறுகினாள்,உடல் இறுகினாள்
பெண்ணவள் மீண்டும் கல்லாக மாறினாள்! 

(கரு;புதுமைப் பித்தனின் ‘சாப விமோசனம்’ சிறுகதை)

செவ்வாய், அக்டோபர் 27, 2015

மார்க்கண்டேயன் கிழவனானான்!




வாமதேவரே!”

”யார்! மிருகண்டு முனிவரா? என்னைத் தேடி வந்தது என் பாக்கியம்”

”வாமதேவரே!உங்கள் குமாரி  யாழ்தேவி பூப்படைந்து விட்டாளே;மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?”

“ஆம்! என் தகுதிக்கேற்ற இடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”

“அது விஷயமாகத்தான் வந்தேன். எங்கள் குல அன்பு மணி விளக்கான என் மகன் மார்க்கண்டேயனுக்கு உங்கள் மகளைப் பெண் கேட்டு வந்தேன்”

திகைக்கிறார் வாமதேவர்

“என்ன வாமதேவரே? பதிலே இல்லை”

“மிருகண்டு முனிவரே ! உங்கள் மகன் வரம் பெற்று  மூன்று ஆண்டுகளாயிற்று;இன்னும் எத்தனை காலம் சென்றாலும் அவன் பதினாறு வயதுச் சிறுவனாகவே இருப்பான்!  யாழ்தேவிக்குத்  தற்போது வயது 15.  முப்பது ஆண்டுகள் கழிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.என் மகளுக்கு 45 வயது;மார்க்கண்டேயனுக்கு அதே 16.கணவன் மனைவியாக எப்படிச் சேர்ந்திருக்க முடியும்?காண்பவர்கள் நகைக்க மாட்டார்களா?”

மிருகண்டு சோர்ந்து போகிறார்.

வாமதேவர் தொடர்கிறார்”தப்பாக நினைக்க வேண்டாம்.உங்கள் மகனுக்குத் திருமணம் செய்யும் ஆசையை விட்டு விடுங்கள்.அவன் என்றும், பிரம்மச்சாரியாய்த்தான் இருக்க முடியும்.ஒரு வேளை உங்களைக் காட்டிலும் சிறந்த மகரிஷியாகவும் ஆகலாம்”
......
......

இப்படித்தான் எங்கும்;நண்பர்கள் விலக,சிறுவர்கள் புறக்கணிக்க,கன்னியர் நகைக்க, வாழ்க்கை நரகமாகிறது 

ஆண்டுகள் ஓடுகின்றன!

இதோ.....





என்றும் பதினாறாய் இளமை வரம் பெற்ற மார்க்கண்டேயன்

அன்றொருநாள் சிவனெதிரே வந்தான்!

மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்த முக்கண்ணன்

இரு கண் திறந்தவனைப் பார்த்தான்.

”மகனே!

”எங்கு வந்தாய் ?என்ன புதுப் பிரச்சினை?”

பணிந்தான் மார்க்கண்டேயன் பரமனை

“என்ன வரம் தந்தீர்?ஏன் தந்தீர் இந்த வரம்?”

பதினாறு வயது இது பரிதாப வயது

சிறுவனும் இல்லை,நான் குமரனும் இல்லை

இங்கும் இல்லை அங்கும் இல்லாத ஒரு சோகம்!

நண்பர்கள் வளர்கிறார்கள்,மணம் புரிகிறார்கள்

தந்தையாகிறார்கள், பாட்டனாகிறார்கள்;

வேடிக்கை பார்த்தபடி நிற்கிறேன் 

நான்!

என்னிலும்   மிக இளையவர் கூட

இன்று குடும்பம் குழந்தை என்று 

நன்கு அழுந்தி விட்டனர் வாழ்க்கையில்.

பலர் இறக்கின்றனர்,பலர் பிறக்கின்றனர்

வாழ்க்கை வட்டம் சுற்றுகிறது

நான் நிற்கிறேன் மையப் புள்ளியாய்!

மாற்றமும் இல்லை,முன்னேற்றமும் இல்லை!

ஓடி விளையாடச் சிறுவர்கள் மறுக்கக்

கூடிக் களித்திடக் கன்னியரும் வெறுக்க

என்ன செய்வேன் நான்?

என்ன பயன் இந்த வாழ்க்கை

சாகா வரம் ஒன்று தந்தீர்

என்றும் பதினாறாக

ஆனால் நானோ செத்துச் செத்துப் பிழைக்கிறேன்

நாள் தோறும்!

வேண்டாம் இந்த வரம்;அல்ல அல்ல சாபம்!

வாழவிடும் என்னை!

சிரித்தான் சிவ பெருமான்

பதினாறு வயதிலேயே

பல்லாண்டு கழித்த பின் வந்ததோ இந்த ஞானம்

பதினாறிலேயே கழிந்த ஆண்டுகள் பத்தேழு!

தந்தேன் அவற்றை உனக்கு.!

……………….

மார்க்கண்டேயன் கிழவனானான்!